

எவ்வளவு செல்வமிருந்தாலும் எவ்வளவு புகழிருந்தாலும் 80 வயதில் சோர்ந்து விடுவதே பெரும்பாலான பிரபலங்களின் இயல்பு. காலவோட்டத்தில் பலர் மறக்கப்பட்டவர்களாகவும் அவர்கள் எங்கே வாழ்கிறார்கள் என்பதுகூடத் தெரியாமல் முதுமை அவர்களை முடக்கியிருக்கும். இந்த சட்டகத்துக்கு வெளியே நிற்கும் கம்பீரமும் ஒரு நதிபோல் எங்கும் இடை நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் கலையாளுமையும் இன்று 81வது பிறந்த நாளைக் கொண்டாடும் பன்முகக் கலைஞர் சிவகுமாருக்கு உண்டு.
திரை நடிப்பைக் கடந்து, ஓவியம், எழுத்து, பேச்சு என பல தளங்களில் தன்னுடைய தனித்த அடையாளத்தைப் பதிந்துகொண்டே வந்திருக்கும் சிவகுமார் 75 வயதைக் கடந்தபோது ‘இராமாயணம்’ குறித்தும் ‘மகாபாரதம்’ குறித்தும் ஆற்றிய இருபெரும் சொற்பொழிவுகள், இந்தியப் பண்பாட்டின் பெரும் தூண்களாக விளங்கும் அவ்விரு இதிகாசங்களையும் கற்று, அதில் கரை கண்டு ஆய்வுரை வழங்கிய அறிஞர் பெருமக்களையே ஆச்சர்யம் கொள்ள வைத்தன.
தமிழ்க் கவிதையின் உச்சங்களில் ஒன்றாக இருக்கும் கம்பராமாயணத்திலிருந்து தேர்ந்துகொண்ட 100 பாடல்களின் வழியாக, மொத்த ராமகாதைலும் மானுட சமூகம் எடுத்துக்கொள்வதற்கு ஏற்ற அறம் எப்படிக் கொட்டிக் கிடக்கிறது என்பதை எளிய, ஆனால், எழிலார்ந்த மொழியில் எடுத்து வைத்தார் சிவகுமார். கார்டூன் திரைப்பட வடிவிலும் கூட மகாபாரதக் கதையின் ஆன்மாவை ஏந்திக்கொள்ளப் பொறுமையில்லாத தலைமுறைக்கு, ஒரு மகத்தானக் கதைசொல்லியைப்போல் எளிய பேச்சு மொழியில் இலக்கிய ரசம் குன்றாமல் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.
புறநானூற்றின் சூழியல் கவி எனப் புகழத் தக்க கபிலரின் நூறு பூக்கள் பாடலை மூச்சுவிடாமல் அடுக்கிச் சொல்லும் ஆற்றல் சிவகுமாருக்கே உரித்தான தனித்த நினைவாற்றலின் குன்றாத மலர்ச்சி.
ஏற்கனவே செய்த தனது மேடைச் சாதனைகளை சிவகுமாரே மீண்டும் முடியடித்திருக்கிறார். நடந்து முடிந்த ஈரோடு புத்தகத் திருவிழாவில், தேர்ந்தெடுத்த 100 திருக்குறள்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்த நிஜ மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளை 4 மணி நேரம் தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி, 81வது வயதுக்கு இளமையைக் கூட்டியிருக்கிறார்.
உலகம் முழுமைக்கும் பொருந்தக் கூடிய அற வாழ்க்கை முறைதான் தமிழர்களின் வாழ்க்கை முறை என்பதை, வள்ளுவப் பேராசன் தேர்ந்தெடுத்த சொற்களின் வழியே கோத்துக் கொடுத்த வாழ்வியல் அடிப்படைதான் திருவள்ளுவம். அதை இன்றைய தலைமுறைக்கும் சுவாரஸ்யம் குன்றாமல் எடுத்துச் சொல்ல என்ன வழியிருக்கிறது என்று ஆராய்ந்த சிவகுமார், ஒரு வழக்கறிஞர், 109 ஆண்டுகள் வாழ்வாங்கு வாழ்ந்த கிராமத்துப் பெண் என பல எளிய மனிதர்களில் தொடங்கி, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த அரசியல் தலைவர்கள், பொதுவாழ்வில், கலை வாழ்வில் சாதித்த பிரபலங்கள், அரசியல் பதவிகளுக்கு வெளியே நின்று உலக மக்களை வென்ற காந்தி, மண்டேலா உள்ளிட்டப் பேராளுமைகள் வரை, தேர்ந்தெடுத்த குறள்களுக்கு நூறு விழுக்காடு பொருத்தமாக வாழ்ந்தவர்களின், வாழ்ந்துகொண்டிருப்பவர்களின் வாழ்க்கையைக் கதைகளைப் பொருத்தி விளக்கி திருக்குறளுக்கு சிவகுமார் தீட்டியது தமிழின் தலை சிறந்த சொல்லோவியம் ஆகிவிட்டது. பத்தாயிரம் பார்வையாளர்கள் ராணுவ ஒழுங்குடன் ஒரே இடத்தில் குழுமியிருந்து கேட்ட அவரது ‘திருக்குறள் 100’ உரையைக் காணொலியாகக் கேட்பவர்களையும் அதைப் புத்தகமாக வாசிப்பவர்களையும் திருக்குறளின் வழியில் வாழ்வதே எல்லா வகையிலும் வெற்றிகரமான வாழ்க்கை என்பதை உணர வைத்துவிடும். உலகிலிருந்து ‘வெற்றிகரமாக வாழ்வதற்கான ஃபெஸ்ட் செல்லர்’ புத்தகம் எதையும் இனி தமிழில் மொழிபெயர்க்க வேண்டிய அவசியமே இல்லை.
சொல்லும்போது கேட்பவரைத் தன் வயப்படுத்தும் பண்பைக் கொடையாகப் பெற்று, கேட்க விரும்பாதவரையும் விரும்பிக் கேட்குமாறு செய்வதே சிறந்த சொல்வன்மை. அதை எடுத்துக்காட்டும் ..
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்
எனும் குறளுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பன்முகக் கலைஞர் சிவகுமாரை அவரது 81 அகவையில் வாழ்த்துவோம்.. அவரது திருக்குறள் கதைகளை வாசிப்போம்.