Published : 13 Jun 2022 04:29 PM
Last Updated : 13 Jun 2022 04:29 PM

தேனியில் குடியேறிய த்ரிஷா!

இரண்டாயிரத்து இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன், நள்ளிரவைக் கடந்த ஓர் அதிகாலை அது. குத்திக் கிழிக்கும் மார்கழிக் குளிர். நிறைமாதக் கர்ப்பினியான மரியாள் பிரசவ வலியால் துடிக்கிறார். அவரைத் தன் முதுகில் சுமந்தபடி வேகமாக நடக்கிறது அந்தக் கழுதை. மரியாளின் வேதனை முனகல்கள், அவரது கணவர் யோசேப்பை கண்ணீர் சிந்த வைக்கின்றன. ஒரு மாட்டுத் தொழுவத்தில் இயேசுவை ஈன்றெடுத்த மரியாளையும், நிம்மதி பெருமூச்சுவிடும் யோசேப்பையும், தெய்வக் குழந்தை இயேசுவையும் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் கழுதை. நாசரேத் என்ற சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து சற்றே பெரிய பட்டனமான ஜெருசலேம் வந்து சேர கழுதைதான் அந்தத் தம்பதிக்கு உதவியது.

2001 ஆம் ஆண்டு தேனிமாவட்டம். கடல் மட்டத்திலிருந்து 4000 உயரத்தில் இருக்கும் மலைகிராமம் அது. வாட்டியெடுக்கும் அடைமழை காலம். வெளியுலகின் வாசனையற்ற அந்த மலைகிராமத்தில் வாழும் செல்விக்கு பத்துநாட்கள் முன்னதாகவே பிரசவவலி. வந்து சில ஆண்டுகளே ஆன பொதுச்சுகாதார நிலையம் பூட்டிக்கிடக்கிறது. கணவன் பொன்னுச்சாமி பதறியடித்து, அந்த ஊருக்கு இருமுறை வந்துசெல்லும் தனியார் ’ஜீப் டிரைவருக்கு’ போன் செய்கிறார். அவரோ, ” ஊத்துற மழையில் வண்டியெடுத்தா வழியிலயே உருளவேண்டியதுதான். கோதாரியில தோட்டிக் கட்டி இறக்கிட்டு சோத்துப்பாறைக்கு வந்துடுங்க. நான் அடிவாரத்துக்கு வந்துடுறேன்” என்கிறார்.

மனம்முழுவதும் அழுத்தும் பீதியோடு கழுதையோட்டியின் வீட்டுக்கு ஓடுகிறார் பொன்னுசாமி. இரண்டு கோதாரிக் கழுதைகள் கழுத்தில் நுகத்தடி கட்டி பூட்டப்படுகிறது. கழுதைகளின் முதுகில் ஒரு கயிற்றுக்கட்டில் பிணைக்கப்பட, அதில் செல்வியை படுக்க வைத்து அழைத்துச் செல்கிறார்கள். அடுத்த இரண்டுமணிநேரத்தில் அடிவாரம் வந்துச்செரும் செல்வியையும் அவனது கணவனையும் அழைத்துச் சென்று பெரியகுளம் மருத்துவமனையில் சேர்க்கிறார் ஜீப் டிரைவர். இன்று செல்வியின் மகன் 6- வகுப்பு படிக்கிறான். பள்ளிசெல்லும் வழியிலோ பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியிலோ அவன் கழுதைகளை பார்க்க நேர்ந்தால், அவற்றை கையெடுத்து கும்பிடுகிறான். கழுதைகளை வணங்க தனது மகனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார் அந்த மலைகிராமத்துத் தாய்.

அடிவாரம் நோக்கி ...

வரலாற்றில் வாழும் சுமைதாங்கி.

