Classroom Relationship: ஓர் ஆசிரியர் எப்படி நினைவில் நிற்கிறார்? | டீனதிகாரம் 5

பதின்ம வயதினரின் உலகமும் உளவியலும்
Classroom Relationship: ஓர் ஆசிரியர் எப்படி நினைவில் நிற்கிறார்? | டீனதிகாரம் 5
Updated on: 
4 min read

ஒரு பள்ளியில் மாணவர்களுடன் பேசுவதற்காக நான் சென்றிருந்த ஒருநாள் இன்னும் நினைவில் இருக்கிறது. பல்வேறு வகுப்புகளுக்குச் சென்று மாணவர்களிடம் பேசினேன். அவர்களுடன் உரையாடினேன். சில மதிப்பீடுகளையும் (Assessment) மேற்கொண்டேன்.

அப்போது ஒரு வகுப்பில், பல மாணவர்கள் ஒரே மாதிரியான சில விஷயங்களைச் சொன்னார்கள். “இந்த ஆசிரியர் சரியில்லை…”, “அவங்க இப்படிப் பண்றாங்க…”, “அது எங்களுக்கு பிடிக்காது…” என்று ஆசிரியர்களைப் பற்றிய குறைகளை அடுக்கினர்.

பின்னர் ஆசிரியர்களிடம் பேசினேன். அங்கே கிடைத்த கதை முற்றிலும் வேறாக இருந்தது. “மேம், இந்தப் பசங்க இப்படித்தான் இருக்கிறார்கள். ஒழுக்கம் இல்லை. எதையும் கேட்க மாட்டார்கள். எங்களிடம் ஆக்ரோஷமாக (Aggressive) நடந்து கொள்கிறார்கள். எங்களுடைய பொருட்களை உடைக்கிறார்கள். எங்களை மதிப்பதில்லை” என்று ஆசிரியர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.

அவர்களிடம் பேசும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது: ஆசிரியர்களும் குழந்தைகளும் கஷ்டபடுகிறார்கள்.

ஆசிரியர்களின் விரக்திக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். வேலை அழுத்தம், தனிப்பட்ட வாழ்க்கையின் சுமைகள், நிர்வாக அழுத்தங்கள், போதுமான அங்கீகாரம் கிடைக்காதது, பதவி உயர்வு பற்றிய ஏமாற்றங்கள், சம்பளம் குறித்த அதிருப்தி, பல ஆண்டுகளாகச் சேர்ந்து வந்த தொழில்சார் மனச்சோர்வு... இவை அனைத்தும் ஒரு மனிதரின் மன பலத்தை (Emotional Resources) பாதிக்கலாம்.

பல ஆசிரியர்கள் காலையில் தங்களுடைய தனிப்பட்ட துயரங்களை ஒரு பையில் போட்டுக்கொண்டு வருவது போலவே வேலைக்குச் செல்வார்கள். “இன்று எப்படியாவது இந்த நாளை முடித்துவிட வேண்டும்” என்ற மனநிலையில்கூட வகுப்புக்குள் செல்ல வேண்டியிருக்கலாம்.

அதைப் புரிந்துகொள்ளாமல் ஆசிரியர்களிடம், “நீங்கள் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். குழந்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று மட்டும் சொல்வது நியாயமல்ல.

ஓர் ஆசிரியர் நல்ல நோக்கத்துடன் ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயன்றாலும், பள்ளியின் விதிமுறைகள், பெற்றோர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முழுமையான தகவல் இல்லாத சூழ்நிலைகள் அவரது முடிவுகளை சிக்கலாக்கலாம். நல்ல நோக்கம் இருந்தாலே எதிர்பார்த்த விளைவு கிடைத்துவிடாது. அதே நேரத்தில், மாணவர்களின் பக்கத்தையும் நாம் மறந்துவிட முடியாது.

ஏனெனில், மாணவர்கள் ஒரு பாதிக்கப்படக்கூடிய குழு. ஓர் ஆசிரியருக்கும் மாணவருக்கும் ஒரே அளவிலான அதிகாரம், அனுபவம் அல்லது தேர்வு செய்யும் வாய்ப்பு இருப்பதில்லை.

ஓர் ஆசிரியருக்கு ஒரு கடினமான நாளை கையாளும் பக்குவம் இருக்கக் கூடும். ஆனால், ஒரு மாணவர் தினமும் அதே வகுப்புக்குத் திரும்ப வேண்டும். ஆசிரியருடன் பேசுவதில் இருந்து விலகுவதும், பள்ளியை விட்டு வெளியேறுவதும், சூழ்நிலையைத் தானாக மாற்றுவதும் பெரும்பாலும் மாணவரின் கையில் இருக்காது. அதனால்தான் ஆசிரியர்களின் சிரமங்களை ஏற்றுக்கொள்வதும், மாணவர்களின் தேவைகளை மையமாக வைத்திருப்பதும் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்கள் அல்ல.

