

குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும், இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன. இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் இது வரை கேமரூன் நாட்டில் மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.
குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் அது மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.
பொதுவாக, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே இது மனிதர்களுக்குப் பரவும். தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தொடுவதன் மூலமோ, அதன் உடல் திரவங்கள் மூலமாகவோ அது மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாக எலி, அணில் போன்ற விலங்குகளிடமிருந்து இந்த நோய், பரவுவதாகக் கூறப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியைச் சரியாக வேக வைக்காமல் சாப்பிடுவதே நோய்ப் பரவுதலுக்கான முக்கிய காரணம்.
அறிகுறிகள்: காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் மற்றும் இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி, தரமற்ற மருத்துவச் சேவையைப் பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயால் இறக்கும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், முறையான சிகிச்சையை மேற்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில வாரங்களில் குணமடைந்துவிட முடியும் என்பதை அந்த ஆராய்ச்சி உணர்த்துகிறது.
சிகிச்சை: குரங்கு அம்மைக்கு எனத் தனியாகச் சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனளிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. புதிய தடுப்பூசிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்த உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்தும் இருக்கிறது.
குரங்கு அம்மை நோய்ப் பரவலின் ஆபத்து காரணிகள், பரவலைக் குறைப்பதற்குத் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே இந்த நோயின் பரவலைத் தடுக்கும் முதல் படி. கண்காணிப்பையும் கண்டறிதலையும் அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும். அவற்றை விரைவுபடுத்தவும் வேண்டும்.
> இது, முகமது ஹுசைன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்