

ராமநாதபுரம்: கைத்தறி சேலையில் ராமாயண போர்க் காட்சியை தத்ரூபமாக வடிவமைத்த பரமக்குடி நெசவாளருக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் பரிசு வழங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகத்தில் 85 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 11,257 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இப்பகுதியில் கைத்தறி பருத்தி சேலைகள் மற்றும் செயற்கைப்பட்டு காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு, கோ-ஆப்டெக்ஸ் மற்றும் பிற விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. 2022-2023-ம் ஆண்டிற்கு தமிழக அளவில் மாநில நெசவாளர் விருதை, பரமக்குடியைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எம்.கே.சரவணன் பெற்றுள்ளார்.
இவர் ராமாயண போர்க் காட்சியினை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்துள்ளார். இதற்கு முதல் பரிசாக ரூ.5 லட்சமும், சான்றிதழும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றுள்ளார். மேலும், கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினைச் சேர்ந்த உறுப்பினர் ஜி.எல்.நாகராஜன் என்பவர், இயற்கை காட்சியினை தத்ரூபமாக கைத்தறி சேலையில் வடிவமைத்ததற்காக இரண்டாம் பரிசாக ரூ.3 லட்சம் பெற்றுள்ளார்.
நெசவாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பரமக்குடி கைத்தறி உதவி இயக்குநர் வ.ரகுநாத் மற்றும் கைத்தறி துறையினைச் சேர்ந்த அலுவலர்கள் பரிசு பெற்ற நெசவாளர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் பாராட்டு தெரிவித்தனர். கடந்த வருடம் கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயில் யானை, காளை சிற்பம் பொறித்த கைத்தறி சேலையை வடிவமைத்தற்காக பரமக்குடி மகாகவி பாரதியார் நெசவாளர் சங்கத்தின் தலைவர் ஜி.டி.சரவணன் என்பவர் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.