

திருவனந்தபுரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயண தூரத்தில் உள்ள வர்கலா பகுதியின் வித்தியாசமான கடற்கரையை ரசிக்கச் செல்வதாகத் திட்டம். கேரள நண்பரும் நானும் கேரளத்தின் தனித்துவமான உணவுகள் குறித்துப் பேசிக்கொண்டே வர்கலா நோக்கி ரயிலில் பயணித்தோம். அப்போது நண்பர், ’ஷார்ஜா எனப்படும் சுவையான பானம் எங்கள் பகுதியில் மிகவும் பிரபலம், அதை வர்கலாவில் ருசித்துப் பார்த்திடுவோம்’ என உற்சாகமூட்டினார்.
வர்கலா ரயில் நிலையத்தில் இறங்கி, கடற்கரையின் வதனத்தை ரசித்துவிட்டு ஷார்ஜா விற்பனை செய்யப்படும் கடையை நோக்கி நகர்ந்தோம்! ’இரண்டு ஷார்ஜா வேணம்’ என மலையாளத்தில் நண்பர் கடைக்காரரிடம் கேட்க, ஷார்ஜாவின் தயாரிப்பு தொடங்கியது.
தயாரிக்கும் முறை
குளிரூட்டப்பட்ட அரை லிட்டர் பால், நறுக்கப்பட்ட நான்கு ஞாலிப்பூவன் (Njaalipoovan) ரக வாழைப் பழங்கள், இரண்டு தேக்கரண்டி வேர்க்கடலை ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு நன்றாக அடித்துக்கொள்கிறார்கள். பின்னர் காபித் தூள் அரை தேக்கரண்டி, சுவைக்கு இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து மிக்ஸிக்கு மீண்டும் வேலை கொடுக்கிறார்கள். அவ்வளவு தான்! மிகவும் எளிதான செயல்பாட்டின் மூலம் தயாராகிவிட்டது ஷார்ஜா!
நீண்டிருந்த கண்ணாடிக் குடுவைகளில் பானத்தை ஊற்றி அதற்கு மேல் சில வாழைப்பழத் துண்டுகளை மிதக்கவிட்டு, மீண்டும் கொஞ்சம் காபித் தூள், உடைக்கப்பட்ட பாதாம் துகள்களைத் தூவிப் பரிமாறுகிறார்கள். நான்கு நபர்களின் தாகத்தைச் சாந்தப்படுத்தும் அளவிற்கு ஷார்ஜா தயாராகியிருந்தது. கோடைக்கால கேரள வெப்பத்தால் நா வறண்டிருந்த சூழலில், கண்ணாடிக் குடுவையில் உதடு பதித்து அந்தப் பானத்தைப் பருகலானேன்! அமிர்தமாக இனித்தது ஷார்ஜா! வாழைப்பழங்கள் கலந்த பாலின் இனிப்பும், வேர்க்கடலை, பாதாமின் நொறுவைத் தன்மையும் ருசியை வாரி வழங்கின!
தேவைப்படின் ஷார்ஜா பானத்தின் மீது வெவ்வேறு ஃப்ளேவர்களில் பனிக்கூழ் ஒரு கரண்டி மிதக்கவிட்டு, சிறப்பு ஷார்ஜா ரகங்களாகவும் கொடுக்கிறார்கள். சிறுவர்களுக்குப் பிடித்தமான பானமாக ’பனிக்கூழ் ஷார்ஜா’ இருக்கிறதாம்! ஷார்ஜாவின் மீது பெரும்பாலும் நமது பகுதிகளில் கிடைக்கும் ஊட்ட பானங்களின் பவுடர் தூவப்படுவது குறிப்பிடத்தக்கது. வெயில் காலங்களில் கேரளாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஷார்ஜாவின் விற்பனை பட்டையைக் கிளப்புமாம்!
பெயர்க் காரணம்
’இந்த பானத்திற்கு ஏன் ஷார்ஜா எனப் பெயர் வந்தது?’ எனக் கடைக்காரரிடம் கேட்க, இரண்டு விதமான பதில்களை உதிர்த்தார் அவர். கிரிக்கெட் போட்டிக்கும் இந்தப் பானத்திற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி அவர் பெயர்க் காரணத்தைக் கூறத் தொடங்கியபோது சுவாரசியம் மேலோங்கியது. ’1980களின் பிற்பாதியில் கோழிக்கோடு பகுதியில் வெப்பத்தைத் தணிக்க ஒரு கடைக்காரர் வாழைப்பழங்கள், பால், வேர்க்கடலை எல்லாம் சேர்த்து வித்தியாசமான பானத்தைத் தயாரித்து தனது வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்திருக்கிறார்! ஷார்ஜா கோப்பை கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்துக்கொண்டே பருகிய வாடிக்கையாளர்கள் பானத்தின் சுவையில் மயங்கி, ‘இந்த பானத்தின் பெயர் என்ன?’ எனக் கேட்க, ஷார்ஜா போட்டிகளை ரசித்துக்கொண்டிருக்கும்போது பருகப்பட்ட பானம் என்பதை மையப்படுத்தி ’ஷார்ஜா’ என்று அவர் பெயர் சூட்டியதாகச் செவிவழி வரலாறு’ எனக் கடைக்காரர் பானத்தின் பெயர்க் காரணத்தைச் சொல்லி முடித்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவிலிருந்து ஊர் திரும்பிய கேரளத்துக்காரர்கள் தயாரித்த பானம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் ஒரு கருத்து நிலவுகிறதாம்! எது எப்படியோ சுவைக்குக் குறைவில்லை! ’யாதும் ஊரே, யாவையும் சுவையே!’
