தாய்ப்பால்... குழந்தையின் முதல் உரிமை, முதல் தடுப்பூசி!

ஆக.1-7 உலக தாய்ப்பால் வாரம்
தாய்ப்பால்... குழந்தையின் முதல் உரிமை, முதல் தடுப்பூசி!
Updated on
2 min read

பிறந்த குழந்தையின் முதல் மற்றும் மிகச்சிறந்த உணவு தாய்ப் பாலாகும். இது, வெறும் உணவு மட்டுமல்ல, குழந்தையின் ஒட்டு மொத்த உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும், தாயின் ஆரோக்கியத்துக்கும் இயற்கை அளித்த ஒரு வரமாகும்.

‘வாழ்வின் வளமான தொடக்கத்துக்கு தாய்ப்பால். வெற்றிகரமான நடைமுறைகளை வலுப்படுத்துவோம்’ என்பது இந்த ஆண்டுக்கான உலக தாய்ப்பால் வாரத்தின்(ஆக.1 முதல் 7வரை) மையக்கருத்தாகும்.

இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங்குழந்தைகள் பிரிவு சிறப்பு மருத்துவர் ஆர்.பீட்டர் கூறியதாவது: பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாயின் கருப்பை சுருங்குவதற்கும், முதல்கட்டப் பாலான 'சீம்பால்' குழந்தைக்குக் கிடைப்பதற்கும் உதவுகிறது. இது குழந்தையின் முதல் தடுப்பூசியைப் போன்றது. இதிலுள்ள இமுனோகுளோபுலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது.

தொடர்ந்து 6 மாதங்களுக்கு வேறு எந்த வெளி உணவும் கொடுக்காமல் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

அதன்பிறகு, தாய்ப்பாலுடன் சேர்த்து பாதுகாப்பான, ஊட்டச்சத்து நிறைந்த திட மற்றும் திரவ உணவுகளை படிப்படியாகத் தொடங்கலாம். அதேவேளையில், தாய்ப்பாலை குறைந்தபட்சம் 2 வயது அல்லது அதற்கு மேல் வரை தொடர்ச்சியாக கொடுக்கலாம்.

தாய்ப்பால் ஊட்டுவதில் இந்தியாவும், குறிப்பாக தமிழகமும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டுள்ளதுடன், சில சவால்களையும் எதிர்கொண்டு வருவதாக தேசிய குடும்ப நல மதிப்பீட்டு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் பிறந்த முதல் 6 மாதங்களுக்கு முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்கும் தாய்மார்களின் எண்ணிக்கை 64 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தொடங்கும் விகிதம் நாடு முழுவதும் சுமார் 42 சதவீதத்தில் இருந்து 45 சதவீதம் வரையே உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் 6 மாதங்கள் வரை முழுமையாக தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் எண்ணிக்கை 55.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 99.6 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுவதால், பச்சிளம் குழந்தைக்கு உடனடியாக தாய்ப்பால் வழங்கும் நடைமுறையை மருத்துவப் பணியாளர்கள் மூலம் எளிதாக உறுதி செய்ய முடிகிறது.

தாய்ப்பாலால் குழந்தைக்கு மூளை வளர்ச்சி துரிதமடைகிறது, ஒவ்வாமை மற்றும் வயிற்றுப்போக்கு, நுரையீரல் தொற்று போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து குறைகிறது. பரிந்துரைக்கப்படும் காலம் வரை தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு குறைவு.

அதேபோல, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் சினைப்பை புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது.

எனவே, தாய்ப்பால் கொடுப்பது ஒரு தனிப்பட்ட தாயின் பொறுப்பு மட்டுமல்ல. அது குடும்பம், சமத்துவம், வேலை செய்யும் இடங்கள் மற்றும் ஒட்டு மொத்த சமூகமும் இணைந்து தாய்க்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டிய கடமையாகும்.

இந்த உலக தாய்ப்பால் வாரத்தில், பொதுமக்களிடையே நிலவும் தயக்கங்களைக் களைந்து, தாய்ப்பால் ஊட்டுதலின் அவசியத்தை உணர்த்துவோம். ஆரோக்கியமான மற்றும் வலிமையான எதிர்காலத்தை உருவாக்க, ஒவ்வொரு குழந்தையும் தன் முதல் உரிமையான தாய்ப்பாலைப் பெற நாம் அனைவரும் உறுதியேற்போம் என்றார்.

தாய்ப்பால்... குழந்தையின் முதல் உரிமை, முதல் தடுப்பூசி!
மதுரையில் அறிவிக்கப்படாத மின்தடையால் மக்கள் அவதி - மின்துறை அமைச்சர் மாவட்டத்தில் தொடரும் குளறுபடிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in