

2,600 ஆண்டுகளுக்கு முன்பு குயவுத் தொழில் எவ்வளவு செழித்து வளர்ந்திருந்தது என்பதை அகழாய்வுகளின் வழியாக உணர முடிகிறது. மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த மண்பாண்டங்கள் படிப்படியாகக் காணாமல் போய்விட்டன. சமையல் பாத்திரங்கள் அனைத்தும் உலோகத்துக்கு உருமாறி, நமது சமையலறைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இந்நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் மண்பாண்டத் தொழிலே அழிந்துவிடக்கூடும்.
இத்தொழிலைக் காப்பாற்றுவதற்கு மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவது குறித்துத் திட்டமிடப்பட வேண்டும். போதிய இடமில்லாத காரணத்தால் மண்பாண்டத் தொழிலை மேற்கொள்ள முடியாதவர்களுக்கான பொதுக் களமாக இம்மண்டலங்கள் செயல்பட வேண்டும். மேலும், இத்தொழிலைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இலவசப் பயிற்சிப் பள்ளியும் அங்கு நடத்தப்பட வேண்டும்.
மண்பாண்டப் பொருட்களை வைத்து வனைவதற்கு முன்பு கைகளால் சுற்றப்பட்டுவந்த சக்கரம், தற்போது மின்மோட்டாராக மாறியுள்ளது. அதைத் தாண்டி இத்தொழிலுக்கு நவீன இயந்திரங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. மாறிவரும் நவீன யுகத்துக்கு ஏற்ப, 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை இத்தொழிலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட வேண்டும்.
தமிழகத்தில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டால், மண்பாண்டத் தொழிலுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெருமையும் நமக்குக் கிடைக்கும்.
மண்பாண்டத் தொழில் சாதி அடிப்படையிலான தொழிலாக இன்றும் தொடர்வதே அதன் பின்னடைவுக்கு ஒரு முக்கியமான காரணம். பிற சாதியினர் அதைக் கற்றுக்கொள்வதில் மனத்தடை நிலவுகிறது. மேலும், சாதியக் கட்டமைப்புக்குள் சிக்கியதால்தான் மண்பாண்டத் தொழில் இன்று அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகளாவிய புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இத்தொழிலை கற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வி முறை ஏற்படுத்தப்படாததே இதற்குக் காரணம். பாரம்பரியப் பெருமைகள் கொண்ட மண்பாண்ட கைவினைக் கலைகள் ஒவ்வொன்றாக அழிந்துகொண்டே வருகின்றன. மண்பாண்டத் தொழிலே இன்று அந்திமக் காலத்தில் உள்ளது. அத்தொழிலைப் பாதுகாக்கத் தவறினோம் என்றால், மண்பாண்டங்களைத் தொடும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.
> இது, வேலூர் மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் ம.லோகேஷ் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்