மாதுளையின் விலைமதிப்பில்லா நலக்கூறுகள்

மாதுளையின் விலைமதிப்பில்லா நலக்கூறுகள்
Updated on
3 min read

மாதுளையின் தோலை உரித்ததும் காட்சிதரும் கண்களைக் கவரும் சிவப்பு முத்துக்களைக் கைநிறைய அள்ளி மென்றாலே முத்துக்கள் கசிந்து சுவையை உணரச் செய்யும். மாதுளை தோல் என்னும் சிப்பிக்குள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டிருக்கும் செந்நிற முத்துக்களின் நேர்த்தியை ரசிப்பதற்கு இருகண்கள் போதாது! வீடு தோறும் ஒரு மாதுளை செடியை வளர்க்க, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் கட்டுக்குலையாமல் பாதுகாக்கப்படும்.

புனிதப் பொருளாகக் கருதப்பட்ட மாதுளை, புத்த மதத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பழங்களுள் ஒன்று! அவற்றின் பலன்களை அறிந்தாலே அதற்கான காரணம் புரியும். அனைத்து பருவங்களிலும் பழங்களை அள்ளி வழங்கும் 'கருணைத் தாவரம்' மாதுளையின் பூர்வீகம் மத்திய கிழக்கு நாடுகள். பல்வேறு நாடுகளில் மாதுளையை அடிப்படையாக வைத்து நிறையப் புராணக் கதைகள் வலம் வருகின்றன. கிரேக்க இலக்கியமான ஒடிசி, இலியட் காவியங்களில் மாதுளையின் பங்கு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

கர்ப்பிணிகளின் நண்பன்

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் வாந்தி, குமட்டலுக்கு மாத்திரை மருந்தின்றி இயற்கையாய் நிவாரணம் தேடுகிறீர்களா? இருக்கவே இருக்கிறது மாதுளை. கர்ப்பிணிக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொடுப்பதுடன், கருப்பையில் வளரும் சிசுவிற்கும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் படைத்து மாதுளை.

கர்ப்ப காலத்தில் உண்டாகும் இரத்த சோகைக்கும் மாதுளை நல்ல பலனளிக்கும். 'மாதுளை மணப்பாகு' எனும் சித்த மருந்து, மேற்சொன்ன பலன்களை எல்லாம் இனிப்பாய் வழங்கும். ஹார்மோன் சுழற்சியைச் சீராக்கும் என்பதால், வளர் இளம் பெண்களின் மெனுவில் கட்டாயம் இடம்பெற வேண்டிய பழம் மாதுளை.

கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதயத்திற்குப் பாதுகாவலனாகச் செயல்படும் என்பதால், அடிக்கடி பயன்படுத்துவது அவசியம். இரத்த அழுத்த நோயாளிகள், மார்பு படபடப்பு உடையவர்கள் மாதுளையைச் சாப்பிட மாற்றத்தை உணர்வீர்கள்.

சருமத்தில் தோன்றும் தேமலை அழித்து, எழில் மேனி பெற உதவும் செவ்விய பழம் இது. மூட்டுத் தேய்மானத்தால் அவதிப்படுபவர்கள் மாதுளையை அவ்வப்போது சுவைத்துவர, வலிநிவாரணம் கிடைக்கும். முதிர்ந்த வயதில் ஏற்படும் புரஸ்தகோளப் புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் படைத்தது மாதுளை.

குழந்தைகளுக்கு

குழந்தைகள் மாதுளையைச் சாப்பிட மறுக்கும் போது, உணவுகளில் முத்துக்களைப் பொதித்து, கண்கவர் வடிவங்களில் வழங்கலாம். தோசைக்குள் மசாலா போல மாதுளை முத்துக்களை வைத்து அவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டலாம். மாலை வேளை சிற்றுண்டியாக மாதுளம் பழம் குழந்தைகளின் கண்முன்னே விரியட்டும். முளைக்கட்டிய தானியங்களின் மீது, மாதுளை முத்துக்களைத் தூவிக் கொடுக்க ஊட்டங்கள் விரைவாக உடலில் சேரும்.

கிரீன் டீயில் இருப்பதைவிட இருமடங்கு எதிர்-ஆக்ஸிகரணிப் பொருட்களை தன்னகத்தே மாதுளை விதைகள் கொண்டுள்ளன. இதிலிருக்கும் ஆந்தோசையனின்கள், எல்லாஜிக் அமிலம், புனிசிக் அமிலம் போன்றவை மாதுளம் பழத்தின் நோய் தீர்க்கும் தன்மைக்குக் காரணமாகின்றன. இரத்தக் குழாயில் படியும் கொழுப்புத் திட்டுக்களை அகற்றும் வல்லமை கூட மாதுளைக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தயிர்ச் சாதத்தில் மாதுளை முத்துக்களைப் பொதித்துச் சாப்பிட, புளிப்பும் இனிப்பும் மிக்க உன்னதமான சுவையை உணரலாம். பழ சாலட்கள், பனிக்கூழ்களிலும் தற்போது மாதுளை முத்துக்களைச் சேர்க்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. தானாகப் பழுத்து வெடித்த மாதுளை முத்துக்களை இடித்து சாறு பிழிந்து, மெல்லிய துணியில் வடிகட்டி கற்கண்டு சேர்த்துப் பருக, நெஞ்செரிவு, மயக்கம், விக்கல் போன்ற குறி குணங்கள் சட்டெனக் குறையும். மாதுளம் பழத் தோலை உலர்த்தி மோரில் கலந்து கொடுக்க, வயிற்று வலியுடன் உண்டாகும் பேதி நிற்கும்.

