

கீழடி, ஆதிச்சநல்லூர் பற்றிப் பேசும்போது தமிழ் மொழியின் தொன்மை குறித்தும் பண்டைய தமிழர்களின் பண்பாட்டுச் சிறப்புகள் குறித்தும் பெருமைப்பட்டுக்கொள்கிறோம்.
ஆனால், அந்தத் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் சுமந்துகொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த மண்பாண்டங்கள் குறித்தோ, அதற்குக் காரணமாக இருந்த மண்பாண்டத் தொழில் குறித்தோ பேசப்படுவதே இல்லை. 2,600 ஆண்டுகளுக்கு முன்பு குயவுத் தொழில் எவ்வளவு செழித்து வளர்ந்திருந்தது என்பதை அகழாய்வுகளின் வழியாக உணர முடிகிறது.
மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருந்த மண்பாண்டங்கள் படிப்படியாகக் காணாமல் போய்விட்டன. சமையல் பாத்திரங்கள் அனைத்தும் உலோகத்துக்கு உருமாறி, நமது சமையலறைகளை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இந்நிலை நீடித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் மண்பாண்டத் தொழிலே அழிந்துவிடக்கூடும்.
இத்தொழிலைக் காப்பாற்றுவதற்கு மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலத்தை உருவாக்குவது குறித்துத் திட்டமிடப்பட வேண்டும். போதிய இடமில்லாத காரணத்தால் மண்பாண்டத் தொழிலை மேற்கொள்ள முடியாதவர்களுக்கான பொதுக் களமாக இம்மண்டலங்கள் செயல்பட வேண்டும். மேலும், இத்தொழிலைக் கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இலவசப் பயிற்சிப் பள்ளியும் அங்கு நடத்தப்பட வேண்டும்.
தனி மண்டலம்: மண்பாண்டப் பொருட்களை வைத்து வனைவதற்கு முன்பு கைகளால் சுற்றப்பட்டுவந்த சக்கரம், தற்போது மின்மோட்டாராக மாறியுள்ளது. அதைத் தாண்டி இத்தொழிலுக்கு நவீன இயந்திரங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. மாறிவரும் நவீன யுகத்துக்கு ஏற்ப, 3டி தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை இத்தொழிலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட வேண்டும்.
புதிய கருவிகளை உருவாக்குவதற்கான ஆய்வுக்கூடம், களிமண்ணின் தரம் அறியவும் தரமேற்றவும் பிரத்யேக சோதனைக்கூடங்கள், மண்பாண்ட விற்பனைக்கான சந்தை ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்புப் பொருளாதார மண்டலம் காலத்தின் தேவை.
தமிழகத்தில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டால், மண்பாண்டத் தொழிலுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெருமையும் நமக்குக் கிடைக்கும். மரபுசார்ந்த இத்தொழிலைக் கற்பித்து ஊக்கப்படுத்துவதால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், இத்தொழிலைச் சார்ந்துள்ளவர்களின் பொருளாதாரம் பாதுகாக்கப்படும்.
மரபுவழி கைவினைப் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்புகளும் உண்டு. எனவே, சுயதொழில் முனைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இடைத்தரகர்கள் இன்றி உற்பத்தியாளரே விற்கும் வாய்ப்பைப் பெற்றால், அதிக லாபமும் கிடைக்கும். மண்பாண்டத் தொழிலுக்கான சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது மரபான ஒரு தொழிலை மீட்டெடுக்கும் முயற்சியாக மட்டுமின்றி, இம்மண்ணுக்குச் சொந்தமான வாழ்க்கை முறையை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் அமையும்.
ஆதரவை எதிர்நோக்கி…: மண்பாண்டத் தொழில் சாதி அடிப்படையிலான தொழிலாக இன்றும் தொடர்வதே அதன் பின்னடைவுக்கு ஒரு முக்கியமான காரணம். பிற சாதியினர் அதைக் கற்றுக்கொள்வதில் மனத்தடை நிலவுகிறது. மேலும், சாதியக் கட்டமைப்புக்குள் சிக்கியதால்தான் மண்பாண்டத் தொழில் இன்று அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டு, நிறுவனமயமாக்கப்பட்ட தொழிலாக மாறினால் மட்டுமே, அது ஒரு லாபகரமான தொழிலாகவும் பெருந்தொழிலாகவும் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சாதியக் கட்டமைப்புகளிலிருந்து தப்பியதால்தான் காலணிகள் உருவாக்கம், மரக்கலன்கள் உருவாக்கம், சிகை அலங்காரம் ஆகியதொழில்கள் இன்று பெருந்தொழில்களாக வளர்ச்சியடைந்துள்ளன.
மண்பாண்டத் தொழிலுக்கும் அப்படியொரு தேவை எழுந்துள்ளது. மண்பாண்டத் தொழிலில் சிறப்பு வேலைப்பாடுகள் கொண்ட கைவினைப்பொருட்கள் பலவும் இன்று பயன்பாட்டிலேயே இல்லை. 600 ஆண்டுகளுக்கு முன்பு, கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் புழக்கத்திலிருந்த மந்திரக் குடுவை, அதிசய விளக்கு, மாயக்கண்ணன் சிலை போன்ற கைவினைப் பொருட்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துவிட்டன.
அவற்றை மீட்டெடுத்து உலகளாவிய புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இத்தொழிலைகற்கவும், பயிற்றுவிக்கவும் முறையான கல்வி முறை ஏற்படுத்தப்படாததே இதற்குக் காரணம். பாரம்பரியப் பெருமைகள் கொண்ட மண்பாண்ட கைவினைக் கலைகள் ஒவ்வொன்றாக அழிந்துகொண்டே வருகின்றன. மண்பாண்டத் தொழிலே இன்று அந்திமக் காலத்தில் உள்ளது. அத்தொழிலைப் பாதுகாக்கத் தவறினோம் என்றால், மண்பாண்டங்களைத் தொடும் கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம்.
- ம.லோகேஷ், வேலூர் மாவட்ட மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர், தலைவர். தொடர்புக்கு: eesanmanpaandangal@gmail.com