Published : 05 Feb 2023 04:25 AM
Last Updated : 05 Feb 2023 04:25 AM
பழநி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஆன்மிக நகரமான பழநிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையால் விழாக்கோலம் பூண்டது. காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்பாகவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கினர்.
நேற்று (பிப்.4) தைப்பூசத்தை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் பழநியில் குவிந்தனர். மலைக் கோயிலுக்குச் செல்ல யானைப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டது. மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த பகுதி பகுதியாக பக்தர்களை மலைக்குச் செல்ல போலீஸார் அனுமதித்தனர். பழநி மலைக்கோயில், திரு ஆவினன் குடி கோயில் மற்றும் பெரிய நாயகியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கிரி வீதிகளில் மலையைச் சுற்றி வந்து அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயிலில் வழிபட்டனர்.
பின்னர் மலைக் கோயிலுக்குச் சென்று தண்டாயுதபாணி சுவாமியை பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
குளிர்வித்த சாரல் மழை: காலை முதலே பழநியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மழையில் நனைந்தபடி பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். கிரி வீதி, சந்நிதி வீதிகள் உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரி வீதிகளில் ஆடி வந்தனர்.
பலர் அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். புனித நீராட வந்த பக்தர்களால் பழநி சண்முக நதி, இடும்பன் குளத்தில் அதிகளவில் கூட்டம் அலைமோதியது. முடி இறக்கம் செய்யும் இடத்தில் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். தைப்பூச விழாவை முன்னிட்டு திரண்ட பக்தர்களால் பழநி நகரமே விழாக்கோலம் பூண்டது.
தேரோட்டத்தில் கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், நவீன், விஷ்ணு, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப் பொய்கை கந்த விலாஸ் உரிமையாளர் பாஸ்கரன் உட்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். பழநி மலைக்கோயிலில் நடந்த சாயரட்சை பூஜையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
வழிநெடுகிலும் பல இடங்களில் பக்தர்களுக்கு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கிய உணவை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். டிஐஜி அபிநவ் குமார் தலைமையில் 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரம், 40 இடங்களில் சிசிடிவி கேமரா மற்றும் ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.
சிறப்பு ரயில், பேருந்து: தைப்பூச விழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் மதுரை - பழநி, கோவை - பழநிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதே போல் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பழநியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT