பெண் குழந்தைகள் பிறந்தால் மருத்துவக் கட்டணம் இலவசம்: புனே மருத்துவர் அசத்தல்

மருத்துவர் கணேஷ் ராக் | படம்: ட்விட்டர்
மருத்துவர் கணேஷ் ராக் | படம்: ட்விட்டர்
Updated on
1 min read

புனே: தனது மருத்துவமனையில் பெண் குழந்தைகளை ஈன்றெடுக்கும் குடும்பங்களிடம் மருத்துவக் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் இலவசமாக பிரசவம் பார்த்து வருகிறார் புனேவை சேர்ந்த மருத்துவர் ஒருவர். அவரது பெயர் கணேஷ் ராக். கடந்த 11 ஆண்டுகளாக இந்த பணியை செய்து வரும் அவர், இதுவரையில் சுமார் 2,400 பெண் குழந்தைகளுக்கு இலவசமாக பிரசவம் பார்த்துள்ளதாக தகவல்.

மருத்துவ கட்டணத்தில் முழு விலக்கு கொடுப்பது மட்டுமல்லாது பூவுலகிற்கு புதுவரவாக வருகை தரும் பெண் சிசுக்களுக்கு பலமான வரவேற்பும் அளிக்கிறார். கடந்த 2012 முதல் அவர் இந்த பணியை செய்து வருகிறார் என தெரிகிறது. இந்த சிறு முயற்சி பக்கத்து ஊர், மாநிலம் என கடந்து இப்போது உலக அளவில் சென்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் உள்ள ஹடப்சர் எனும் இடத்தில் மகப்பேறு மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை அவர் நடத்தி வருகிறார். “எங்கள் மருத்துவமனை தொடங்கப்பட்ட ஆரம்ப காலங்களில் குறிப்பாக கடந்த 2012-க்கு முன்னர் எங்கள் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பிறந்தால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தயக்கத்துடனே அந்த பிஞ்சுக் குழந்தையை பார்க்க வருவார்கள். சிலர் அந்த குழந்தையை பார்க்க வராமலும் இருந்துள்ளனர். அது தான் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. பெண் குழந்தைகளை காக்கும் நோக்கிலும், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சியை முன்னெடுத்தேன்” என மருத்துவர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் சர்வே முடிவுகளின் படி கடந்த 10 ஆண்டுகளில் ஆறு கோடி பெண் சிசுக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொல்கிறார். இதுவும் ஒருவகையிலான இனப்படுகொலை என்பது அவரது கருத்து.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in