Internalisation: படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா? | டீனதிகாரம் 3

பதின்ம வயதினரின் உலகமும் உளவியலும்
Internalisation: படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா? | டீனதிகாரம் 3

படம்: மெட்டா ஏஐ

Updated on
5 min read

ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்கிறது. பாடங்களைப் படிக்கிறது. தேர்வு எழுதுகிறது. நல்ல மதிப்பெண்கள் பெறுகிறது. அடுத்ததாக நுழைவுத் தேர்வு. அதன் பிறகு கல்லூரி, பட்டம், பின்னர் ஒரு வேலை. வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தப் பயணம் மிகவும் நேர்த்தியாகத் தெரிகிறது.

ஆனால், இந்தப் பயணத்தில் நம்மில் பலரும் தவறிவிடும் கேள்வி: ‘நாம் படித்ததை வைத்து என்ன செய்கிறோம்?’

இங்கே முதலில் ஒன்றைத் தெளிவாகச் சொல்ல வேண்டும். நாம் படிப்பதில் சிக்கல் இருக்கிறது என்று இந்த அத்தியாயம் சொல்லவில்லை.

ஒரு சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதும், உயர் கல்விக்குள் வருவதும், பட்டம் பெறுவதும் மிகப் பெரிய சமூக முன்னேற்றம். கல்வி சில குறிப்பிட்ட சமூகத்தினருக்கோ, பொருளாதார வசதி உள்ளவர்களுக்கோ மட்டும் இருந்த காலத்தில் இருந்து, இன்று ஒரு கிராமத்தில் இருக்கும் குழந்தையும் கல்லூரிக்குச் சென்று ஒரு பட்டம் பெறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையாக இருந்தாலும், நகரத்தில் வசிக்கும் குழந்தையாக இருந்தாலும், பொருளாதார வசதி அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்த குழந்தையாக இருந்தாலும், எல்லோருக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்ற முயற்சி முக்கியமானது.

அதேபோல், ஒரு தலைமுறையில் பத்து குழந்தைகள் பள்ளிக்குச் சென்றார்கள் என்றால், அந்தப் பத்து பேரில் சிலர் கல்லூரிக்குச் செல்வார்கள். அவர்களில் சிலர், “அடுத்ததாக இதையும் செய்யலாம்”, “இன்னும் படிக்கலாம்”, “வேறு ஒரு துறைக்குச் செல்லலாம்” என்று யோசிக்கத் தொடங்குவார்கள். அந்த வாய்ப்பு அடுத்த தலைமுறைக்கும் செல்லும். அதனால், பெரும்பான்மையான மக்களிடம் கல்வியைக் கொண்டு செல்வது என்பது தவறான பாதை அல்ல; அது தேவையான முதல் படி.

ஆனால், ஒரு கட்டத்தில் அடுத்த கேள்வியைக் கேட்க வேண்டியிருக்கிறது. கல்வி எல்லோரிடமும் சென்று சேர்ந்துவிட்ட பிறகு, அது எப்படிச் சென்று சேர வேண்டும்?

எப்படிக் கற்றுக்கொடுக்க வேண்டும்?, எப்படிப் புரிய வைக்க வேண்டும்?, கற்றதை எப்படி வாழ்க்கையோடு இணைக்க வேண்டும்?, ஒரு குழந்தை பள்ளியில் கற்றதை வீட்டில் எப்படி அர்த்தப்படுத்துகிறது?, அந்த அறிவைத் தனது அனுபவத்தோடு எப்படி இணைக்கிறது?, அதை வைத்து புதிய சூழ்நிலைகளில் எப்படி சிந்திக்கிறது?

இங்கேதான் பள்ளிக்கும் வீட்டுக்கும், பாடத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

ஒரு மாணவன் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்குத் தேவையானதைப் படித்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். தேர்வில் சரியான பதிலை எழுதிவிட்டான். நுழைவுத் தேர்விலும் நன்றாகச் செய்துவிட்டான். அதற்குப் பிறகு அந்த அறிவு அவனுடைய வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தப்படுகிறது?

இதுதான் நாம் அதிகமாகப் பார்க்காத ஓர் இடைவெளி.

புத்தகத்தில் ஓர் உலகம்... வாழ்க்கையில் இன்னோர் உலகம்!

ஒரு குழந்தை அறிவியல் படிக்கிறது. பூமி மற்றும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து அது ‘பிக் பேங்’ கோட்பாட்டைப் படிக்கிறது. பிரபஞ்சம் எப்படி உருவானது, அறிவியல் எப்படி ஒரு நிகழ்வுக்கான காரணத்தைத் தேடுகிறது என்பதைக் கற்றுக்கொள்கிறது. அதே குழந்தை வீட்டுக்கு வந்ததும், ஏதாவது தவறு செய்தால், ‘சாமி கண்ணைக் குத்திடும்’ என்று கேட்கிறது.

