

மதுரை: மதுரையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியில் 'பொன்னியின் செல்வன்' புத்தகம் வாங்க ஆர்வம் அதிகரித்ததால் தினமும் 3,000 முதல் 5,000 வரையிலான புத்தகங்கள் விற்பனையாகின.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல், இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் சூழலில், முதல் பாகம் தற்போது திரையரங்குகளில் ஓடுகிறது. இந்நாவல் ஐந்து பாகங்களைக் கொண்டது என்றாலும், நூலின் இரண்டு பாகங்களில் இடம்பெற்றவையே படத்தின் முதல் பாகமாக வந்துள்ளது. எஞ்சிய 3 பாகங்களின் கதையை உள்ளடக்கி அடுத்த ஆண்டு ‘பொன்னியின் செல்வன் - பாகம் 2’ என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பொன்னியின் செல்வன் நாவலை படிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நடந்த புத்தகக் கண்காட்சி மூலம் பொன்னியின் செல்வன் நாவல் தொகுப்பு (தனித்தனி புத்தகங்களாக 5 பாகங்கள்) அதிகமாக விற்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக 2000-க்குப் பிறகு பிறந்த இளைஞர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள் என பலரும் இந்நாவலை படித்துவிட்டு படம் பார்க்கலாம் என ஆர்வத்தில் வாங்கியதாக பதிப்பக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை சர்வோதய இலக்கிய பண்ணை புத்தக நிறுவனத்தைச் சேர்ந்த புரோசத்தம்மன் கூறியது: ''இப்புத்தக கண்காட்சிக்கு முன்னதாகவே 'பொன்னின் செல்வன்' திரைப்பட டிரெய்லர் வெளியானது. புத்தகக் கண்காட்சி 23-ம் தேதி தொடங்கிய நிலையில், அந்தப் படமும் ரீலிசானது. இப்படத்தைப் பார்க்கும் முன்பு, பொன்னியின் செல்வன் நாவலை முடிந்தவரை படித்துவிட்டுச் சென்றால் படத்தின் காட்சிகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் எனக் கருதி பலர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து பொன்னியின் செல்வன் 5 தொகுதிகளை வாங்கிச் சென்றனர். இம்முறையில் சுமார் 50 அரங்குகளில் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் விற்கப்பட்டன.
தினமும் 3000 முதல் 5 ஆயிரம் (25 செட்) புத்தகங்கள் விற்கப்பட்டுள்ளன. பிற நாட்களைவிட கடைசி நாளான நேற்று (அக்.2) சற்று கூடுதலாகவே இப்புத்தகங்களை வாங்கினர். பல பதிப்பகங்களில் தனித்தனி பாகமாக 5 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.400-க்கு விற்றன. கடந்த ஓரிரு நாட்களாகவே மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பொன்னியின் செல்வன் புத்தகங்களை அனுப்பி வைக்க ஆர்டர் வருகிறது. எனக்கு மட்டுமே தினமும் 15 செட் புத்தகம் கேட்டு தகவல் வருகிறது.
இது தவிர, இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகங்கள், சுய முன்னேற்றம், தன்னம்பிக்கை, மருத்துவம் சார்ந்தது அதிலும், இயற்கை மருத்துவம் குறித்த புத்தகங்கள் அதிகமாக விற்றன. மஞ்சள் பப்ளிகேஷன் பதிப்பகத்தின் தன்னம்பிக்கை ஆங்கில புத்தகங்கள் கூடுதலாக விற்றுள்ளன. இவ்வாண்டு புத்தகக் கண்காட்சிக்கு தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தது. மாணவர்களை, குழந்தைகளை படைப்பாளிகளாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் நடந்தன'' என்று அவர் கூறினார்.