

நாகை எம்.பி செல்வராஜ் | கோப்புப் படம்
புதுச்சேரி: “புதுச்சேரி, தமிழக இடைத்தேர்தல்கள் தேவையில்லாதவை” என்று நாகை எம்.பி செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சலீமை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த நாகை எம்.பி செல்வராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “புதுச்சேரி, தமிழக இடைத்தேர்தல்கள் இயல்பான தேர்தல் அல்ல. திணிக்கப்பட்ட தேர்தல். மூன்று இடைதேர்தலும் தேவையில்லாத ஒன்று.
மத்திய அரசு, ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது. மக்கள் வரிபணம் வீணாவது, அரசு பணியாளர்கள் நேரம் விரயமாவதாக தெரிவித்திருந்தனர். அதை முறியடிக்கும் வகையில் இத்தேர்தல் நடக்கிறது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட வேண்டிய அவசியம் இப்போது இல்லை. தமிழ்நாட்டு நிதி நிலைமையில் ரூ.1,200 கோடி ஒதுக்கி, தலைமைச் செயலகம் கட்ட வேண்டியது இல்லை. அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் மீனவர்களின் போராட்டம் நியாயமானது. எனவே இடத்தை முதல்வர் கண்டிப்பாக மாற்றி வேறு இடத்தை அறிவிக்க வேண்டும்” என்றார்.
இதேபோல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “நீண்டகாலம் முதல்வராக இருக்கும் ரங்கசாமி தட்டாஞ்சாவடியில் போட்டியிட்டு, தற்போது ராஜினாமா செய்து ஏன் புறக்கணித்துள்ளார் என்ற கேள்வி எழுகிறது. இத்தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசு திட்டங்களையும், பாஜக அஜெண்டாவை நிறைவேற்றும் சூழலில்தான் புதுச்சேரி அரசு உள்ளது.
இந்தத் தேர்தலை திணிக்கப்பட்ட தேர்தலாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். ஆளுங்கட்சி வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் அரசு இயந்திரம் அவர்களுக்கு பின்னால் முழுமையாக இயங்குகிறது. தமிழ்நாட்டில் இரண்டு இடங்களிலும் சுதந்திரமாக தேர்தல் நடைபெறவில்லை என்பதுதான் எதார்த்தமான கள நிலவரம் ஆகும்” என்று தெரிவித்தார்.