

பழநி: கோம்பைபட்டியில் பெரியதுரை மற்றும் கருப்பணசுவாமி கோயில் திருவிழாவில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 300 ஆடுகளை சமைத்து இன்று 10,000 பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகேயுள்ள கோம்பைபட்டியில் பெரியதுரை, கருப்பணசுவாமி,செல்வவிநாயகர், தன்னாசியப்பன், பொலக்கருப்பு கோயில் திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழா ஏப்.24-ம் தொடங்கியது. அன்று மாலை 6 மணிக்கு தீர்த்தக் கலசம், குதிரை மற்றும் கருப்பணசுவாமி சிலை ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து,இரவு 8 மணிக்கு தீர்த்தம் செலுத்துதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஏப்.25) கருப்பணசுவாமிக்கு கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் ஆடு, அரிசி, பால் உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தினர்.மொத்தம் 300 ஆடுகள் பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக வரப் பெற்றன. பின்னர் இவற்றைக் கொண்டு உணவு சமைக்கும் பணி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.
சமையலுக்கு தேவையான பொருட்களை வழங்கியதோடு, சமையல் செய்யும் பணி மற்றும் உணவு பரிமாறும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு மெகா அசைவ விருந்து தொடங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்திருந்து அன்னதானத்தில் பங்கேற்றனர். மாலை 6 மணி வரை நடந்த அன்னதானத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிட்டனர். இதற்கான, ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.