

நேரடியாகப் பழமாக மட்டுமல்லாமல் ஜாம், ஜெல்லி எனப் பல வகைகளில் அன்னாசி பிரபலமாக இருக்கிறது. புளிப்பு இனிப்புச் சுவைகளை விறுவிறுப்புடன் நா மொட்டுக்களுக்கு விருந்தளிக்கும் தன்மையுடையது. புழுக்கொல்லியாகவும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத குருதிப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் அன்னாசிப் பழம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்.
மருத்துவ பலன்கள்
வாந்தி, வயிற்றுக்கடுப்பு, செரிமான தொந்தரவுகளுக்கு இதன் பழரசத்தை லேசாகச் சூடாக்கிக் கொடுக்க சிறந்த நிவாரணம் கிடைக்கும். பழத்தின் சாறோடு தேன் சேர்த்து மணப்பாகு ரகத்தில் தயாரித்துக் குடித்தால், வாந்தியும் அழல் சார்ந்த நோய்களும் பறந்து போகும்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு ஏற்படும் மந்தத்தைப் போக்க, அரைமணி நேரம் கழித்து அன்னாசித் துண்டுகளைச் சாப்பிட, செரிமானத்தை மீட்டெடுக்க முடியும்.
குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க வேண்டாம்
பழத்தை வெட்டியதும் சாப்பிடுவது நல்லது. குளிர்சாதனப் பெட்டியில் நாள் கணக்காகச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல! சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் டின்களில் அடைக்கப்பட்ட அன்னாசி சாறு/சிரப்பிற்கு பதிலாக நேரடியாகப் பழங்களைச் சாப்பிடுவதே நல்லது.
அன்னாசி மென்சகாய்
மிளகாய், எள், தேங்காய்த் துருவலோடு அன்னாசிப் பழத் துண்டுகளையும் சேர்த்துச் சமைக்கப்படும் புளிப்பு, இனிப்பு, கார்ப்பு சுவைகள் கலந்த கிரேவி ரகம் இது. கர்நாடகாவின் காரவள்ளி பகுதியில் இவ்வுணவு மிகப்பிரபலம்.
அன்னாசி தேங்காய் சாலட்
அன்னாசித் துண்டுகள், திராட்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை, சில கொட்டை வகைகள் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மேலே தேங்காய்த் துருவல் தூவி சாப்பிடுவது தனித்துவமாக இருக்கும். சுவையோடு நிறைய ஊட்டங்களையும் அள்ளிக்கொடுக்கும்.
பழ வற்றல்
பழத்தை உலரச் செய்து, மோரில் ஊறவைத்த வற்றலாகப் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடையே இருந்தது. சுவையின்மை மற்றும் செரிமானப் பிரச்சனைகளைப் போக்க, இந்த பழ வற்றலைப் பயன்படுத்தலாம்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்