வெப்ப தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - ஒரு விளக்கம்

வெப்ப தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? - ஒரு விளக்கம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் எதிர்வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. வெப்பதாக்கத்திலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றிட வேண்டும். அன்றாட தட்ப வெப்ப நிலை அறிய செய்தித்தாள் படிக்க வேண்டும்.

வீடுகளில் மின்விசிறி மற்றும் ஈரத்துணிகளை பயன்படுத்துதல் வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரில் நீராட வேண்டும். தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான இறுக்கமில்லாத கதர் ஆடைகளை அணிய வேண்டும்.

கண்களுக்கு கூலிங்கிளாஸ் அணிய வேண்டும். வெயிலில் செல்லும் போது குடை பயன்படுத்த வேண்டும். வெளியில் வேலை செய்பவர்கள் தலைக்கு தொப்பி, குடை மற்றும் ஈரத்துணியினை தலை, கழுத்து மற்றும் முகம் ஆகிய பாகங்களில் அணிந்து வேலை செய்ய வேண்டும்.

உப்பு கரைசல் (ORS), வீட்டில் தயாரிக்கப்பட்ட நீர் ஆகாரம், எலுமிச்சை ஜூஸ், லெஸி மற்றும் மோர் ஆகியவை உடம்பில் உள்ள நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதால், இதனை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வெயில் குறைவாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகளை செய்ய திட்டமிடல் வேண்டும்.

வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளையை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in