இங்கே பிரச்சினை என்பது எது உண்மை, எது பொய் என்று உடனடியாகத் தீர்ப்பளிப்பது அல்ல. ஒரு குழந்தை உலகத்தைப் புரிந்துகொள்ளும்போது, பாடநூல் மட்டும் அதன் ஆசிரியராக இருப்பதில்லை என்பதுதான் முக்கியம். அதன் குடும்பம், மொழி, கலாச்சாரம், மதிப்புகள், பழக்கவழக்கங்கள், பயங்கள், நம்பிக்கைகள், சுற்றியுள்ள பெரியவர்கள் சொல்லும் கதைகள். இவை அனைத்தும் சேர்ந்து அந்தக் குழந்தையின் உலகத்தை உருவாக்குகின்றன.

பள்ளி ஒரு விஷயத்தை ஒரு குறிப்பிட்ட முறையில் விளக்கலாம். வாழ்க்கை அதை வேறு ஒரு பாதையில் விளக்கலாம். அப்போது குழந்தை அந்த இரண்டு உலகங்களையும் எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறது?

அதுதான் இன்டர்னலைசேஷன் (Internalisation) என்ற இடத்தை முக்கியமாக்குகிறது. ஒரு விஷயத்தைப் புத்தகத்தில் படிப்பது மட்டும் போதாது. அது குழந்தையின் சிந்தனையில் இடம்பெற வேண்டும். அதன் முன் இருக்கும் அனுபவங்களோடு அது தொடர்புபட வேண்டும். “ஏன்?” என்று கேட்கும் இடம் இருக்க வேண்டும். வேறுபட்ட விளக்கங்களை ஒப்பிடும் வாய்ப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தை இரண்டு தனித்தனி உலகங்களை உருவாக்கிவிடலாம்.

“இது தேர்வுக்காகப் படிப்பது.”

“இது நம்ம வாழ்க்கையில் இருப்பது.”

பாடநூல் ஒரு மதிப்பெண்ணைப் பெறுவதற்கான கருவியாக மட்டுமே பார்க்கப்படும்போது, அதன் உள்ளடக்கம் வாழ்க்கைக்குள் செல்லாமல் தேர்வுத்தாளுக்குள் மட்டுமே தங்கிவிடும்.

ஒரு குழந்தையின் உலகம் எவ்வளவு பெரியதாக இருக்க முடியும்?

‘தி கேவ் ஆஃப் தி யெல்லோ டாக்’ (the cave of the Yellow Dog) திரைப்படத்தில் வரும் ஒரு சிறிய காட்சி என்னை நீண்ட நேரம் யோசிக்க வைத்தது.

ஒரு பரந்த வெட்டவெளி. காலை நேரம். சுமார் ஏழு வயதுள்ள ஒரு சிறுமி குதிரையில் செல்கிறாள். அவளுடன் ஆடுகளும், வீட்டின் செல்ல நாயும் செல்கின்றன. அவளுடைய உலகம் அந்த நேரத்தில் எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதை அந்தக் காட்சி எந்த விளக்கமும் இல்லாமல் காட்டுகிறது. அவள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பரந்த வெளியில் அவள் இயல்பாகச் சுற்றுகிறாள். ஒரு கட்டத்தில் அவளுடைய செல்ல நாய் காணாமல் போகிறது.

ஆடுகள் மட்டும் தங்களுக்குப் பழக்கமான பாதையில் வீட்டிற்குத் திரும்பிவிடுகின்றன. ஆனால் அந்தச் சிறுமி?

அவள் நாயைத் தேடிப் போகிறாள். குதிரையில் சென்று தேடுகிறாள். நேரம் கடந்து செல்கிறது. மாலை ஆகிறது. சூரியன் மறைகிறது. வெளிச்சம் குறைகிறது.

இறுதியில் அவள் நாயைக் கண்டுபிடிக்கிறாள். ஆனால், அதற்குள் வீட்டுக்குத் திரும்ப வேண்டிய நேரம் கடந்துவிட்டது. வழியில் ஒரு வயதான பெண்ணைச் சந்திக்கிறாள். அந்தப் பெண்ணுடன் அவளுடைய வீட்டுக்குச் செல்கிறாள். அங்கே குளிக்கிறாள். சாப்பிடுகிறாள். பேசுகிறாள். சிரிக்கிறாள். அந்த இரவு அங்கேயே இருக்கிறாள்.