எதற்கும் பயன்படாதவர்களையும், உடனுக்குடன் சிந்திக்க முடியாதவர்களையும் ” கழுதைகள்” என்று திட்டித் தீர்க்க பழகியிருக்கிறது நம் சமூகம். ஆனால் மனிதகுலத்துக்காகவே, இந்த பூமியில் யுகங்கள் கடந்து சுமைதாங்கியாக வாழ்ந்து வந்திருக்கும் கழுதைகள், அவற்றுடன் நேரடித்தொடர்பற்ற மனிதர்களால் கண்டுகொள்ளப்பட்டதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இயேசு ஒரு போதகராக அறியப்பட்டப்பின், தான் பிறந்த ஊரான ஜெருசலேமுக்கு திரும்ப வரும்போது, அந்த நகரின் மக்கள் அவருக்கு குருத்தோலைகள் அசைத்து, வழிநெடுகிலும் துணிகளை விரித்து அவரை வரவேற்றார்கள். அப்போது இயேசு, குட்டிசுவர் அருகில் நின்றிருந்த ஒர் இளங் கழுதையின் முதுகில் ஏறி ஊருக்குள் வந்தார். இயேசு நினைத்திருந்தால், உலகெங்கும் அரசாட்சியின் அடையாளமாக இருக்கும் ஒரு குதிரையில் ஏறிவந்திருக்க முடியும். ஆனால் மனிதர்களின் மனங்களில் புறக்கணிக்கப்பட்ட விலங்காகிப்போன , கழுதைகளை அவர் கௌரவப்படுத்த நினைத்தார். அந்த இயேசுவைபோலவே கழுதைகளை மதித்து வாழ்கிறார்கள் உலகம் முழுவதும் உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்கள். தமிழ்நாடும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

மலை மக்களின் விலைமதிப்பற்ற நண்பன்

தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலையைக் கொடையாகப்பெற்ற மாவட்டங்களில் ஒன்று தேனி. இங்கே கடல் மட்டத்திலிருந்து 4,000 அடிகள் உயரத்தில் அமைந்திருக்கும் அகமலை ஊராட்சிக்கும், அதை ஒட்டியுள்ளள ஊத்துக்காடு, ஊரடி, குறவன்குழி, பெரிய மூங்கில், சின்ன மூங்கில், சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, குண்டன்சி, வக்கீல் எஸ்டேட், சுப்பிரமணியபுரம், கரும்பாறை, கொத்தமல்லிக்காடு என்று 25க்கும் குறையாத கிராமங்கள். ஐயாயிரம்பேருக்கும் குறையாத மக்கள் வசிக்கும் இங்கே, ஆரஞ்சு, எலுமிச்சை, நார்த்தை, மிளகு, ஏலம், பலா, சபோர்ட்டா, கொய்யா, மலைவாழை, பப்பாளி, பீன்ஸ், சௌ சௌ, காபி என்று மலைவளத்துக்கே உரிய பயிர்களை சாகுபடி செய்கிறார்கள். தினசரி இரண்டு முறை வந்து செல்லும் தனியார் ஜீப்புகள்தான் இவர்களுக்கு இருக்கும் ஒரே வாகன வசதி. ஆட்களை ஏற்றவே அடிதடியாக இருக்கும்போது சுமைகளையும், தங்கள் விளைக்பொருட்களையும், பெரியகுளத்துக்கும், தேனிக்கும், கேரளத்துக்கும் சென்னைக்கும் வாங்கிச்செல்லும் வியாபாரிகளிடம் விற்க வேண்டுமானால் சொத்துப்பாறைக்கு வந்தாக வேண்டும். தலைச்சுமையாக சுமந்துகொண்டு, மலையிலிருந்து மனிதர்களால் கீழே இறங்கமுடியுமா? இங்கேதான் தங்கள் முதுகுகளை தோள்போல் மலைவாழ் மக்களுக்கு கொடுக்கின்றன கழுதைகள். உற்ற நண்பனைபோல ஒரு வார்த்தை பேசாமல் விளைபொருட்களை சுமந்துகொண்டு கரடுமுரடான மலைப்பாதை வழியாக கீழே இறங்கும் ’கோதாரிக் கழுதைகளை’ கொண்டாடுகிறார்கள் இங்கே வாழும் மக்கள். கோவேறுக் கழுதைகளில் இருந்து அவர்கள் இப்படியொரு பெயரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இவற்றின் உயரம் குறைவாக இருப்பதாலும் குதிரைகளின் சாயலும் கொஞ்சம் இருப்பதால் இவற்றுக்கு ‘மட்டக் குதிரை’ என்றும் அழைப்பதுண்டு.

