

ஈரோடு: பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதிய பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தங்கள் நினைவுகளை போற்றும் வகையில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளனர். மாணவர்களின் பள்ளிப் பருவத்தில் கடைசி வகுப்பாக பிளஸ் 2 வகுப்பு அமைந்துள்ளது.
இந்த வகுப்பில் பயின்று, அரசு பொதுத்தேர்வை எழுதி முடித்தவுடன், மாணவர்கள் பள்ளியை விட்டு பிரியும் சூழல் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக நேசித்த ஆசிரியர்கள், சக மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமல்லாது, வகுப்பறை, பள்ளி வளாகம், உணவகம் என ஒவ்வொன்றையும் மனதில் பாரத்தோடு மாணவ, மாணவியர் பிரிந்து செல்வர்.
இந்த பிரிவுக்குப் பின்பும் நட்பு தொடர்பவதற்காக அந்த காலத்தில் ஆட்டோகிராப் புத்தகத்தில் கையெழுத்து, முகவரி பெற்றதில் தொடங்கி, தற்போது செல்போனில் செல்பி, குழு புகைப்படம் எடுப்பது வரை பல்வேறு வகைகளில் நினைவுகள் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் பெருந்துறை அரசுப் பள்ளியில், பிளஸ் 2 வேளாண் பிரிவு மாணவர்கள், பள்ளி நினைவை போற்றும் வகையில், மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வின் கடைசி தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.
இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பில் விவசாய பாடத்தை விருப்ப பாடமாக படித்த 54 மாணவர்கள், தேர்வின் இறுதி நாளில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஒன்று கூடினர்.
தங்கள் பள்ளி நினைவைப் போற்றும் வகையில், கல்லூரி வளாகத்தில், 500 மரக்கன்றுகளை நட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஈரோடு ரவுண்ட் டேபிள் 98 மற்றும் அவல் பூந்துறை ரோட்டரி சங்கத்தினர் மாணவர்கள் நடுவதற்கான வேம்பு, புங்கன், நாவல், பூவரசு, மகிழம் உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கியதோடு, சொட்டு நீர் பாசன வசதி செய்து கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
பள்ளியை விட்டு நாங்கள் பிரிந்து சென்றாலும், இந்த இடத்திற்கு எப்போது வந்தாலும், இந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரமாகி நின்று எங்களின் நினைவுகளை வெளிப்படுத்தும் என மாணவர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், பெருந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்குமார், மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கீதா, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் உதயகுமார், பள்ளி வேளாண் ஆசிரியர் கந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.