

எழுத்துலகில் ஆகச் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழரான இவர் தமது நட்பதிகாரத்தை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
“அப்போது எனக்கு வயசு 14. ஜெயலலிதாவுக்கு 9 வயசு. அவருக்கும் எனக்கும் நான்கரை வயது வித்தியாசம். ஜெயலலிதாவை நான் ‘அம்மு’ என்றும், அவர் என்னை ‘ஜிபு’ என்றும்தான் அழைத்துக்கொள்வோம். அந்த வயதிலேயே அவ்வளவு அழகாக இருப்பார் ஜெயலலிதா. அதிகமாக யாருடனும் அவர் பேசமாட்டார். சரசா டீச்சரிடம் நடனம் பயிலும் அத்தனை மாணவிகளும் விஜயதசமியன்று பழங்கள், சன்மானம் சகிதம் டீச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று, நடனம் ஆடிக் காட்டுவது வழக்கம். நாங்கள் எல்லோரும் அவசர அவசரமாய் எங்கள் நடனத்தை முடித்துக்கொண்டு, அம்மு ஆடுவதைக் காண ஆவலுடன் காத்திருப்போம். ‘ராம சௌந்தர்யம்' என்ற பதத்துக்கு அம்மு ஆடிப் பார்க்க வேண்டுமே! அவ்வளவு அழகாக ஆடுவார்.
அதன் பிறகு, அவருக்கும் எனக்கும் இடையே மிகவும் ஆழமான நட்பு உருவானது. என் பிறந்தநாளுக்கு எங்கள் வீட்டிற்கு அம்மு வந்து பரிசு தந்திருக்கிறார். நான் அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறேன். குறுகிய காலத்தில் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகிவிட்டோம். என் சித்தப்பா பெண் சாந்தியும் அவரும் ஒரே வயதுதான். என்றாலும், அவரைவிட என்னிடம்தான் அம்முவுக்குத் தனிப் பாசம் இருந்தது. நான் அவர் விட்டிற்கு சென்று அதிகாலை நேரத்தில் பலமுறை தூங்கிக் கொண்டிருக்கும் அம்முவை எழுப்பிவிட்டிருக்கிறேன். அப்போது அந்த முகத்தைப் பார்த்தால், மேகங்களிலிருந்து வெளிப்படும் முழு நிலவுபோல் ஜொலிக்கும்!
எனக்குக் கல்யாணம் ஆனதும், நான் போபால் போய்விட்டதால், எங்கள் நட்பில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டது. போபாலில் இருந்து மீண்டும் சென்னைக்கே வந்தபிறகு பழையபடி எங்கள் நட்பு தொடர்ந்தது. இந்தக் கால இடைவெளியில் அம்மு பிஸியான முன்னணி சினிமா நட்சத்திரமாக மாறியிருந்தார். 1966-இல் நான் போபாலில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து 1983-இல் அம்மு அரசியலில் இறங்கியது வரை நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டோம். நான் விழுப்புரத்தில் குடியிருந்தபோதும் அவரைச் சந்திக்க நினைத்தபோது சென்னைக்கு வருவேன். ‘நான் இன்னைக்கு ஃப்ரீ நீ வர முடியுமா?’ என்று அம்மு தொலைபேசியில் தெரிவித்தால் போதும், புறப்பட்டு உடனடியாக சென்னைக்கு வந்துவிடுவேன்.
போபாலிலிருந்து சென்னைக்கு வந்ததும், அண்ணாசாலையில் ஜெமினிக்கு அருகே இருக்கும் கதீட்ரல் கார்டனில் ஒரு மாடி வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். அம்முவுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார். நான் அப்போது வேலைக்குச் செல்ல ஆரம்பிக்காததால் வீட்டில்தான் இருப்பேன். சில நேரங்களில் ஷூட்டிங் நடக்கும்போது கிடைக்கும் இடைவேளைகளில் மேக்அப்புடனே அம்மு வருவார். சுவாதீனமாக சமையலறை மேடையின் மீது ஏறி அமர்ந்து கொள்வார். நான் அவருக்கு மொறுமொறுப்பாக சுடச்சுட தோசை வார்த்துக்கொடுப்பேன். அன்று நடந்த விஷயங்களைப் பற்றி மனம் விட்டுப் பேசுவார். நானும் என்னைப் பற்றி அவரிடம் பேசுவேன். நிறைய தடவை நாங்கள் இருவரும் சேர்ந்து வெளியே போயிருக்கிறோம்.
