சமூக வலைதளம் மூலம் காதல்: சீனப் பெண்ணை மணந்த கடலூர் இளைஞர்

கடலூரில் சீன பெண்ணை தமிழ் முறைப்படி பாலச்சந்தர் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.
கடலூரில் சீன பெண்ணை தமிழ் முறைப்படி பாலச்சந்தர் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.
Updated on
2 min read

கடலூர்: சமூக வலைதளம் மூலம் சீனப் பெண்ணை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் தமிழர் முறைப்படி தாலி கட்டி கடலூர் இளைஞர் பாலச்சந்தர் என்பவர் திருமணம் செய்து கொண்டார்.

கடலூர் மஞ்சக்குப்பம் மேற்கு வேணுகோபாலபுரத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவருக்கும் சீன நாட்டை சேர்ந்த யீஜியோ என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இதற்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி இன்று (ஏப்.10) காலை கடலூர் முதுநகரில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்மதத்துடன், தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

மணமகன் பாலச்சந்தர், மணமகள் சீன நாட்டைச் சேர்ந்த யீஜியோவிற்கு தாலி கட்டினார். மணமகன் தமிழர் முறைப்படி பட்டு வேஷ்டி, சட்டை அணிந்திருந்தார். மணமகள் பட்டு புடவை, தங்க நகைகள் அணிந்து இருந்தார். யாக குண்டம் அமைத்து மந்திரம் முழங்க மேளதாளத்துடன் தாலி கட்டி திருமணம் நடைபெற்றது. மணமகளின் உறவினர்கள், மணமகனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்வுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

இது குறித்து மணமகன் பாலச்சந்தர் கூறியதாவது: ''சீனா மற்றும் பாங்காங்கில் தொழில்முனைவராக இருந்து வருகின்றேன். அப்போது எனக்கும் சீனா நாட்டை சேர்ந்த யீஜியோவிற்கும் சமூக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இது, நாளடைவில் நல்ல நட்பாக மாறி பின்னர் காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இருவரும் மனதளவில் காதல் ஏற்பட்டு இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் முறைப்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணியதால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு இருந்த காதலுடன் எங்களது வாழ்க்கைப் பயணத்தை ஆனந்தமாக கடப்போம் என நம்புகிறோம்” என்றார்.

இவர்களது திருமணத்தை தொடர்ந்து பாலச்சந்தர் சகோதரர் பாலமுருகனுக்கும் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பவித்ராவுக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரே மேடையில் ஒரே நாளில் அண்ணன் மற்றும் தம்பிக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in