சரி, ஒரு மாணவருக்கு ‘எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும்?’

அதே பள்ளியில் மாணவர்களிடம் நான் வேறொரு கேள்வியையும் கேட்டேன்: “உங்களுக்கு ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்?”

அவர்களுடைய பதில்கள் சுவாரஸ்யமாக இருந்தன.

“எங்களுக்கு இந்த ஆசிரியர் பிடிக்காது” என்று சொன்ன குழந்தைகள்கூட, “அவங்க சில விஷயங்களை மட்டும் மாத்திக்கிட்டா நல்லா இருக்கும்” என்றார்கள். அவர்கள், ஆசிரியர்களை முழுவதுமாக நிராகரிக்கவில்லை.

அதே நேரத்தில், ஒரு குறிப்பிட்ட ஆசிரியரைப் பற்றி பேசும்போது பல குழந்தைகளின் பதில் முற்றிலும் மாறியது. அந்த ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான நபர் போல இருந்தார்.

“எங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அவரிடம் சொல்லலாம்.”, “அவர் எங்களுடன் பேசுவார்.” “புத்தகங்கள் கொடுத்திருக்கிறார்.”, “எங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அலுவலகத்துக்கு வரச் சொல்லி பேசுவார்.” - அவர்களுடைய குரலில் அந்த ஆசிரியரைப் பற்றிய ஒரு நிம்மதி இருந்தது.

இங்கேதான் இந்த அத்தியாயத்தின் முக்கியமான கேள்வி வருகிறது:

ஒரே பள்ளி. ஒரே விதமான மாணவர்கள். ஒரே மாதிரியான வேலை அழுத்தங்களைச் சந்திக்கும் ஆசிரியர்கள். ஆனால், ஏன் ஓர் ஆசிரியரிடம் மாணவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்... இன்னொருவரிடம் அந்தப் பாதுகாப்பு உணர்வு இல்லை?

இதற்கு ஒரு காரணமாக உறவுசார் அனுபவத்தை (Relational experience-ஐ பார்க்கலாம்.

மாணவர்கள் தங்களது பள்ளியில் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்வதில்லை. ‘நான் யார்?’, ‘என்னால் என்ன செய்ய முடியும்?’, ‘மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்பதையும் மெதுவாகக் கற்றுக்கொள்கிறார்கள்.

பிறர் பார்வையில் தன்னைப் பார்ப்பது (Looking-glass self) என்ற கருத்தின்படி, நாம் நம்மைப் பற்றி உருவாக்கிக் கொள்ளும் எண்ணத்தில், ‘மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?’ என்ற நமது பார்வைக்கும் ஒரு பங்கு இருக்கிறது.

குழந்தைகளின் தன்னைப் பற்றிய கருத்து (self-concept) இன்னும் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ‘இந்த பெரியவர் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்?’ என்பது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம்.

‘நான் கேள்வி கேட்டால், என்னை முட்டாள் என்று நினைப்பார்களா?’

‘தவறு செய்தால் என்னை ஒரு கெட்ட மாணவன் என்று நினைப்பார்களா?’

‘நான் ஏதாவது சொல்ல வந்தால், என்னிடம் பொறுமையாகக் கேட்பார்களா?’

இந்தக் கேள்விகளை மாணவர்கள் வெளிப்படையாகக் கேட்காமல் இருக்கலாம். ஆனால் வகுப்பறை உறவில் (Classroom Relationship) அவற்றுக்கான பதில்களை அவர்கள் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கலாம்.

ஓர் ஆசிரியர் தவறை மட்டும் சுட்டிக்காட்டாமல், “இங்கே என்ன தவறாகிவிட்டது, அடுத்த முறை எப்படி முயற்சி செய்யலாம்?” என்று அணுகும்போது, மாணவர் “நான் தவறு செய்திருக்கிறேன்; ஆனால் நான் தவறான மாணவர் அல்ல” என்ற வேறுபாட்டை கற்றுக்கொள்ள முடியும்.

அதேபோல், ஒரு மாணவரின் கேள்வியை மதிப்பது, அதன் முயற்சியை கவனிப்பது, பிரச்சினை இருக்கும்போது பேச இடம் கொடுப்பது போன்ற சிறிய உறவுசார் அனுபவங்கள் (Relational Experiences), “இங்கே நான் கேட்கப்படுகிறேன்; இங்கே நான் முயற்சி செய்யலாம்” என்ற உணர்வை உருவாக்கலாம்.

