

மதுரை: புத்தகங்களை வாசிப்பை நேசித்தபடியே பயணிக்க, வசதியாக வெகுதூர ரயிலில் நூலகம் என்ற புதிய திட்டத்தை முதன்முறையாக மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
பொதுவாக வெகுதூர ரயில்களில் பயணம் என்றாலே வாசிப்பை நேசிக்கும் பயணிகள் தங்களின் பயண களைப்பை போக்கும் விதமாக வார, மாத இதழ்களை வாங்கிக் கொண்டு, பயணிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதிகாலை, மாலை நேரங்களில் பெரிய ரயில் நிலையங்களில் நாளிதழ், மாலை இதழ்கள் விற்பது இன்றைக்கும் வழக்கம். மேலும், ஒவ்வொரு பெரிய ரயில் நிலையத்திலும் புத்தகம், இதழ்கள், பத்திரிகை விற்பனைக்கென்றே ஒரு கடையும் ஒதுக்கப்படுவது உண்டு.
அந்த வகையில் மதுரை ரயில்வே கோட்டம் சார்பில், கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆலோசனை யின்பேரில், முதன்முறையாக ‘புத்தகங்களுடன் ஒரு பயணம் என்ற புதிய திட்டம்’ ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தும் விதமாக பிரபல வார, மாத இதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் முதலில் மதுரையில் இருந்து புறப்பட்ட மதுரை - பிகானீர் வாராந்திர விரைவு ரயிலில் தொடங்கி வைக்கப்பட்டது. பரிசோதனை அடிப்படையில் குளிர் சாதன முதல் வகுப்பு பெட்டியிலுள்ள எட்டு அறை களிலுள்ள பயணிகளுக்கு 3 தமிழ், 2 ஆங்கிலம், 5 பிற மொழி இதழ்கள் வழங்கப்பட்டன. இப்புதிய திட்டத்தை மதுரை முது நிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மகேஷ் கட்கரி அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் வரவேற்பபை பொறுத்து பிற ரயில் களிலும் விரிவுப் படுத்த ரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஏற்கெனவே வைகை ரயில் பயணம் தொடங்கிய காலத்தில் மொபைல் நூலகம் ஒன்று அதில் செயல்பட்டிருக்கிறது. காலபோக்கில் அது கைவிடப்பட்டுள்ளது என்றாலும், தற்போது, பரிசோதனை அடிப்படையில் நீண்ட தூர ரயிலில் புத்தகங்களுடன் கூடிய பயணத்திற்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குளிர்சாதன முதல் வகுப்பு ரயில் பெட்டியிலும் வலை போன்ற பவுச்களில் ஆங்கில, தமிழ் வார, மாத இதழ்கள் வைக்கப்படும். நூலகம் போன்று விரும்புவோர் படித்துவிட்டு, பிற பயணிகள் படிக்கும் வகையில் அதே பவுச்சில் புத்தகங்களை திருப்பி வைக்கவேண்டும். வரவேற்பை பொறுத்து பிற வெகு தூர ரயில்களிலும் தேவையான புத்தகங்களுடன் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்’’ என்றனர்.