

திருச்சி: “நாங்கதான் மயிலு.. கூடப்பாடும் குயிலு.. நாங்கதான் மாடு.. துள்ளித் துள்ளி ஆடு..” என்று விலங்குகள், பறவைகள் நடனமாடிக் கொண்டே பாடுவது போன்ற ஏஐ ரீல்ஸ்கள் வலைதளங்களில் தற்போது டிரெண்டாகி வருகின்றன.
இன்றைய டிஜிட்டல் உலகில் எப்போது, எது வைரலாகும் என்பதை கணிக்க முடியாது. சமூக வலைதளங்களின் ரசனை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பரவலாக வந்தபோது, தங்களது சாதாரண புகைப்படங்களை ஏஐ மூலம் வெவ்வேறு தோற்றங்களில் மாற்றி அமைக்கும் போக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.
பின்னர், புகைப்படங்கள் உருவாக்குவதைக் கடந்து, அவற்றை அசையும் காட்சிகளாக மாற்றும் தொழில்நுட்பமும் வேகமாக வளரத் தொடங்கியது. இதனால் ஏஐ மூலம் உருவாக்கப்படும் வீடியோக்களின் எண்ணிக்கையும் வலைதளங்களில் அதிகரிக்கத் தொடங்கியது.
தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், குறுகிய கால அளவில் ரீல்ஸ் வடிவிலான வீடியோக்களை உருவாக்கும் வசதி பயனர்களிடம் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குறு வீடியோக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மனிதர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வந்த ஏஐ காட்சிகள் தற்போது விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவற்றையும் மையமாகக் கொண்டு உருவாகத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக, விலங்குகளை வைத்து உருவாக்கப்படும் நகைச்சுவையான ஏஐ பாடல்கள் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. மாடு, எருமை, ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகள் மனிதர்களைப் போல வாயசைத்துப் பாடுவது, பேசுவது, ஒன்றுக்கொன்று பதில் கூறுவது போன்ற காட்சிகள் ஏஐ மூலம் உருவாக்கப்படுகின்றன.
அதில், “நாங்கதான் மயிலு.. கூடப்பாடும் குயிலு.. நாங்கதான் மாடு.. துள்ளித் துள்ளி ஆடு..” என விலங்குகளின் பெயர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பாடல் வரிகள் இடம்பெறும் வீடியோக்கள் பலராலும் ரசிக்கப்பட்டு, அதிக அளவில் பகிரப்படுகின்றன. நகைச்சுவையாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் இந்த வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளை பெற்று வருகின்றன.
முன்பு ஒரு ரீல்ஸ் வீடியோவை உருவாக்க கேமரா, நடிகர்கள், இடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் தேவையாக இருந்தன. தற்போது ஏஐ தொழில்நுட்பம் காரணமாக கற்பனையில் தோன்றும் காட்சிகளைக்கூட குறுகிய நேரத்தில் உருவாக்க முடிகிறது.
புகைப்படத்தில் தொடங்கிய ஏஐ பயன்பாடு தற்போது குறு வீடியோ, பாடல், குரல், கதாபாத்திரம் என பல்வேறு தளங்களுக்கு விரிவடைந்துள்ளது. ஒரு காலத்தில் திரைப்படப் பாடல்கள், பின்னர் மீம்ஸ்கள், அதன்பிறகு ரீல்ஸ் நடனங்கள் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலானதைப்போல, தற்போது ஏஐ மூலம் உருவாக்கப்படும் விலங்கு பாடல் வீடியோக்கள் புதிய டிரெண்டிங்கில் இணைந்துள்ளன.