

குரங்கு அம்மை எனும் வைரஸ் தொற்று கடந்த வாரத்தில் 16 நாடுகளில் பரவிவருவதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்தது. வழக்கமாக இது பரவுகிற மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளைத் தவிர்த்து, இதுவரை பரவாத நாடுகளில் பரவிவருவதுதான் இந்த பீதிக்கு முக்கியக் காரணம்.
பரவுவது எப்படி? - குரங்கு அம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு விலங்கிடமிருந்து மற்றொரு விலங்குக்குப் பரவுவதுதான் வழக்கம். முக்கியமாக, அணில்கள், எலிகள், முள்ளம்பன்றி போன்ற, கொறித்து உண்ணும் பழக்கமுள்ள விலங்கினங்களிலிருந்து மற்ற விலங்குகளுக்கு இந்த அம்மை நோய் பரவுகிறது. தொற்றுள்ள விலங்குகளோடு நெருங்கிய தொடர்புகொள்ளும் மனிதர்களுக்கும் இது பரவுகிறது. குறிப்பாக, விலங்குக் கடிகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது.
நோயாளி இருமும்போதும் தும்மும்போதும் காறித் துப்பும்போதும் எச்சில் மற்றும் சளி மூலம் மற்றவர்களுக்கு இந்தத் தொற்று பரவுகிறது. நோயாளி பயன்படுத்திய ஆடை, துண்டு, போர்வை போன்றவற்றின் வழியாகவும் இது பரவக்கூடும். பாலுறவு மூலமும் இது பரவுவதாகச் சமீபத்தில் பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளில் அறியப்பட்டுள்ளது.
பயனாளியின் சளி, ரத்தம், கொப்புளநீர் போன்றவற்றின் மாதிரிகளை எடுத்து ‘ஆர்.டி.பி.சி.ஆர்’ பரிசோதனை செய்தால் இந்த நோயை உறுதிசெய்ய முடியும்.
சிகிச்சை, தடுப்பூசி உண்டா?
குரங்கு அம்மைக்கெனத் தனிப்பட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்பதே அநேக உலக நாடுகளின் நிலைப்பாடு. இந்த நோயாளிகளுக்கு அறிகுறிகளைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வழங்கப்படுவதும், அம்மைக் கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதும், ஊட்ட உணவுகள் மற்றும் திரவ உணவுகள் தாராளமாக வழங்கப்படுவதும் இப்போதுள்ள முக்கிய சிகிச்சைகள்.
நவீன சிகிச்சைகள்
உலக நாடுகளில் அமெரிக்காவில் மட்டும் குரங்கு அம்மைக்கு ‘சிடோஃபோவீர்’ (Cidofovir), ‘பிரிங்கிடோஃபோவீர்’ (Brincidofovir) எனும் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. பயனாளிகளுக்கு ‘விஐஜி’ தடுப்பூசியும் (VIG - Vaccinia Immune Globulin) செலுத்தப்படுகிறது. இந்த நோய்க்குப் புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுவருவதாக உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானது அங்காரா இனக் குரங்கு அம்மை வைரஸில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி (Live, Attenuated vaccinia virus – Ankara strain). நான்கு வார இடைவெளியில், இரண்டு தவணை செலுத்திக்கொள்ளும் தடுப்பூசி இது. அம்மை நோயாளியோடு தொடர்புகொள்வதற்கு முன்போ, தொடர்பு கொண்ட முதல் நான்கு நாட்களுக்குள்ளாகவோ இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டால் குரங்கு அம்மை வருவது தடுக்கப்படுகிறது. இந்தியா உட்படப் பல நாடுகளில் இன்னும் இது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்போதுதான் இந்த நோய் பரவிவருவதால் இனிமேல் இது வரக்கூடும்.
> இது, பொதுநல மருத்துவர் கு.கணேசன், எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்