இதனால் ஓர் ஆசிரியர் என்பவர் மாணவரின் முழு ஆளுமையை உருவாக்குகிறார் என்று சொல்ல முடியாது. ஆனால், ஒரு மாணவர் தன்னைப் பற்றியும், கற்றலைப் பற்றியும், பெரியவர்களைப் பற்றியும் உருவாக்கிக்கொள்ளும் எண்ணங்களில் ஆசிரியருடனான மீண்டும் மீண்டும் ஏற்படும் அனுபவங்கள் (Repeated experiences) ஒரு பகுதியாக இருக்கலாம்.

அதனால்தான் ஓர் ஆசிரியர் தொடர்ந்து ஒரு மாணவரை ‘சோம்பேறி’, ‘பிரச்சினை பண்றவர்’, ‘வீக்கானவர்’ என்று பார்க்கத் தொடங்கும்போது, அந்த அடையாளப்படுத்தல் (Label) வெறும் ஆசிரியரின் கருத்தாக மட்டும் இருக்காமல், மாணவரின் வகுப்பறை அடையாளத்தையும் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

இதனுடன் ஆசிரியர் எதிர்பார்ப்புகள் மற்றும் தானாக நிறைவேறும் செயல்முறைகள் (Teacher expectations and self-fulfilling processes) பற்றிய உளவியல் ஆய்வுகளையும் தொடர்புபடுத்தலாம்.

ஆசிரியரின் எதிர்பார்ப்புகள் சில சூழல்களில் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் செயல்திறனை பாதிக்கக்கூடும். ஆனால் இதை ‘ஓர் ஆசிரியரின் வார்த்தை குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானித்துவிடும்’ என்று மிகைப்படுத்தக் கூடாது.

அதனால், எதிர்வினைக் கருத்துகள் (feedback) மூலம் ஒரு சிறிய மாற்றம் முக்கியமானது. “நீ ஒரு கவனக்குறைவான மாணவர்” என்பதற்குப் பதிலாக,“இந்தப் பணியில் நீ கவனிக்காமல் விட்ட சில விஷயங்கள் இருக்கின்றன. அதை அடுத்த முறை எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்” என்பது மாணவரின் அடையாளத்தைத் தாக்காமல் நடத்தையைப் பற்றி பேசுகிறது.

ஆனால், ஆசிரியர் என்ன செய்வது?

இதற்கு “ஆசிரியர்கள் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும்” என்பதே பதில் அல்ல.

ஒரு மாணவரின் இடையூறு ஏற்படுத்தும் நடத்தையை பார்த்தவுடன் “இந்த மாணவர் இப்படித்தான்” என்று முடிவு செய்வதற்கு முன், “இந்த நடத்தை எதைச் சொல்கிறது?” என்று சிந்திக்கலாம்.

ஒரு மாணவர் தொடர்ந்து பேசுகிறரா? அது கவனத்தை ஈர்க்கும் நடத்தையாக இருக்கலாம். அல்லது, வேறு காரணங்களும் இருக்கலாம்.

ஒரு மாணவர் அமைதியாக இருக்கிறாரா? அது நல்ல ஒழுக்கம் என்று மட்டும் அர்த்தமல்ல.

ஒரு மாணவர், ஆசிரியரை எதிர்க்கிறாரா? அது அவமதிப்பாக இருக்கலாம். அல்லது, விரக்தி, நிறைவேறாத தேவைகள் அல்லது உறவுச் சிக்கலும் இருக்கலாம்.

இதன் பொருள் ஆசிரியர் ஒவ்வொரு நடத்தைக்கும் ஓர் உளவியல் விளக்கத்தை தேட வேண்டும் என்பதல்ல. தீர்ப்பளிப்பதற்கு முன் ஆர்வத்துடன் புரிந்துகொள்ள முயற்சித்தல் (Curiosity before judgement) என்ற மனநிலைதான் முக்கியம்.

மேலும், ஆசிரியர் - மாணவர் உறவு என்பது எல்லைகள் இல்லாத உறவு அல்ல. ஆசிரியர் என்பவர் மாணவரின் நண்பராகவோ, மனநல நிபுணராகவோ மாற வேண்டியதில்லை. அன்பான அணுகுமுறையும் கட்டமைப்பும் இரண்டும் தேவை. மாணவரை மதிப்பதோடு விதிமுறைகளையும் வைத்திருக்க முடியும்.

துஷ்பிரயோகம், புறக்கணிப்பு அல்லது மாணவரின் மனநலம் மற்றும் நல்வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பல நேரங்களில் முதலில் வெளிப்படுவது அவர்களின் நடத்தையில் தான்.

தினமும் மாணவர்களைப் பார்க்கும் ஆசிரியர்களால் இந்த மாற்றங்களை ஆரம்பத்திலேயே கவனிக்க முடியும். அதனால், மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஆசிரியர்கள் மிக முக்கியமான முதல் தொடர்புப் புள்ளியாக (first point of contact) ஆக இருக்கிறார்கள்.

இங்கே மனநல ஆலோசகரின் பங்கு என்ன?