நீர்த்த விந்துவைக் கெட்டிப்படுத்தும் ஆற்றல் மாதுளை வித்துக்களுக்கு உண்டு. கூடவே பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும் தன்மை கொண்டது. ஆண்மை ஆற்றலைப் பெருக்க, அடிக்கடி மாதுளையைப் புசித்து வரலாம் என்பதை, 'மாதுளைக் கனியுண மதனகாமேசுர… எனத் தொடங்கும் சித்த மருத்துவப் பாடலின் மூலம் அறிந்துகொள்ளலாம்.

கொண்டைக் கடலையை அரைத்து, உலர்ந்த மாதுளை விதைகளைத் தூவி தரும் சிற்றுண்டி ரகம், மத்திய தரைக்கடல் நாடுகளில் பிரசித்தமானது. மாதுளை ரசத்தைக் கொண்டு, ஆல்கஹால் கலப்படமில்லாத உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய 'மாதுளை மது' பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்படுகிறது.

மற்ற பழங்களைப் போலவே மாதுளையையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். மாதுளம் பழச்சாறு பருக நினைத்தால், வெள்ளைச் சர்க்கரை மற்றும் ஐஸ்கட்டிகளின் ஆதரவைத் தேடாதீர்கள். இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று ரகங்களில் மாதுளை கிடைக்கிறது. கொஞ்சம் துவர்ப்புச் சுவையுடைய மாதுளம் பழத்தைக் கொண்டு ஈறுகளில் தேய்த்து வெந்நீர் கொண்டு வாய்க் கொப்பளிக்க, பல் ஈறுகள் பலமடைந்து, பற்களின் ஆரோக்கியம் மேம்படும். செயற்கை 'மவுத்-வாஷ்களுக்கு' மாற்றாக மாதுளை தோலை உலர்த்தி வெந்நீரில் கலந்து வாய்க் கொப்பளிக்கலாம்.

'அனர்தானா' (Anardana)

உலர்ந்த மாதுளை வித்துக்களுக்கு 'அனர்தானா' என்று பெயர். புளிப்புத் தன்மை கொடுப்பதற்காக பெர்சிய சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இறைச்சித் துண்டுகளின் மீது அரைத்த மாதுளை வித்துக்களைத் தடவிச் சமைக்க, சுவை பல மடங்கு அதிகரிக்கும். இதைச் சட்னியாகவும் செய்து உங்கள் உறவுகளைப் பரவசப்படுத்தலாம்.

மாதுளை மணப்பாகு

மாதுளை முத்துக்களை இடித்து சாறு பிழிந்து, அதற்குச் சம அளவு தேன் சேர்த்துத் தயாரிக்கப்படும் சுவைமிக்க மருத்துவச் சாறான 'மாதுளை மணப்பாகை' வீட்டிலேயே எளிமையாகத் தயாரித்து மாதுளையின் எண்ணற்ற பலன்களை நுகரலாம்.

மாதுளை கண் மை

மாதுளம் சாற்றினுள் வெள்ளைத் துணியை ஊறவைத்து உலரச் செய்ய வேண்டும். ஆமணக்கெண்ணெய் ஊறிய விளக்கில் சாறு ஊறிய துணியைத் திரித்து எரிக்க வெளிவரும் புகையை, பித்தளை பாத்திரத்தைக் கொண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். இதைக் கண் மையாகப் பயன்படுத்த, கண்களின் அழகு கூடுவதோடு, அவற்றின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

மாதுளம் பழக் கிரேவி

வெண்ணெய்ப் பழம் அல்லது முலாம்பழச் சதையோடு சிறிது எலுமிச்சை சாறு கலந்து நன்றாகக் கலக்கவும். தேவைக்கேற்ப சிறு வெங்காயம், பூண்டு, கொத்தமல்லி இலைகள், ஒரு கப் மாதுளம் பழச்சாறு சேர்த்து மிக்ஸியிலிட்டு நன்றாக அடித்து எடுக்க, 'பழக்கிரேவி' தயார். மெக்சிகோ நாட்டின் புகழ்பெற்ற தொடு உணவு வகை இது. இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையை விரும்புபவர்கள் இதை முயன்று பார்க்கலாம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in