கொஞ்சம் வீடு... கொஞ்சம் ஆஃபீஸ்... - ‘ஹைப்ரிட் ஒர்க்’ வரமா, சாபமா?

கொஞ்சம் வீடு... கொஞ்சம் ஆஃபீஸ்... - ‘ஹைப்ரிட் ஒர்க்’ வரமா, சாபமா?
Updated on
3 min read

பரபரப்பான உலகம் இதில் வேலையையும், வாழ்க்கையையும் சரியாக அணுகுவது பெரிய சவால். 'ஒர்க் லைஃப் பேலன்ஸ்' என்ற கருத்தாக்கமே இந்த சிக்கலைத் தீர்க்க உருவானது தான். வேலைக்கும், வீட்டுக்கும் இடையே ஷட்டில் பந்து போல் ஓடிக்கொண்டிருந்த நமக்கு ஒரு நியூ நார்மலைக் கொண்டு வந்தது கரோனா பெருந்தொற்று. அதுதான் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்'; வீடே அலுவலகமானது. ஆஃபீஸுக்கு கிளம்ப வேண்டாம், ட்ராஃபிக்கில் நிற்க வேண்டாம், உறவுகளுக்கு உடல்நிலை சரியில்லையா வடிவேலு படத்தில் வருவது போல், 'பார்த்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருக்கேன் மன்னா' என்ற ஸ்டைலில் வேலை பார்க்கலாம்.

'ஒர்க் ஃப்ரம் ஹோம்' முறையைப் புகழ்ந்து, பரிந்துரைத்து, அலசி ஆராய்ந்து பல குறுக்குவெட்டுப் பார்வைகள், நீள்வெட்டுப் பார்வைகள் எல்லாம் வந்தாகிவிட்டன. இந்நிலையில் தான் உலகம் கரோனாவிலிருந்து மெல்லமெல்ல மீளத் தொடங்கியது. அப்போது ஒர்க் ஃப்ரம் ஹோமில் சில உட்பிரிவுகள் முளைத்தன. அதில் ஒன்றுதான் 'ஹைப்ரிட் ஒர்க்'.

ஹைப்ரிட் ஒர்க் என்றால் என்ன? - ஒரு வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்கள் என்று வைத்துக் கொள்வோம். இதில் செவ்வாய், வியாழக்கிழமைகள் வீட்டிலோ அல்லது விரும்பிய இடத்தில் இருந்தோ வேலை செய்யலாம். ஆனால், மற்ற நாட்களில் அலுவலகம் வர வேண்டும். பகுதி ரிமோட், பகுதி அலுவலகம் இதுதான் 'ஹைப்ரிட் ஒர்க்'.

பிரிட்டன் அரசின் பரிந்துரையின்படி செப்டம்பர் 2021-ல் ஹைப்ரிட் பாலிசி அமலுக்கு வந்தது. அந்த நடைமுறைக்குள் வந்தவர்களில் கிளாராவும் ஒருவர். தனிநபர் சுதந்திரம் கருதி அவரது முழுப்பெயரும் வெளியிடப்படவில்லை. ஹைப்ரிட் வேலை குறித்து க்ளாரா இவ்வாறு கூறுகிறார்: "நிரந்தரமாக ஹைப்ரிட் ஒர்க் என்பது ஆரம்பத்தில் எனக்கு மிகப்பெரிய நிவாரணமாகத் தெரிந்தது. எனது வேலை, பரபரப்பான குடும்ப வாழ்க்கை இரண்டையும் இனி சிறப்பாகக் கையாளப் போகிறேன் என்று நினைத்தேன்.

ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல புதிய சிக்கல்கள் வந்தன. வீட்டில் வேலை செய்யும் போது சிறப்பாக பணியாற்றினேன். ஆனால், அடுத்த நாள் அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்று அலுவலக கட்டமைப்புக்குள் வேலை செய்ய வேண்டும் என்ற சிந்தனையே அயர்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டது. இப்போதெல்லாம் இரண்டு பணியிடங்களை கையாள வேண்டிய நெருக்கடி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

லேப்டாப்பை வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் மாறி மாறி தூக்கிச் செல்வது, எல்லாவற்றையும் பணியிடத்திற்கு ஏற்ப மாற்றியமைப்பது என அடிக்கடி பணி களம் மாறுவது அயர்ச்சியைத் தருகிறது. நாளடைவில் இது எனது 'ஒர்க் ஃபரம் ஹோம்' திறனையும் பாதிக்கிறது". இவ்வாறு க்ளாரா கூறியுள்ளார்.

க்ளாரா மட்டுமல்ல டைனிபல்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 80 சதவீதம் பேர் ஹைப்ரிட் வேலை முறை உணர்வுபூர்வமாக நிறைய சோர்வை ஏற்படுத்துகிறது. முழுமையாக ரிமோட் முறையில் வேலை செய்வது, முழுமையாக அலுவலகம் செல்வது என்ற இரண்டைக் காட்டிலும் இது மிகவும் அயர்ச்சியைத் தருகிறது என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.

பழங்கதையான முழுநேர அலுவலக வேலை: கரோனாவுக்குப் பின்னர் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை தினமும் அலுவலகத்துக்கு வரச் சொல்வதை பழங்கதையாக்கி விட்டன. ஏட்டளவில் ஹைப்ரிட் வேலை பணியாளர், பணியமர்த்துபவர் என இருவருக்குமே சகாயம் செய்வதாக இருக்கிறது. கரோனாவுக்கு முந்தைய அலுவலக கட்டமைப்பு, கரோனாவுக்கு பிந்தைய ஒர்க் ஃப்ரம் ஹோம் என இரண்டையும் சரி விகிதத்தில் கலந்து தருவதாக இருக்கிறது.