அகமலை கிராமம்

”மலை மேலேர்ந்து நாங்க 16 கிலோமிட்டர் கீழே இறங்கி வந்தாத்தான் போடி, பெரியகுளம், தேனி, மதுரைக்கு பஸ்ல போகமுடியும். எங்க விளைபொருட்களை மட்டுமில்ல, நாங்க சாப்பிட அரிசியையும் கீழே இருந்துதான் மேலே கொண்டு வரணும். அப்படிப்பார்த்தா நாங்க சாப்பிடுற அன்னத்தை சுமந்துவந்து எங்களுக்கு கொடுகிறதே எங்க கழுதைகள்தான். ஆரிசி மட்டுமில்ல எங்களுக்குத் தேவையான அத்தியாவசிப் பொருள் அத்தனையும் கழுதைகள் மூலமாத்தான் மேல கொண்டாறோம். இதுங்க இல்லன்னா எங்க ஜீவனம் படுத்துடும்” என்கிறார் 60 வயது கழுதையோட்டியான காளிப்பன்.

”கழுதைகள் கர்ப்பம் தரிச்சுட்டா, நம்ம வீட்டுல ஒரு பொண்ணு முழுகாம இருந்தா எப்படி பார்த்துக்குவமோ அப்படி பார்த்துகுவோம். அதுக முதுகில ஒரு பொட்டு சுமை ஏத்தமாட்டோம். அதேமேதிரி கழுதைக்கு வயசாயிட்டாலும் அது வாழ்ற வரைக்கும் அதுக்கான திணியை குறைக்கமாட்டோம். இது சொமக்காத கழுதைதானே எதுக்கு வீண் செலவுன்னு நெனைக்க மாட்டோம். கழுதை கெட்டா குட்டிச்சுவர்ன்னு ஜனங்கிட்ட ஒரு பழமொழி இருக்கு. வயசான கழுதைகள் சுதந்திராமா திரியட்டும்ன்னும் அவிழ்த்து விட்டிருவோம். ஒரு கழுதை 20 வருஷம் உயிரோட இருக்கும். நாங்க 15 வருஷதுக்கு மேல அதுக முதுகல சொமை ஏத்தமாட்டோம். அது வாழ்ற மத்த காலம் முழுக்க சந்தோஷமா இருக்கும். வயசான கழுதைகள் சுதந்திரமாக பாடிக்கிட்டு கிடக்கும். அதைத்தான் கழுதை கெட்ட குட்டிசுவர்ன்னு சொல்றாங்க. கழுதை கெட்டுப்போனதா சரித்திரமில்ல. அதேபோல வீட்ல ஒரு கழுதை குட்டிப் போடிருச்சுன்னா விட்ல ஒரே கொண்டாட்டம். தை மாசம் 2 ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்னைக்கு நாங்க கழுதைகளுக்கு பொங்கல் வப்போம்.” என்று கழுதைகளின் காதலராக மூச்சு விடாமல் பேசிக்கொண்டே போகிறார் 15 வயதுமுதல் கழுதையோட்ட ஆரம்பித்த இவர்.

நாங்கள் உயரத்தில் குறைவாக இருக்கலாம்.. மனிதர்களுக்காக சுமப்பதில் உயர்ந்து நிற்கிறோம்

இன்னொருப்பக்கம் மழையில்லாவிட்டால் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்து செய்து வைப்பதைச் சொல்லி வருத்தப்படுகிறார் காளி.. ” நம்ம கண்ணு முன்னாடி நம்ம சொமைகள சொமந்து நடக்கிற கழுதைகளுக்கு நோய் வந்துட்டா விட்டுடமாட்டோம். எவ்வளவு செலவானாலும் செலவழிச்சு வைத்தியம் பாப்போம். அதுங்களை அடிக்கிறதோ, காலைக்கட்டிப் போடுறதோ கிடையாது. வீட்டில கல்யாணம், காதுகுத்து, விவசாய செலவுன்னு பெரிசா செலவு வந்துட்டா, 6 லேர்ந்து 10 வசுள்ள கழுதை 25 முதல் 40 ஆயிரம் விலைப்போகும். ரெண்டு கழுதைய வித்தா ஒரு கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு முடிச்சுடலம்.

இந்த ஜீவன்களுக்கு இத்தனை மதிப்பு இருக்கும்போது.. கொங்குச் சீமையிலயும், ராம்நாட்லயும் கழுதைகளுக்கு கல்யாணம் பண்ணிவைக்குறோம், அப்பத்தான் மழைபெய்யும்ன்னும் ஐதீகம்ன்ற பேர்ல அதுகள அவமானப்படுத்துறாங்க. கழுதைன்னாலே அதுக அருமை தெரியாதவங்களுக்கு தொக்கா போயிடுது. உலகத்துல கழுதை மாமிசம் சாப்பிடாத ஆழுங்க நம்ம தமிழ் மக்கள்தான். நான் கேள்விப்பட்ட வரைக்கும் ஆப்ரிக்கால கழுதைகள நல்லா வேலை வாங்கிட்டு அதுக மாமிசத்தையும் திங்குறதா பேப்பர்ல படிச்சேன். என் வவுறு பத்திகிட்டு வந்துடுச்சு” என்று கோவம் காட்டுகிறார்.

