மதுரை | சமையல் தொழிலில் ஈட்டும் வருவாயில் ஏழைகளுக்கு தினமும் உணவளிக்கும் லூர்து மேரி!
மதுரை: சமையல் தொழில் மூலம் கிடைக்கும் வருவாயில் மதுரை வைக்கம் பெரியார் நகர் லூர்து மேரி தினமும் ஏழைகளுக்கு உணவளிக்கிறார். கரோனா நேரத்தில் களமிறங்கி தொடரும் அவரது சேவையை மக்கள் பாராட்டியுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா சாமநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட வைக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் லூர்து மேரி. இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மதுரை மாநகருக்கு மிக அருகிலுள்ள வைக்கம் பெரியார் நகர் பகுதியில், குண்டும், குழியுமான ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் குறைவால் மக்கள் படும் கஷ்டங்களை அறிந்த லூர்து மேரி, தனது சொந்த செலவில் கட்டிட கழிவுகளை விலைக்கு வாங்கி, அவற்றை குண்டு, குழியுமான ரோடுகளை நிரப்பி சீரமைக்கிறார்.
மேலும், கரோனா காலத்தில் இருந்தே பொதுமக்களுக்கு ஏதோ ஒருவகையில் உதவிடும் அவர், தினமும் 20 முதல் 50 பேருக்கு உணவளிக்கிறார். கேட்டரிங் தொழில்புரியும் மேரி, தனது இரு மகன்களும் ஆட்டோ ஓட்டி கிடைக்கும் வருமானத்தின் மூலம் இந்த பொதுச் சேவையை செய்வதாக அவர் தெரிவிக்கிறார்.
தற்போது அதிகாரிகளே கண்டு கொள்ளாத சூழலில் தனி ஆளாக களத்தில் இறங்கி என், ஊர், எனது கிராமம், எங்களது மக்கள் என்ற தன்னார்வத்தில் தன்னால் முடிந்த சேவையை பொது மக்களுக்காக செய்திடும் லூர்து மேரியின் செயல்பாடுகளை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.