இந்தக் காட்சி முழுவதும் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், அந்தச் சிறுமியின் முகத்தில் பெரிய பதற்றம் இல்லை. அவளைச் சுற்றியுள்ள பெரியவர்களிடமும் நாம் எதிர்பார்க்கும் அளவிலான பதற்றம் இல்லை.

“எங்கே போனாய்?”, “ஏன் இவ்வளவு நேரம்?”, “யாருடன் இருந்தாய்?”, “என்ன நடந்தது?” என ஒரு பெரிய விசாரணை இல்லை. பின்னர் அவளுடைய அம்மா அவளைத் தேடி வந்து அழைத்துச் செல்கிறார். அவளும் இயல்பாகத் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறாள்.

அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, எனக்கு ஒரு கேள்வி வந்தது.

ஒரு குழந்தை உலகத்தை இவ்வளவு இயல்பாக அனுபவிக்கக் கூடிய இடம், நம்முடைய வாழ்க்கையில் எப்போது குறைந்து போனது?

நம்முடைய குழந்தை வீட்டை விட்டு வெளியே சென்றால், இன்று எத்தனை கேள்விகள் உடனே வந்து நிற்கின்றன?

“எங்கே போகிறாய்?”, “யாருடன் போகிறாய்?”, “எப்போது வருவாய்?”, “ஃபோன் எடுத்துக்கிட்டியா?”, “லொகேஷன் ஆன் பண்ணு.”, “லேட் ஆகக்கூடாது.”, “தனியாகப் போகக்கூடாது.”, “அறிமுகமில்லாதவர்களிடம் பேசக்கூடாது.”

இந்தக் கவலைகள் எல்லாமே காரணமில்லாதவை என்று சொல்ல முடியாது. குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய உண்மையான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அந்தப் பாதுகாப்பின் பெயரில், குழந்தை தானாக உலகத்தைப் பார்த்து, அனுபவித்து, தேடி, தவறி, மீண்டும் புரிந்துகொள்ளும் இடத்தை நாம் எவ்வளவு குறைத்துவிட்டோம்?

அந்தச் சிறுமி நாயைத் தேடிச் செல்கிறாள். தேடும்போது வழி மாறுகிறது. ஒரு புதிய மனிதரைச் சந்திக்கிறாள். அவருடைய வீட்டுக்குச் செல்கிறாள். அங்கே ஒரு புதிய அனுபவத்தைப் பெறுகிறாள். அடுத்த நாள் அவள் வீட்டுக்குத் திரும்புகிறாள். அவள் அந்த நாளில் ஒரு பாடப் புத்தகத்தைப் படிக்கவில்லை. ஆனால் அவள் வாழ்க்கையைப் படித்துக்கொண்டிருக்கிறாள். அதுதான் அந்தக் காட்சி எனக்கு உணர்த்தியது.

குழந்தையின் பாதுகாப்பு முக்கியம். ஆனால், பாதுகாப்பு என்பது குழந்தையை உலகத்தில் இருந்து முழுமையாகப் பிரித்து வைப்பதாக மாறிவிட்டால், உலகத்தைப் புரிந்துகொள்வதற்கான அனுபவங்களையும் நாம் குறைத்துவிடுகிறோம்.

ஒரு குழந்தை உலகத்தை நேரடியாக அனுபவிக்கும்போதுதான், அதிலிருந்து கேள்விகள் உருவாகின்றன. கேள்வியிலிருந்து தேடல் வருகிறது. தேடலில் இருந்து புரிதல் வருகிறது. அந்தப் புரிதல் பின்னர் வேறு ஒரு சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் அறிவாக மாறுகிறது. அதனால், இது வெறும் குழந்தைகளுக்குச் சுதந்திரம் கொடுப்பது பற்றிய கேள்வி அல்ல. இது குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள் என்பதற்கான கேள்வி.

கலாச்சாரம் என்ன செய்கிறது?

ஒரு குழந்தை வீட்டில் எதைப் பார்க்கிறது என்பதும், அது பள்ளியில் எதைப் படிக்கிறது என்பதும் எப்போதும் ஒன்றாக இருக்காது.

பள்ளியில்: “கேள்வி கேள்.”

வீட்டில்: “பெரியவர்கள் சொல்வதைக் கேள்.”

பள்ளியில்: “ஆதாரத்தைப் பார்.”

வாழ்க்கையில்: “எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்.”

பள்ளியில்: “முயற்சி செய்து கண்டுபிடி.”