வாக்குபதிவு இயந்திரங்களையும் நாங்கள்தான் சுமந்து வருகிறோம்.

4000 அடிகள் உயரத்தில் த்ரிஷா

நாய்களை விலைகொடுத்து வாங்கி வளர்ப்பதை விட தனித்து விடப்படும் தெருநாய்களை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன த்ரிஷா, ஒருமுறை தெருவில் நின்று கொண்டிருந்த கழுதைகளுக்கு அகத்திக்கீரையை தின்னக்கொடுத்த புகைப்படத்தை அவரது டுவிட்டர் வலைதளத்தில் வெளியீட்டிருந்தார். த்ரிஷாவின் கழுதைகள் மீதான இந்தக்கருனை அகமலையில் கழுதைகளை வளர்த்துவரும் சுவாமிநாதனுக்கு எப்படித் தெரிந்தது என்று தெரியவில்லை. சுமைச் சவாரிக்காக இவர் வளர்க்கும் பெண் கழுதையொன்றுக்கு செல்லமாக த்ரிஷா என்று பெயர் வைத்திருக்கிறார். இன்னும் சினேகா, சிம்ரனும் கூட இந்த 4000 அடி உயரத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆண் கழுதைகளுக்கு நடிகர்கள் பெயரை வைக்காமல், சாமிப்பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

சோத்துப்பாறை அணை

அகமலை மற்றும் அதைசுற்றியுள்ள மலைகிராமங்கள் நவம்பர் மாத அடைமழை காலத்தில் மலைச்சரிவாலும், பெரும்பாறைகள் உருண்டுவந்து குறுகலான மலைப்பாதைகளை அடைத்துகொள்வதாலும் வெளியுலகின் தொடர்பை துண்டித்துக்கொள்ள வேண்டிய சூழல். இதுபோன்ற இயற்கைப் பேரிடர் காலத்தில் அந்த மக்களுக்கு கைகொடுப்பை இவர்களது கழுதைகள்தான். இந்த கிராமங்கள் எத்தனை உயரத்தில் இருந்தாலும், எத்தனை குளிரடித்தாலும் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கேட்க சுறுசுறுப்பாக வந்துவிடுவார்களளாம் அரசியல்வாதிகள். இங்கு வாழும் மக்களுக்கு ஒட்டுப்பெட்டிகளை சுமந்து வருவதுகூட எங்கள் கழுதைகள்கள்தான். என்கிறார்கள் இங்கு வாழும் மக்கள். தேனிமாவட்டம் மட்டும்தான் என்றில்லை. சேலம், தர்புரி, கிருஷ்ணகிரி என்று கழுதைங்கள் உதவி தேவைப்படாத உயரமான மலையூர்கள் மிகக்குறைவு.

மலைக் கிராம மக்களுக்கு மருத்துவம், கல்வி, குடிநீர், ரேஷன் பொருள்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தரமான சாலைகள் வழியாகப் போய்ச்சேரும் வரை அவர்களுக்கு கண்கண்ட தெய்வங்களாக இருக்கப்போவது இந்தக் கழுதைகள்தான். முறையான , சாலை வசதி மட்டுமே இங்குவாழும் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர சரியான தீர்வுவாக இருக்க முடியும் என்பதை, இங்கே வந்துபோகும் வேற்றுகிரகவாசிகள் (வெளியூர்க்காரர்கள்) உணரமுடியும். சாலை ஏற்படுத்தப்பட்டால் அரசின் திட்டங்கள் அனைத்த்தும் ஒன்றுவிடாமல் உயரமான மலை கிராமங்களுக்கு எளிதில் கொண்டு சேர்த்துவிட முடியும். முறையான, தரமான சாலை வசதிகள் இந்த மலைகிராமங்களுக்கு கிடைக்காதவரை, இந்தமக்கள் நேசிகும் கழுதைகள் தேர்தலில் போட்டியிடலாம் என்று மட்டும் சொல்லிவிட்டால், கழுதைகள் கண்டிப்பாக ஜெயிக்கும்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in
 

 
 
 
 

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x