சுவையின் ஊற்று
பருகப்பட்ட ஷார்ஜாவின் விலை 60 ரூபாய்! ரகங்களுக்கு ஏற்ப விலையில் மாற்றங்கள் இருக்கின்றன. ஷார்ஜாவின் சுவையில் லயித்துக் கொண்டே அதைக் குறித்த தேடல் தொடங்கியது! தொடக்கத்தில் வாழைப் பழங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட பானத்தில் காலத்திற்கேற்ப பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
வாழைப் பழங்களுக்குப் பதிலாகச் சப்போட்டா பழங்களைக் கொண்டும் ஷார்ஜா தயாரிக்கப்படுகிறது. பாதாம், பிஸ்தா, வால்நட் எனக் கொட்டை ரகங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கப்படுகின்றன. பேரீச்சை, அத்தி போன்ற பழத் துண்டுகளும் ஷார்ஜாவில் இடம்பிடிக்கின்றன. சில இடங்களில் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தும் பானத்தைத் தயாரிக்கிறார்கள். ஞாலிப்பூவன் ரக வாழைப் பழங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்ட பானம் இப்போது பல்வேறு ரக வாழைப் பழங்களில் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் ஞாலிப்பூவன் எனும் சிறிய ரக வாழைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் ஷார்ஜாவே சுவை மிக்கதாகக் கருதப்படுகிறது!
ஞாலிப்பூவன்
ஷார்ஜா பற்றிப் பேசும்போது, ஞாலிப்பூவன் பழங்களின் பெருமைகளைப் பேசாமல் இருக்க முடியாது. அளவில் சிறியதாக இருந்தாலும் சுவையிலும் வாசனையிலும் வித்தியாசத்தைக் கொடுக்கக்கூடியது ஞாலிப்பூவன். பழத்தின் தோல் மற்ற வாழை ரகங்களைவிட மிகவும் மிருதுவாக இருக்குமாம். கேரளத்துத் திருமணப் பந்திகளில் ஞாலிப்பூவனே இடம்பெறுகின்றன. திருவனந்தபுரம் பகுதியில் ’ரெசகதளி’ என்றும் ஞாலிப்பூவனை அழைக்கிறார்கள். ’நீயுப்பூவன்’ என்ற மாற்றுப்பெயரும் இதற்கு உண்டு. ஞாலிப்பூவன் ரக வாழை மரங்களை அவ்வளவு சீக்கிரமாக நோய்த் தாக்குவதில்லையாம். தென் கேரளத்துப் பகுதியில் அதிகமாக இந்தப் பழ ரகம் கிடைப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள்.
மருத்துவ குணங்கள்
பாலின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்து, வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாஷியம், கொட்டை ரகங்களில் இருக்கும் புரதங்கள், நலம் பயக்கும் கொழுப்பு அமிலங்கள் என ஷார்ஜாவில் ஊட்டத்திற்குக் குறைவில்லை. மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் உள்ள பல நுண்ணூட்டங்களும் உடலில் தஞ்சமடையும். மிகச் சிறந்த ஊட்ட பானமாக ஷார்ஜாவைக் குறிப்பிடலாம்! ஆனால் நிச்சயம் அதிக கலோரிகள் நிறைந்த பானம் இது! உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உங்கள் கலோரி கணக்கு முறைகளுக்கு ஏற்ப ஷார்ஜாவை சுவைக்கலாம். நீரிழிவு நோயாளர்கள் இந்த பானத்தைத் தவிர்ப்பதே சிறந்தது. உடல் எடை குறைந்தவர்கள், நோயால் மெலிந்தவர்கள் போன்றோருக்கு ’தேற்றுப் பானமாக’ ஷார்ஜாவைப் பரிந்துரைக்கலாம்.
எளிதாக வீட்டிலேயே தயாரித்துக்கொள்ளக் கூடிய பானம் இது! ’நமது பகுதியில் ஞாலிப்பூவன் கிடைப்பதில்லையே’ என அங்கலாய்க்காமல், நம் பகுதியில் கிடைக்கும் வாழை ரகங்களை வைத்தே ஷார்ஜாவைத் தயாரித்துச் சுவைக்கலாம். தமிழகத்தில் கிடைக்கும் சிறிய வாழை ரகமாகக் கருதப்படும் ஏலக்கி வாழைப் பழங்களை வைத்து ‘தமிழகத்து ஷார்ஜாவை’ தயாரித்து அறிமுகப்படுத்தலாம். சிறுவர் சிறுமிகளுக்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து நலம் கூட்டப்பட்ட ஷார்ஜாக்களை அவ்வப்போது பருகச் செய்து அவர்களை உற்சாகப்படுத்தலாம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com