“என்னைப் போல ‘டீடோட்லர்’ ஆக இருங்கள்” - இளைஞர்களுக்கு நடிகர் சசிகுமார் வேண்டுகோள்

“என்னைப் போல ‘டீடோட்லர்’ ஆக இருங்கள்” - இளைஞர்களுக்கு நடிகர் சசிகுமார் வேண்டுகோள்

படம்:  நா. தங்கரத்தினம்

Updated on: 
1 min read

மதுரை: “இளைஞர்கள் என்னைப் போல் ‘டீடோட்லர்’ ஆக இருக்க வேண்டும்” என மதுரை அரசு மருத்தவமனையில் நடைபெற்ற உலக இதய தின கருத்தரங்கில் நடிகர் சசிகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

உலக இதய தினத்தை முன்னிட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ் குமார் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திரைப்பட நடிகரும் இயக்குநருமான சசிகுமார் பேசியது: “மருத்துவர்கள் எப்போதும் மதிக்கத்தக்கவர்கள். அவர்கள் அணியும் வெள்ளை உடை என்பது அவர்களின் பொறுப்பு, கடமை ஆகியவற்றை குறிக்கிறது.

நமது உடலில் எப்போதுமே ஓய்வு எடுக்காத உறுப்பு இதயம்தான். அதை பாதுகாப்போடு வைத்திருப்பது நமது கடமை. எனக்கு மருத்துவர்கள் கூறிய அறிவுறுத்தல் என்னவென்றால், தினமும் 40 நிமிடங்கள் உடல் நலனுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதுதான்.

அதாவது, நாம் எந்த துறைகளைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், உங்களுக்காக தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் ஒதுக்கி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என கூறினர். இதனை நான் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறேன். மேலும், தினமும் இரவு உணவு இரவு 7.30 மணி முதல் 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் மது, புகை உள்ளிட்ட கெட்டப் பழக்கங்கள் எதுவும் இல்லாத டீடோட்லர். சினிமா காட்சிக்காக டைரக்டர்கிட்ட சொல்லும்போது, மது குடிப்பது, புகைப்பிடிப்பது போன்று நடிப்பேனே தவிர, எனக்கு எந்தக் கெட்டப் பழக்க வழக்கமும் கிடையாது.

எனவே, இளைஞர்கள் அனைவருமே எந்த போதை பழக்கங்களுக்கும் அடிமையாகாமல் இருக்க வேண்டும். விளையாட்டில் ஆர்வம் காட்டும்போது போதைப் பழக்கங்கள் தவிர்க்கலாம்.

மருத்துவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள் வைக்கிறேன்... அனைவரையும் 6 முதல் 8 மணி நேரம் ஓய்வெடுக்க கூறும் நீங்களும் ஓய்வெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும், இதைச் சாப்பிடணும், இதைச் சாப்பிடக் கூடாது என கூறி மக்களை குழப்பி வருகின்றனர்.

எனவே, மருத்துவர்கள் இதற்கு ஒரு தெளிவான விளக்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. அது மக்களைச் சென்று சேர வேண்டும்” என்று சசிகுமார் பேசினார்.

இந்நிகழ்வில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் மல்லிகா, இதயவியல் துறைத் தலைவர் ஆர்.ஆர்.சரவணன், உரைவிட மருத்துவ அலுவலர் சரவணன், உதவி பேராசிரியர்கள் ரமேஷ், சதீஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

“என்னைப் போல ‘டீடோட்லர்’ ஆக இருங்கள்” - இளைஞர்களுக்கு நடிகர் சசிகுமார் வேண்டுகோள்
“தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தல்கள் தேவையில்லாதவை” - நாகை எம்.பி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in