

புதிய புத்தகம் வாங்கியதும் குழந்தைகள் அதன் பக்கங்களை முகர்ந்து பார்த்து ‘ஆகா! என்ன வாசனை!’ என்று சொல்வார்கள். குழந்தைகள் மட்டுமல்ல, புத்தகப் பிரியர்களும்தான். இப்படிப் புத்தக வாசனையில் கிறங்கும் மனநிலையை ஆங்கிலத்தில் ‘பிப்லியோஸ்மியா’ என்று குறிப்பிடுகிறார்கள்.
எங்கள் ஊரில் ஒரு புத்தகப் பிரியர் இருந்தார். அவரது கண் பார்வை மங்கலாகிக் கொண்டே வந்து, பிறகு முற்றிலுமாக பார்வை இழந்து விட்டார். அப்போதும்கூட நண்பர் புதிதாக வாங்கி வரும் புத்தகத்தை ஆசையுடன் வாங்கி முகர்ந்து பார்த்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவார். ‘புத்தகம் படிக்கிற உணர்வை இது தருகிறது சார்’ என்று அவர் சொல்லும்போது மனம் நெகிழும்.
புதிதாக அச்சிட்ட புத்தகங்களுக்கு அச்சுக் காகிதமும், மையும் சேர்ந்த புதுவாசனை உண்டு என்றால், பழைய புத்தகங்களின் மக்கிப்போன பக்கங்களில் தனி வாசனையை நுகரலாம். அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தின் வாசனை அது. பழைய புத்தகக் கடைகளுக்கு என்னை கூட்டிச் சென்று, புத்தகங்களின் வாசனையை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மறைந்த எழுத்தாளர் ஐராவதம் ஆர்.சுவாமிநாதன்.
ஒருநாள் ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவலை என்னிடம் கொடுத்து ‘இதை முகர்ந்து பாருங்கள்’ என்றார். படித்துப் பாருங்கள் என்று சொல்லவில்லை. ஒருவகையில் உவேசா கொடுத்துவைத்தவர். பழைய தமிழ் நூல்களை எல்லாம் பழஞ்சுவடிகளில் படித்திருக்கிறார். ஆகா!
அந்தப் பனை ஓலைச் சுவடிகளின் வாசனை எப்படி இருந்திருக்கும்? இப்போதெல்லாம் E-Books என்று சொல்லப்படும் மின் புத்தகங்கள் வந்துவிட்டன. இந்த வாசனை அனுபவம் அவற்றில் கிடைக்காது. இப்போது புத்தக வாசனை வீசும் செயற்கையான `சென்ட்' சந்தையில் கிடைக்கிறது. பழைய புத்தக வாசனை நமது பழைய நினைவுகளைக் கிளறுகிறது.
மக்கிப்போன மரத்தின் ரசாயன மாற்றங்கள், பக்கங்களில் இருந்து எழுவதே இந்த வாசனை என்பது அறிவியல் உண்மை. ஆனாலும், அவற்றின் மனோகரமான வாசனையை மறுக்க முடியாது. எங்கள் வீட்டில் பொன்னியின் செல்வன் பழைய பைண்டு வால்யூம் இருந்தது. அப்பா வாரப் பத்திரிகையில் வந்த தொடரை சேகரித்து வைத்திருந்தார். காகிதங்கள் பழுப்பேறி விட்டன. ஆனால், மணியம் வரைந்த ஓவியங்கள் காலத்தின் திரையை விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தன.
"கணப்பில் எரியும் பழைய மரத்துண்டுகள், நெடுநாள் பாதுகாத்த ஒயின், பழங்காலப் புத்தகம் - இவற்றின் வாசனையோடு வாழ்வதே போதும்" என்கிறது ஒரு ஜப்பானிய கவிதை. உணவு மேசை மீது வைக்கப்பட்டுள்ள புது ரொட்டித் துண்டு அருகில் ஒரு மிகப்புராதனமான புத்தகம். முதலில் புத்தக வாசனையை சாப்பிட்டேன் என்கிறார் ஒரு கவிஞர்.
என் புத்தக அலமாரியில் ஒரு பழைய புத்தகம் இருக்கிறது. பள்ளிப் பருவத்திலிருந்தே என் கூட வருகிறது. புரட்டினேன், ரொம்பப் பழசாகி விட்டது. என்னைப்போல நடுவே ஒரு பக்கத்தில் ரோஜாவில் ஒற்றை இதழ். என் கண்களில் கண்ணீர். மற்றொரு புத்தகத்தின் பக்கங்களில் நடுவே பாடம் செய்த நிலையில் ஒரு பட்டாம்பூச்சி. எத்தனை வருடம் ஆயிற்றோ? அதன் வண்ணங்கள் மங்கவே இல்லை. குனிந்து பார்த்தேன், மூச்சு விட்டாலே உதிர்ந்துவிடுவதுபோல இருந்தது. லேசு மிக லேசு. மனம் தான் கனத்தது.