

புதுச்சேரி: “நம்மிடம் அளப்பரிய தமிழ் இலக்கியங்கள், படைப்புகள் இருந்தாலும், அவை உலகரங்கில் கவனம் பெறவில்லை” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
நல்லி - திசை எட்டும் 19-வது ஆண்டு மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா, குறிஞ்சிவேலன் முத்து விழா மற்றும் ழொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது. பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி தலைமை தாங்கினார். புதுச்சேரி ராமகிஷ்ண மடம் தலைவர் ஆத்மகணானந்த மகராஜ் நல்லி-திசை எட்டும் விருதுகளை வழங்கி பேசினார். ஆயிஷா. இரா.நடராஜன் (ஆங்கிலம்-தமிழ்), வெங்கட சுப்புராய நாயக்கர் (தமிழ்-பிரெஞ்சு), கண்ணையன் தட்சிணாமூர்த்தி (தமிழ்-ஆங்கிலம்), ஷைலஜா ரவீந்திரன் (தமிழ்-மலையாளம்) ஆகியோர் மொழியாக்க விருது பெற்றனர். குறிஞ்சிவேலனின் ஆவணப் படத்தை திரைப்பட இயக்குநர், நடிகர் பொன்வண்ணன் வெளியிட்டார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வால்மீகி தர்மம், தம்மபதம்-பவுத்தமத அறநூல், தி குறள் (The kural ஆங்கிலம்-தமிழில்), முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர், ''மொழியாக்கப் பணி என்பது இலக்கியத்தில் என்றுமே தனித்துவமான இடம் கொண்ட பணி. மொழிபெயர்ப்பாளர்களை இரண்டாவது நிலையில் உள்ளவர்களாக ஒருபோதும் நாம் கருத முடியாது. புதிய தளங்களை உருவாக்க மொழிபெயர்ப்பாளர்கள் மிக முக்கிய பணியாற்றுகின்றனர். மகாகவி பாரதி தொடங்கி தமிழின் அத்தனை முக்கிய படைப்பாளர்களுமே மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். வேறு மொழியில் அப்படியெல்லாம் எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகளை தாண்டி, வேறு படைப்புகளை மொழி பெயர்த்திருப்பாளர்களா என்று தெரியாது.
அப்படி இருந்தாலும் ஒன்றிரெண்டு பேர் தான் இருப்பார்கள். நம்மிடம் அளப்பரிய தமிழ் இலக்கியங்கள், மிகச் சிறந்த தமிழ் படைப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை உலக அரங்கில் கவனம் பெறவே இல்லை என்பதுதான் ஒரே குறை. சீன இலக்கியம் கவனம் பெற்ற அளவுக்கு தமிழ் இலக்கியம் கவனம் பெறவில்லை. காரணம், அந்த தேசத்தை சேர்ந்த மக்கள் எந்த நாட்டில் வசித்தாலும், சீன இலக்கியங்களை முன்னெடுக்கிறார்கள். உலகம் முழுக்க தமிழர்கள் வசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தமிழ் இலக்கியங்களை முன்னெடுப்பதில்லை. ஒருபுறம் மொழிபெயர்ப்பு வந்துகொண்டே இருக்கிறது. அது சென்றடையும் தூரம் அதிமாக உள்ளது. அந்தப் பணியை இப்போதே நாம் தொடங்கினால், அடுத்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அந்த நாட்டில் ஒரு தமிழ் படைப்பாளியை அவர்களுக்கு தெரியும்.
100-க்கும் மேற்பட்ட நூல்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. அவை கவனம் பெறவே இல்லை. நாம் அதைத்தான் கவனம் பெற வைக்க வேண்டும். உலகில் எந்த நாட்டில் வசித்தாலும் தமிழ் நூல்களை, தமிழ் படைப்பாளிகளை எவ்வாறு அறிமுகம் செய்யப் போகிறீர்கள் என்பதை திட்டமாக செய்தால் 10 ஆண்டுகளுக்குள் தமிழ் இலக்கியத்துக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். பேராசிரியர் ஏ.கே.ராமானுஜம் உள்ளிட்டோர் செய்த பணிகள் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க முக்கிய காரணம். அதுபோன்ற பணியை செய்யக்கூடிய தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். அதற்கான அடிப்படையை இப்போதே நாம் தொடங்க வேண்டும். மொழிப் பெயர்ப்பாளர்கள் பலர் இருந்தாலும் அவர்களுக்கான முன்னுரை அவசியம் வெளியிட வேண்டும். அவர்கள் குறித்த விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்'' என்றார்.
விருது பெற்றவர்கள் சார்பில் ஆயிஷா இரா.நடராஜன் ஏற்புரை வழங்கி பேசும்போது, ''மொழிப்பெயர்ப்பை பொறுத்தவரையில் தமிழ் பல சரித்திரங்களை படைத்துக்கொண்டிருக்கிறது. எதை செய்தாலும், அதனை கொண்டு போய் சேர்ப்பதற்கு உலகம் முழுவதும் நம்முடைய தமிழ் மக்கள் எங்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் படித்து முடித்து செங்கல்பட்டில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் தங்களுடைய நறிக்குறவர் இனத்துக்கான மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளார். நரிக்குறவர்களின் மொழிக்கு எழுத்து வடிவம் இருக்கிறா என்பது கூட நமக்கு தெரியாது. ஆனால், பின்தங்கிய இடத்திலிருந்து வந்து படித்து ஆசிரியராகி திருக்குறளை அவர்களுடைய மொழியில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டுள்ளார் என்றால், அந்த அளவுக்கு தமிழ் மொழி வளர்ந்துள்ளது. தமிழ் மொழிப் பெயர்ப்பாளர்கள் வளர்ந்திருக்கிறார்கள். இது எவ்வளவு பெருமைக்குரிய ஒன்று'' என்று அவர் பேசினார்.