Published : 11 Jun 2022 10:28 PM
Last Updated : 11 Jun 2022 10:28 PM

இதயப் பாதுகாப்பு முதல் இயற்கை ‘மவுத்-வாஷ்’ - மாதுளை தரும் மகத்தான நன்மைகள்!

கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்திற்குப் பாதுகாவலனாகச் செயல்படும் என்பதால் மாதுளையை அடிக்கடி பயன்படுத்துவது அவசியம். இரத்த அழுத்த நோயாளிகள், மார்பு படபடப்பு உடையவர்கள் மாதுளையைச் சாப்பிட மாற்றத்தை உணர்வீர்கள்.

குழந்தைகள் மாதுளையைச் சாப்பிட மறுக்கும்போது, உணவுகளில் முத்துக்களைப் பொதித்து, கண்கவர் வடிவங்களில் வழங்கலாம். தோசைக்குள் மசாலா போல மாதுளை முத்துக்களை வைத்து அவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டலாம். மாலை வேளை சிற்றுண்டியாக மாதுளம் பழம் குழந்தைகளின் கண்முன்னே விரியட்டும். முளைக்கட்டிய தானியங்களின் மீது, மாதுளை முத்துக்களைத் தூவிக் கொடுக்க ஊட்டங்கள் விரைவாக உடலில் சேரும்.

கிரீன் டீயில் இருப்பதைவிட இருமடங்கு எதிர்-ஆக்ஸிகரணிப் பொருட்களை தன்னகத்தே மாதுளை விதைகள் கொண்டுள்ளன. இதிலிருக்கும் ஆந்தோசையனின்கள், எல்லாஜிக் அமிலம், புனிசிக் அமிலம் போன்றவை மாதுளம் பழத்தின் நோய் தீர்க்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. இரத்தக் குழாயில் படியும் கொழுப்புத் திட்டுக்களை அகற்றும் வல்லமை கூட மாதுளைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தயிர்ச் சாதத்தில் மாதுளை முத்துக்களைப் பொதித்துச் சாப்பிட, புளிப்பும் இனிப்பும் மிக்க உன்னதமான சுவையை உணரலாம். பழ சாலட்கள், பனிக்கூழ்களிலும் தற்போது மாதுளை முத்துக்களைச் சேர்க்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. தானாகப் பழுத்து வெடித்த மாதுளை முத்துக்களை இடித்து சாறு பிழிந்து, மெல்லிய துணியில் வடிகட்டி கற்கண்டு சேர்த்துப் பருக, நெஞ்செரிவு, மயக்கம், விக்கல் போன்ற குறி குணங்கள் சட்டெனக் குறையும். மாதுளம் பழத் தோலை உலர்த்தி மோரில் கலந்து கொடுக்க, வயிற்று வலியுடன் உண்டாகும் பேதி நிற்கும்.

கொண்டைக் கடலையை அரைத்து, உலர்ந்த மாதுளை விதைகளைத் தூவி தரும் சிற்றுண்டி ரகம், மத்திய தரைக்கடல் நாடுகளில் பிரசித்தமானது. மாதுளை ரசத்தைக் கொண்டு, ஆல்கஹால் கலப்படமில்லாத உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய 'மாதுளை மது' பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

மற்ற பழங்களைப் போலவே மாதுளையையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மாதுளம் பழச்சாறு பருக நினைத்தால், வெள்ளைச் சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டிகளின் ஆதரவைத் தேடாதீர்கள். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்களில் மாதுளை கிடைக்கிறது. கொஞ்சம் துவர்ப்புச் சுவையுடைய மாதுளம் பழத்தைக் கொண்டு ஈறுகளில் தேய்த்து வெந்நீர் கொண்டு வாய்க் கொப்பளிக்க, பல் ஈறுகள் பலமடைந்து, பற்களின் ஆரோக்கியம் மேம்படும். செயற்கை 'மவுத்-வாஷ்களுக்கு' மாற்றாக மாதுளை தோலை உலர்த்தி வெந்நீரில் கலந்து வாய்க் கொப்பளிக்கலாம்.

மாதுளை முத்துக்களை இடித்து சாறு பிழிந்து, அதற்குச் சம அளவு தேன் சேர்த்துத் தயாரிக்கப்படும் சுவைமிக்க மருத்துவச் சாறான 'மாதுளை மணப்பாகை' வீட்டிலேயே எளிமையாகத் தயாரித்து மாதுளையின் எண்ணற்ற பலன்களை நுகரலாம்.

மாதுளம் சாற்றினுள் வெள்ளைத் துணியை ஊறவைத்து உலரச் செய்ய வேண்டும். ஆமணக்கெண்ணெய் ஊறிய விளக்கில் சாறு ஊறிய துணியைத் திரித்து எரிக்க வெளிவரும் புகையை, பித்தளை பாத்திரத்தைக் கொண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். இதைக் கண் மையாகப் பயன்படுத்த, கண்களின் அழகு கூடுவதோடு, அவற்றின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

> இது, டாக்டர் வி.விக்ரம்குமார் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x