

கரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் சூழலில், குரங்கு அம்மை குறித்த எச்சரிக்கை இப்போது வரத் தொடங்கி உள்ளது. உலகச் சுகாதார நிறுவனம் 20,மே அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, இதுவரை 80 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்தக் கண்காணிப்பு விரிவடையும்போது, குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. முதலில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிலும் இது பரவுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நோய் கண்டம் விட்டு கண்டம் பரவத் தொடங்கி இருப்பதை இது உறுதி செய்கிறது.
குரங்கு அம்மை எதனால் ஏற்படுகிறது?
குரங்கு அம்மை வைரஸால் ஏற்படும் ஓர் அரிய வகை தொற்று நோய் இது. குரங்கு அம்மை வைரஸ் என்பது Poxviridae குடும்பத்தின் Orthopoxvirus இனத்தைச் சேர்ந்த ஒரு இரட்டை இழை DNA வைரஸ். இந்த வைரஸில் இரண்டு தனித் தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் (காங்கோவைச் சுற்றியுள்ள நாடுகள்), இரண்டாவது பிரிவு மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டன. இவற்றில் காங்கோ பகுதியில் கண்டறியப்பட்ட வைரஸே கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்தது. இது வரை ஒரே நாட்டில் இந்த இரண்டு வைரஸ் பிரிவுகளும் கண்டறியப்பட்டது கேமரூனில் மட்டுமே.
எப்போது ஏற்பட்டது?
1958இல் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதலில் ஆய்வகத்தில் உள்ள குரங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நோய் குரங்கு அம்மை என அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு 1970இல் பரவத் தொடங்கியது. மனிதர்களுக்கு ஏற்பட்ட முதல் பாதிப்பு காங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இந்தத் தொற்று 2017இல் நைஜீரியா, காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது. தற்போது இந்தப் பரவல் ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தாண்டி உலகெங்கும் பரவத் தொடங்கியுள்ளது.
எப்படிப் பரவுகிறது?
குரங்கு அம்மை நோய் மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. இருப்பினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்திய பொருள்களை உபயோகிப்பதன் மூலம் அது மற்றவர்களுக்குப் பரவலாம். கரோனாவைப் போன்று, இந்த நோயும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இருமல், தும்மலின் மூலமும் மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.
பொதுவாக, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே இது மனிதர்களுக்குப் பரவும். தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளைத் தொடுவதன் மூலமோ, அதன் உடல் திரவங்கள் மூலமாகவோ அது மனிதர்களுக்குப் பரவுகிறது. குறிப்பாகஎலி, அணில் போன்ற விலங்குகளிடமிருந்து இந்த நோய், பரவுவதாகக் கூறப்படுகிறது. குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியைச் சரியாக வேக வைக்காமல் சாப்பிடுவதே நோய்ப் பரவுதலுக்கான முக்கிய காரணம்.
அறிகுறிகள்
இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும்.
உயிருக்கு ஆபத்தை விளைவிக்குமா?
உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியின்படி, தரமற்ற மருத்துவச் சேவையைப் பெறும் 10 நபர்களில் ஒருவர் இந்த நோயால் இறக்கும் சாத்தியம் உள்ளது. இருப்பினும், முறையான சிகிச்சையை மேற்கொண்டால் இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு சில வாரங்களில் குணமடைந்துவிட முடியும் என்பதை அந்த ஆராய்ச்சி உணர்த்துகிறது.
சிகிச்சை
குரங்கு அம்மைக்கு எனத் தனியாகச் சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும் பெரியம்மை தடுப்பூசிகள் இந்த வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பெரிதும் பயனளிக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. புதிய தடுப்பூசிகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றைப் பயன்படுத்த உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்தும் இருக்கிறது.
எப்படித் தடுப்பது?
குரங்கு அம்மை நோய்ப் பரவலின் ஆபத்து காரணிகள், பரவலைக் குறைப்பதற்குத் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதே இந்த நோயின் பரவலைத் தடுக்கும் முதல் படி. கண்காணிப்பையும் கண்டறிதலையும் அரசாங்கம் தீவிரப்படுத்த வேண்டும். அவற்றை விரைவுபடுத்தவும் வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்தத் தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகம். சந்தேகத்திற்கிடமான அல்லது உறுதிப்படுத்தப்பட்ட குரங்கு அம்மை தொற்று உள்ள நோயாளிகளைப் பராமரிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் தொற்றுக் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். நோயாளியைப் பராமரிப்பதற்குப் பெரியம்மைக்கு எதிராகத் தடுப்பூசி போடப்பட்ட நபர்களைத் தேர்ந்தெடுப்பது ஆபத்தைக் குறைக்க உதவும். சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை வைரஸ் தொற்று உள்ளவர்களிடமிருந்து பெறப்படும் மாதிரிகள், உலகச் சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி கையாளப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்.
விழிப்புடன் இருக்க வேண்டும்
தேசிய நோய்த் தடுப்பு மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)உள்ளிட்ட அமைப்புகள் குரங்கு அம்மை பாதிப்பை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. விமான நிலையங்களும்துறைமுகங்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன. குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து நோய் பாதிப்புடன் வரும் பயணிகளைத் தனிமைப்படுத்தவும், மாதிரிகளைச் சேகரித்து புனேயில் உள்ள தேசிய நோய்க்கிருமியியல் ஆய்வகத்துக்குப் பரிசோதனைக்கு அனுப்பவும் ஒன்றிய அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகவில்லை என்றாலும், தமிழக அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளுக்குக் கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களை அது தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் உள்ள நோயாளிகள் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பாதிப்பு உறுதியான நபர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனே தங்களைத் தனிமைப்படுத்திப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசும் வலியுறுத்தியுள்ளது.
கரோனாவைப் போன்று இது மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் நோய் அல்ல. இதை எளிதில் குணப்படுத்தி விடமுடியும். இருப்பினும், இந்த நோயின் பரவலைத் தடுப்பதற்குப் பொதுமக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசின் வழிகாட்டல்களையும் மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.