வேற்றுமையில் ஒற்றுமையை நாங்கள் விரும்புகிறோம் - மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி தகவல்

வேற்றுமையில் ஒற்றுமையை நாங்கள் விரும்புகிறோம் - மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி தகவல்
Updated on
1 min read

சென்னை: இந்தியாவின் கலாச்சார தலைநகர் சென்னை. சென்னையின் கலாச்சாரப் பெருமிதம் மியூசிக் அகாடமி. நூறாவது ஆண்டை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு இசை விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், அதன் தலைவர் என்.முரளி நமக்களித்த பேட்டி:

மியூசிக் அகாடமியின் 96-வதுஆண்டு இசை விழாவில் என்னென்ன சிறப்புகள் உள்ளன?

கரோனா பேரிடரால் கடந்த 2ஆண்டுகளாக இணையம் வாயிலாக மட்டுமே நிகழ்ச்சிகள் நடந்தன.ரசிகர்கள் முன் நிகழ்ச்சியை நடத்துவதற்கு கலைஞர்கள் ஆவலாக இருக்கின்றனர். கலைஞர்களின் இசைத் திறனை நேரடியாகக் கண்டுரசிப்பதற்கு ரசிகர்களும் ஆவலாகஇருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் ‘சங்கீத கலாநிதி’, ‘நிருத்தியகலாநிதி’ உள்ளிட்ட விருதுகளுக்குத் தேர்வானவர்களுக்கும் சேர்த்து இந்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. மியூசிக் அகாடமியின் 96-ம் ஆண்டு இசை விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பது சிறப்பு.

கட்டிடத்துக்கு 60-வது ஆண்டு

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் 1955-ல்மியூசிக் அகாடமி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1962-ல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆக, மியூசிக் அகாடமி கட்டிடத்துக்கு இது 60-வது ஆண்டு!

அதேபோல் மியூசிக் அகாடமி இசை விழாவை இதற்கு முன் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி 1975 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் தொடங்கி வைத்திருக்கிறார். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.ஒருமுறை தொடங்கி வைத்திருக்கிறார். முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா இருமுறை தொடங்கி வைத்திருக்கிறார். 1996-க்குப் பிறகு அதாவது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் முதல்வராக, மியூசிக் அகாடமியின் இசைவிழாவை இன்று தொடங்கிவைப்பது கூடுதல் சிறப்பு.

சாதி, மதம் பார்ப்பதில்லை

வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் நாட்டுக்கு, கலை களின் மூலமாக மியூசிக் அகாடமி எப்படி உதவுகிறது?

எங்களின் நாட்டிய விழாக்களில் பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, ஒடிசி, கதக், குறவஞ்சி எல்லாவற்றுக்கும் இடம் அளிக்கிறோம். இசையைப் பொறுத்தவரை செவ்வியல் இசை வடிவமான கர்னாடக இசைக்கு மேடை அளிப்பதையே எங்களின் குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.

கலைஞர்களிடம் இருக்கும் கலையை முன்னிறுத்தியே அவர்களுக்கான மரியாதையை நாங்கள் செய்கிறோம். சாதி, மதம், பாலினபேதம் பார்க்காமல் கலைஞர்களிடையே இருக்கும் கலையைப் பெருமைப்படுத்துகிறோம்.

மாற்றுத் திறனாளியான வயலின் மேதை எம்.சந்திரசேகரனுக்கு `சங்கீத கலாநிதி' விருதை கடந்த 2005-ம் ஆண்டிலேயே அளித்திருக்கிறோம். அவருக்கு இப்போது 85 வயது. இசையின் ஊற்றுக்கண் அவரின் வயலினில் இன்றைக்கும் சுரந்து கொண்டிருக்கிறது.

நாகசுர கலைஞர்கள், தவில் கலைஞர்களுக்கு விருதுகள் அளித்திருக்கிறோம். திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜுக்கு ‘நிருத்திய கலாநிதி’ விருது கொடுக்கவிருக்கிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமையை நாங்கள் விரும்புகிறோம். கலைகளின் மூலமாக எங்களால் இயன்றஅளவுக்கு அதை சாத்தியப்படுத்துவதை குறிக்கோளாக வைத்திருக்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in