முதலாளிகள் சில நாட்கள் தங்கள் ஊழியர்களை நேரில் பார்க்கலாம் என்பதால் அவர்களுக்கும் தாங்களுடைய ஊழியர்களின் மீது நேரடி கட்டுப்பாடு கொண்டது போன்ற உணர்வைத் தரும். அதேபோல் ஊழியர்களுக்கும் கரோனா முழுமையாக ஓயும் வரை பாதுகாப்பாக பணியாற்றலாம் என்ற உணர்வைத் தரும்.

இந்திய களத்தில் பொருத்திப் பார்ப்போம்: ஹைப்ரிட் ஒர்க் க்ளாராவுக்கு ஏற்படுத்திய அயர்ச்சியை இந்திய களத்தில் பொருத்தி ஒப்பிட்டுப் பார்க்கலாம். இந்தியாவில் பெண்கள் வேலைக்குப் போவதே இன்னமும் கூட மிகப்பெரிய சவாலான ஒன்றாகத் தான் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெண்ணின் விடுமுறை நாள் என்பது அவள் வீட்டு வேலை பார்க்கும் நாள், அவ்வளவே! அடுத்த வாரத்துக்கான ஒட்டுமொத்த குடும்பத்தின் ஓட்டத்திற்கும் தேவையானவற்றை ஆயத்தம் செய்து வைக்கும் நாள் தான் இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்ணின் ஞாயிற்றுக்கிழமைகள். அப்படியிருக்க கரோனா கொண்டு வந்த ஒர்க் ஃப்ரம் ஹோம், குடும்ப வன்முறை, வீட்டு வேலைகளில் இருந்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு வேறு மனிதர்களை சந்திக்கும் சுதந்திரத்தைக் கூட பறித்து விட்டதாகவே பலரும் கருதினர்.

அதிலும் கரோனாவுக்கு பின் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஹைப்ரிட் ஒர்க் இரட்டைச் சுமையாகி இருக்கிறது இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மகளிருக்கு. இந்திய குடும்பச் சூழலில் ஒர்க் ஃப்ரம் ஹோம், ஹைப்ரிட் ஒர்க் என எல்லா வேலை முறைகளுமே பெண்களுக்கு சவாலானது தான். ஹைப்ரிட் வேலையை விட எப்போதும் வீட்டிலேயே இருந்து வேலை செய்யும் ரிமோட் ஒர்க் சவுகரிமானது என்று கருதுகிறார்கள் சில பெண்கள்.

நீண்ட காலம் வீட்டிலிருந்தே பணி செய்தவர்களுக்கு அலுவலக கட்டமைப்பும், சக பணியாளர்களின் சிறு பேச்சுக்களும் கூட பணி கவனத்தை சிதறடிப்பதாக மாறிவிடுகிறது. ஒரு தேநீர் இடைவேளைக்குப் பிறகு அலுவலகத்தில் மீண்டும் பணி செய்யும் சகஜ சூழலைக் கூட கடினமாக்கியுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். அலுவலகத்துக்கு ஃபார்மல் உடையில் கிளம்பிச் செல்வது கூட மிகக் கடினமானதாக உள்ளது என்றும் சிலர் கூறுகின்றனர்.

நிரூபிக்க வேண்டிய நெருக்கடி: அலுவலகத்தில் எப்போதும் நல்ல பெர்ஃபார்மராகவே இருந்திருப்பார். ஹைப்ரிட் ஒர்க்கிலும் சரியாகவே பணியாற்றிக் கொண்டிருப்பார். ஆனால் அலுவலக கட்டமைப்பில் அவ்வப்போது பாஸ் சொல்லும் 'வெல்டன்' வார்த்தைகளைக் கேட்க முடியாது. அதனால் வேலையை சரியாகத் தான் செய்கிறோமா? என்ற பதற்றம் தேவையில்லாமல் ஏற்படுவதாகவும் ஹைப்ரிட் ஊழியர்கள் சிலர் கூறுகின்றனர்.

அதுபோலவே, விடுப்பு கேட்க சங்கடம் ஏற்படுதல், நாம் வீட்டில் இருப்பதால் நாம் வேலை செய்கிறோமா என்று கண்காணிப்பார்களோ என்ற ஐயம் போன்ற தேவையற்ற சஞ்சலங்கள் ஒருசிலருக்கு வந்து செல்லும் சூழலும் உருவாகும். இதனாலேயே கூடுதல் நேரம் வேலை செய்வது. விடுப்பை தவிர்ப்பது போன்ற உப விளைவுகளும் ஏற்படுகின்றன.

காலம் சகஜமாக்கும்: ஹைப்ரிட் ஒர்க் செய்யும் வெளிநாட்டவர்கள் சிலர் இந்த முறையில் உள்ள பின்னடைவுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அது இயல்பாக மாறும், அதை காலம் சகஜமாக்கும் என்கின்றனர். பணியாளர்களுக்கு ஓரளவுக்கு தேர்வு செய்யும் உரிமையையும், தங்களின் வேலையின் போக்கை அவர்களே கட்டமைத்து கட்டுப்படுத்தும் சுதந்திரமும் அளித்தால் இது விரைவில் சாத்தியாகும். வேலையை வெறும் நேரத்தை வைத்து நிர்ணயிக்காமல் ஊழியரும் சரி, பணியமர்த்துபவரும் சரி இரு தரப்புமே இதனை இயல்பான மனோபாவமாக மாற்ற வேண்டும்.

உறுதுணைக் கட்டுரை: பிபிசி

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in