ஆசிரியர்களிடம் மனநல ஆலோசகர் (Psychologist) ‘மாணவர்களை எப்படி அணுகுவது?’ என்று மட்டும் பேசாமல், ‘மாணவர்களை எப்படி புரிந்துகொள்வது?’ என்பதையும் கொண்டு வரலாம்.

குழந்தை வளர்ச்சி (Child development), உந்துதல் (motivation), உணர்வுகளை ஒழுங்குபடுத்துதல் (emotional regulation), கவனமாகக் கேட்டல் (active listening), உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல் (validation), பயனுள்ள எதிர்வினை கருத்துகள் (constructive feedback), வகுப்பறை உறவுகள் (classroom relationships), எல்லைகள் (boundaries) மற்றும் பரிந்துரை (referral) ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு (teachers) பயிற்சி வழங்கலாம்.

அதோடு ஆசிரியர்களின் சொந்த நல்வாழ்வையும் (wellbeing) கவனிக்க வேண்டும். உணர்வுரீதியாக சோர்வடைந்த ஆசிரியருக்கு ஒவ்வொரு நாளும் அளவற்ற பொறுமையை எதிர்பார்ப்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல. ஆசிரியர் ஆதரவு என்பது குழந்தைகளுக்கான ஆதரவின் ஒரு பகுதிதான்.

அதே நேரத்தில், ஆசிரியர் மன அழுத்தத்தை புரிந்துகொள்வது மாணவரின் தேவையை குறைத்துவிடாது.

மாணவர்தான் இந்த உறவின் மையம். ஏனெனில் மாணவர் இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு குறைந்த அதிகாரம் (power) இருக்கிறது. உதவி தேவைப்பட்டால் யாரிடம் செல்வது என்பதைத் தேர்ந்தெடுக்கும் திறனும் எல்லா நேரமும் இருக்காது.

அதனால் ஆசிரியர்கள் “நான் மாணவர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை” என்று நினைக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பாடத்தின் முழு பாடத்திட்டத்தை மறந்துவிடலாம். ஆனால் “என்னிடம் ஒரு பிரச்சினை இருந்தபோது என்னைக் கேட்ட ஒரு ஆசிரியர் இருந்தார்” என்பதையோ, “தவறு செய்தபோதும் என்னை ஒரு தவறாக மட்டும் பார்க்காத ஒருவர் இருந்தார்” என்பதையோ நினைவில் வைத்திருக்கலாம். அதுவே ஆசிரியரின் தாக்கம்.

அது எப்போதும் பெரிய ஊக்கமளிக்கும் உரையாக இருக்க வேண்டியதில்லை. சில நேரங்களில் அது ஓர் உரையாடல். சில நேரங்களில் ஒரு பொறுமையான பதில். சில நேரங்களில் ஓர் எல்லை. சில நேரங்களில் “நான் தவறாகப் புரிந்துகொண்டேன்” என்று சொல்லும் துணிவு. இன்னும் சில நேரங்களில், “இந்தப் பிரச்சினைக்கு நான் மட்டும் போதுமானவன் அல்ல; உனக்கு இன்னும் உதவி தேவை” என்று சரியான நிபுணரிடம் அழைத்துச் செல்வது.

ஒரு நல்ல ஆசிரியர், மாணவரின் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பவர் அல்ல.

ஆனால், குழந்தை தனியாக இல்லை என்பதை உணரச் செய்யக்கூடிய ஒருவர். அதற்காக ஆசிரியர் முழுமையானவராக இருக்க வேண்டியதில்லை. குழந்தையும் முழுமையானதாக இருக்க வேண்டியதில்லை.

இருவருக்கும் இடையில் ஒரு மனித உறவு இருக்கிறது என்பதை உணர்வதும், அந்த உறவைப் பாதுகாக்கத் தேவையான ஆதரவை ஆசிரியர்களுக்கும் வழங்குவதும்தான் முக்கியம்.

ஏனெனில் தகவல் இன்று கூகுள், ஏஐ டூல்களில் கிடைக்கலாம். ஆனால், ஒரு மாணவர் தன்னைப் பற்றி நம்பத் தொடங்குவது, கேள்வி கேட்கத் துணிவது, தவறிலிருந்து மீள்வது, உதவி கேட்பது... இவை இன்னும் மனிதர்களுடனான உறவுகளின் வழியாகத்தான் கற்றுக்கொள்ளப்படுகின்றன.

இன்னும் பேசுவோம்...

தொடர்புக்கு: silviaise2021@gmail.com

Edited by ஷாலினி

Classroom Relationship: ஓர் ஆசிரியர் எப்படி நினைவில் நிற்கிறார்? | டீனதிகாரம் 5
Belonging: நான் ‘நான்’ ஆக இருக்க இடம் இருக்கிறதா? | டீனதிகாரம் 4

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in