வாழ்க்கையில்: “தவறு பண்ணாதே.”

இப்படி இரண்டு விதமான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும்போது, குழந்தை எதை உள்வாங்குகிறது என்பது அதன் அனுபவத்தைப் பொறுத்தது. அதனால் கல்வியைப் பாடநூலில் மட்டும் தேட முடியாது.

ஒரு குழந்தை எதைப் படிக்கிறது என்பதோடு, அது எப்படிப்பட்ட சூழலில் வாழ்கிறது என்பதும் அது கற்றதை எப்படி அர்த்தப்படுத்துகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.

“படித்தால் போதும்” என்ற எண்ணம் நம்முடைய கல்வி அமைப்பில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. அதற்காக பாடத்திட்டம், பாடநூல், தேர்வு போன்ற அமைப்புகள் உருவாகின்றன.

“இந்தப் பாடத்தில் தேர்ச்சி பெற இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்”, “இந்தப் பட்டத்தை முடிக்க இந்தக் கருத்துகள் தெரிந்திருக்க வேண்டும்” என்று ஒரு குறைந்தபட்ச அறிவு நிலை உருவாக்கப்படுகிறது.

இதில் தவறு இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் “நான் இதைத் தெரிந்துகொண்டேன்” என்பதே “நான் இதைக் கற்றுக்கொண்டேன்” என்று கருதப்படத் தொடங்குகிறது. இங்கேதான் பிரச்சினை.

ஒரு மாணவன் ஒரு கணிதப் பிரச்சினையைப் பாடநூலில் கொடுத்திருக்கும் முறையில் தீர்க்கலாம். ஆனால் அதே கணிதச் சிந்தனையை வாழ்க்கையில் எங்கே பயன்படுத்துவது என்று அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஒரு மாணவன் அறிவியலின் ஒரு கருத்தைத் தேர்வில் சரியாக எழுதலாம். ஆனால், தன்னைச் சுற்றியுள்ள ஒரு நிகழ்வைப் பார்த்து, அதே அறிவைப் பயன்படுத்தி கேள்வி எழுப்பாமல் இருக்கலாம். ஒரு மாணவன் சமூக அறிவியலில் சமூக அமைப்புகளைப் பற்றி படிக்கலாம். ஆனால் தன்னுடைய சமூகத்தில் நடக்கும் ஒன்றைப் பார்த்து, “இது ஏன் இப்படி இருக்கிறது?” என்று கேட்காமல் இருக்கலாம்.

அதனால் நாலெட்ஜ் அக்விசிஷன் (Knowledge acquisition) மற்றும் நாலெட்ஜ் அப்ளிகேஷன் (knowledge application) இரண்டும் ஒன்றல்ல.

அப்ளிகேஷன் தானாக வராது. நாம் பல நேரங்களில் ஒரு தவறான எண்ணத்தை வைத்திருக்கிறோம்.

பள்ளியில் படிப்பான். கல்லூரியில் இன்னும் கொஞ்சம் படிப்பான். பட்டம் முடிப்பான். பின்னர் வாழ்க்கைக்குள் சென்றவுடன் தானாக எல்லாவற்றையும் சமாளிக்கக் கற்றுக்கொள்வான்.

ஆனால், அப்ளிகேஷன் என்பது தானாக நடக்கும் செயல்முறை அல்ல.

ஒரு குழந்தை சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தயாரான பதிலை மட்டுமே பெற்றிருந்தால், தானாக ஒரு பிரச்சினையை அணுகும் திறன் எப்படி உருவாகும்?

ஒவ்வொரு வேலையும் “சீக்கிரம் முடி” என்பதற்காகச் செய்யப்பட்டிருந்தால், அந்த வேலையைப் பற்றி “ஏன் இப்படிச் செய்கிறேன்?” என்று யோசிக்கும் பழக்கம் எப்படி உருவாகும்?

ஒவ்வொரு தவறும் தோல்வியாகக் கருதப்பட்டால், புதிய ஒன்றை முயற்சி செய்யும் தைரியம் எப்படி உருவாகும்?

ஒரு குழந்தை எதையாவது தேடிச் செல்லும்போது, அது உடனடியாக ஒரு மதிப்பெண்ணாக மாற வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில் அது வெறும் அனுபவமாக இருக்கலாம். அந்த அனுபவத்திலிருந்து ஒரு கேள்வி வரலாம். அந்தக் கேள்வியிலிருந்து ஒரு தேடல் வரலாம். அந்தத் தேடலிலிருந்து ஒரு புரிதல் உருவாகலாம். அந்தப் புரிதல் பின்னர் ஒரு புதிய சூழ்நிலையில் பயன்படுத்தப்படும் அறிவாக மாறலாம்.