பல முறை நாங்கள் இருவர் மட்டும் தனியாக மகாபலிபுரம் போயிருக்கிறோம். அங்கிருந்த சில்வர் ஸாண்ட்ஸில் ஒரு காட்டேஜ் புக் செய்து தங்குவோம். காலார பீச்சில் நடப்பது, விளையாடுவது, மனம் விட்டுப் பேசுவது, ஜோக் சொல்லிச் சிரிப்பது என்று நாங்கள் இருவர் மட்டுமே பொழுதைப் போக்கிய அற்புத நாட்கள் அவை. அப்படி ஒருமுறை காட்டேஜில் தங்கியிருந்தபோது, அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் ஒருவர் பக்கத்து காட்டேஜில் தங்கியிருப்பது தெரியவந்தது. முதலில் அந்த இயக்குநரின் டிரைவர் வந்து “அம்மா, ஐயா வந்திருக்கிறார்” என்றார். “ஓ அப்படியா...” என்று கூறிவிட்டு அம்மு என்னுடன் பேசுவதில் கவனம் செலுத்தினார். அரை மணி நேரம் கழித்து, அந்த இயக்குநரின் உதவியாளர் வந்து, “அம்மா, டைரக்டர் வந்திருக்காரும்மா” என்றார். “அப்படியா” என்றார் அம்மு. பிறகு “வா ஜிபு, நாம வாக் போகலாம்” என்று என்னுடன் பீச்சில் நடக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த இயக்குநரைப் போய் அம்மு பார்க்க வேண்டும் என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள் போல! ஆனால், அம்மு அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. கடைசியில் அந்த இயக்குநரே அம்முவைத் தேடி வந்தார். “என்னம்மா சௌக்கியமா? நீங்க இங்க வந்திருக்கறதா சொன்னாங்க. பார்க்கலாம்னு வந்தேன்” என்றவரிடம் மரியாதையாய் இரண்டு வார்த்தைகள் பேசி அனுப்பினார் அம்மு. எவ்வளவு ஒரு கமாண்டிங் பர்சனாலிட்டி! அவர் நினைத்திருந்தால், அந்த டைரக்டரைப் போய்ப் பார்த்து வணக்கம் தெரிவித்து வந்திருக்கலாம். அப்படிச் செய்வதில் தவறொன்றும் இல்லைதான். அதனால், திரைப்படங்களில் சான்ஸ் கிடைக்கும் வாய்ப்பைக்கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், அம்மு அப்படிச் செய்யவில்லை. ‘எனக்கு என் தோழியும், அவளுடன் செலவழிக்கும் நேரமும் ரொம்பவும் முக்கியம். அவளுடன் நான் அமைதியாக இருக்க வந்திருக்கிறேன்’ என்பதுபோல் நடந்துகொண்ட அம்முவின் கம்பீரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பதற்கேற்ப, பிற்காலத்தில் அரசியலில் ஜொலிப்பதற்கான தகுதிகள் எல்லாம் அப்போதே அவரிடம் இருந்தன.
சில பேரை திரையில் பார்க்கும்போது அழகாகத் தெரிவார்கள். ஆனால், அம்மு நேரில்தான் அழகு, கற்பூர புத்தி அவருக்கு. ஒன்று சொன்னால் டக் டக்கென்று புரிந்துகொள்வார். அம்மு, சர்ச் பார்க் கான்வென்டில் General Proficiency வாங்கியவர். அதாவது, ஆல் ரவுண்டர் பரிசு வாங்கியவர். “உனக்கிருக்கிற புத்திக்கு நீ மட்டும் ஐ.எஃப்.எஸ். படிச்சா, பெரிய டிப்ளமேட்டா வருவே அம்மு. ஏதாவது, நாட்டுக்கு அம்பாஸிடராகூட போயிடுவ” என்று நான் அவரிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறேன். அப்படிப்பட்ட புத்திசாலித்தனம். கெட்டிக்காரத்தனம் நிறைந்தவர் அம்மு.
பல பரிசுகளை நாங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், சட்டென்று எனக்கு இப்போது நினைவுக்கு வருவது, அவர் முதன்முதலில் எனக்குத் தந்த இன்டிமேட் சென்ட் பாட்டில்தான். “ரெண்டு பாட்டில் சென்ட் வந்தது ஜிபு. எனக்கு ஒண்ணை வெச்சிட்டு உனக்கு ஒண்ணைக் கொண்டு வந்திருக்கறேன்” என்று சொல்லி, அந்த சென்ட் பாட்டிலை எனக்குத் தந்தார். அண்மையில் சிங்கப்பூரிலிருந்து வந்த நண்பர் ஒருவரிடம் ஒரு இன்டிமேட் சென்ட் பாட்டிலை வாங்கி வரச் சொன்னேன் நான், அம்முவின் நினைவாக!”
- தொடர்புக்கு: gandhiraja.g@hindutamil.co.in