

ஷார்ஜா... ’இந்த பானத்திற்கு ஏன் ஷார்ஜா எனப் பெயர் வந்தது?’ எனக் கடைக்காரரிடம் கேட்க, இரண்டு விதமான பதில்களை உதிர்த்தார் அவர். கிரிக்கெட் போட்டிக்கும் இந்தப் பானத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி அவர் பெயர்க் காரணத்தைக் கூறத் தொடங்கியபோது சுவாரசியம் மேலோங்கியது.
’1980-களின் பிற்பாதியில் கோழிக்கோடு பகுதியில் வெப்பத்தைத் தணிக்க ஒரு கடைக்காரர் வாழைப்பழங்கள், பால், வேர்க்கடலை எல்லாம் சேர்த்து வித்தியாசமான பானத்தைத் தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார்!
ஷார்ஜா கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்துக்கொண்டே பருகிய வாடிக்கையாளர்கள் பானத்தின் சுவையில் மயங்கி, ‘இந்த பானத்தின் பெயர் என்ன?’ எனக் கேட்க, ஷார்ஜா போட்டிகளை ரசித்துக்கொண்டிருக்கும்போது பருகப்பட்ட பானம் என்பதை மையப்படுத்தி ’ஷார்ஜா’ என்று அவர் பெயர் சூட்டியதாகச் செவிவழி வரலாறு’ எனக் கடைக்காரர் பானத்தின் பெயர்க் காரணத்தைச் சொல்லி முடித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து ஊர் திரும்பிய கேரளத்துக்காரர்கள் தயாரித்த பானம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறதாம்!
எது எப்படியோ சுவைக்குக் குறைவில்லை! ’யாதும் ஊரே, யாவையும் சுவையே!’
மருத்துவ குணங்கள்
பாலின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்து, வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாஷியம், கொட்டை ரகங்களில் இருக்கும் புரதங்கள், நலம் பயக்கும் கொழுப்பு அமிலங்கள் என ஷார்ஜாவில் ஊட்டத்திற்குக் குறைவில்லை. மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் உள்ள பல நுண்ணூட்டங்களும் உடலில் தஞ்சமடையும்.
மிகச் சிறந்த ஊட்ட பானமாக ஷார்ஜாவைக் குறிப்பிடலாம்! ஆனால் நிச்சயம் அதிக கலோரிகள் நிறைந்த பானம் இது!
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உங்கள் கலோரி கணக்கு முறைகளுக்கு ஏற்ப ஷார்ஜாவை சுவைக்கலாம். நீரிழிவு நோயாளர்கள் இந்த பானத்தைத் தவிர்ப்பதே சிறந்தது. உடல் எடை குறைந்தவர்கள், நோயால் மெலிந்தவர்கள் போன்றோருக்கு ’தேற்றுப் பானமாக’ ஷார்ஜாவைப் பரிந்துரைக்கலாம்.
எளிதாக வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளக் கூடிய பானம் இது!
'நமது பகுதியில் ஞாலிப்பூவன் கிடைப்பதில்லையே’ என அங்கலாய்க்காமல், நம் பகுதியில் கிடைக்கும் வாழை ரகங்களை வைத்தே ஷார்ஜாவைத் தயாரித்துச் சுவைக்கலாம். தமிழகத்தில் கிடைக்கும் சிறிய வாழை ரகமாகக் கருதப்படும் ஏலக்கி வாழைப் பழங்களை வைத்து ‘தமிழகத்து ஷார்ஜாவை’ தயாரித்து அறிமுகப்படுத்தலாம். சிறுவர் சிறுமிகளுக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து நலம் கூட்டப்பட்ட ஷார்ஜாக்களை அவ்வப்போது பருகச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்