படிப்பிலிருந்து வாழ்க்கைக்கும், வாழ்க்கையிலிருந்து வேலைக்கும்...

ஒரு மாணவன் படிக்கிறான். தேர்வு எழுதுகிறான். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுகிறான். கல்லூரிக்குச் செல்கிறான். பட்டம் பெறுகிறான். பின்னர் வேலைக்குச் செல்கிறான். அங்கே யாரும் அவனிடம், “இந்தப் பிரச்சினைக்கு இந்த அத்தியாயத்தைப் படித்திருக்கிறாயே, அதிலிருந்து இந்தக் கருத்தைப் பயன்படுத்து” என்று சொல்லப் போவதில்லை. வேலை உலகில் பாடநூல் கேள்விகள் கிடையாது.

ஒரு மனிதருடன் எப்படி பேசுவது? ஒரு பிரச்சினையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதபோது எப்படி முடிவெடுப்பது? தகவல்கள் முழுமையாக இல்லாதபோது என்ன செய்வது? ஒரு தவறு நடந்தால் அதை எப்படி சரிசெய்வது? புதிதாக வந்த ஒரு சூழ்நிலையில் முன்பு கற்றதை எப்படி பயன்படுத்துவது?

ஒரு பிரச்சினைக்கு ஒரே சரியான பதில் இல்லாதபோது எப்படி சிந்திப்பது? - இவை அனைத்தும் அப்ளிகேஷனைக் கேட்கின்றன.

“நான் இதைப் படித்திருக்கிறேன்” என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. “அதை நான் என்ன செய்ய முடியும்?” என்பதுதான் அடுத்த கட்டம்.

நாம் குழந்தைகளுக்கு நேரம் கொடுக்கிறோமா?

இன்றைய குழந்தையின் நேரம் பல நேரங்களில் ஏற்கெனவே நிரம்பியிருக்கிறது. பள்ளி, டியூஷன், வீட்டுப் பாடம், வகுப்புகள், தேர்வுகள், நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பு, போட்டி....

ஓர் ஓட்டம். அந்த ஓட்டத்தில், “நான் ஏன் இதைப் படிக்கிறேன்?” என்று கேட்பதற்கான நேரம் எங்கே?

“இதைக் கொண்டு நான் என்ன செய்யலாம்?” என்று முயற்சி செய்வதற்கான நேரம் எங்கே?

“இது என்னுடைய வாழ்க்கையோடு எப்படி தொடர்புடையது?” என்று யோசிப்பதற்கான நேரம் எங்கே?

நாம் குழந்தைகளுக்கு பதில்களை விரைவாகக் கொடுக்கிறோம். ஆனால், அந்தப் பதிலைத் தேடுவதற்கான அனுபவத்தை எவ்வளவு கொடுக்கிறோம்?

இதுதான் கல்வியை மீண்டும் சிந்திக்க வேண்டிய இடம். கல்வியின் நோக்கம் எல்லாவற்றையும் தெரிந்திருப்பதாக இருக்க முடியாது. அதேபோல், கல்வியின் நோக்கம் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவதோடு முடிந்துவிடவும் முடியாது.

கல்வி என்பது ஒரு மனிதனுக்கு உலகத்தைப் புரிந்துகொள்ளும் கருவிகளைக் கொடுப்பது என்றால், அந்தக் கருவிகளை உலகத்தில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் அவனுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது.

ஒரு குழந்தை பள்ளியை விட்டு வெளியே வரும்போது அதன் கையில் ஒரு சான்றிதழ் மட்டும் இருக்கக் கூடாது. அதனுடன் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும்: “நான் கற்றதை வைத்து இந்த உலகத்தை இன்னும் கொஞ்சம் நன்றாகப் புரிந்துகொள்ள என்ன செய்ய முடியும்?”

இந்தக் கேள்வி வந்துவிட்டால், படிப்பு ஒரு தேர்வைத் தாண்டிச் செல்கிறது. அது வாழ்க்கைக்குள் நுழைகிறது.

இன்னும் பேசுவோம்...

தொடர்புக்கு: silviaise2021@gmail.com

Edited by ஷாலினி

Internalisation: படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா? | டீனதிகாரம் 3
ஸ்கிரீனின்றி அமையாது உலகு | டீனதிகாரம் 2
Internalisation: படித்ததை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா? | டீனதிகாரம் 3
Scaffolding: பெற்றோரின் ‘உறுதுணை’ எல்லை எது? | டீனதிகாரம் 1

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in