

கிருஷ்ணகிரி: சூளகிரி பகுதியில் வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க விவசாயிகள் பழைய வேட்டி, சேலை மற்றும் துணிகள் மூலம் வயல்களில் வேலி அமைத்துள்ளனர்.
சூளகிரி மற்றும் வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் மலை மற்றும் வனப்பகுதியையொட்டி உள்ளன. இப்பகுதி மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.
விலங்குகளால் பயிர் சேதம்: குறிப்பாக சூளகிரி, பஸ்தலப்பள்ளி, மேலுமலை, காளிங்கவரம், சின்னாறு, ராமன்தொட்டி, ஆவல்நத்தம், கொண்டப்பநாயனப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதியையொட்டியுள்ளது.
மேலும், மலை அடிவாரம், காப்புக்காடுகளை ஒட்டி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்படுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், வன விலங்குகளிடமிருந்து
பயிர்களைக் காக்க புதிய முயற்சியாக விவசாயிகள் நெல், ராகி உள்ளிட்ட வயல்களில் பழைய வேட்டி, சேலை மற்றும் துணிகளைக் கொண்டு வேலி அமைத்துள்ளனர். இது ஓரளவுக்குப் பலன் தருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
மகசூல் வீடு வருவதில்லை: இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: வனம், காப்புக்காடு, மலைகளை ஒட்டியுள்ள நிலங்களில் பயிர் செய்தால், மகசூல் முழுமையாக வீடு வந்து சேருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் யானை, காட்டுப்பன்றி, மயில், மான், குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் பயிர் சேதமடைந்து அதிகளவில் இழப்பு ஏற்படுகிறது.
யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் மட்டுமே வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்படுகிறது. சில நேரங்களில் இழப்பீடு பெறுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக மயில்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை.
தற்காலிக தீர்வு: வன விலங்களிடமிருந்து பயிர்களைக் காக்க தற்காலிக தீர்வாக வயல்களில் வீட்டில் உள்ள பழைய வேட்டி, சேலை மற்றும் துணிகளைக் கொண்டு வேலி அமைத்துள்ளோம். பகலில் காவலுக்கு இருக்கிறோம். இரவில் வேலியில் கட்டப்பட்டுள்ள துணிகள் காற்றில் அசைந்தாடும்போது, ஆட்கள் இருப்பதாக நினைத்து அச்சமடையும் காட்டுப்பன்றிகள் வயலுக்குள் வருவதில்லை. தற்போது, நெல் வயல்களில் இதுபோன்ற வேலி அமைத்து பயிரைப் பாதுகாத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.