Published : 22 May 2022 03:30 PM
Last Updated : 22 May 2022 03:30 PM

உங்கள் பைக் சொல்லித் தரும் ‘பல்லுயிர் பெருக்கம்’!

முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ என்கிற சொல்லாக்கமும் அது குறித்த சொல்லாடலும் அதிகரித்துள்ள காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஏனென்றால் பூமியில் வாழும் திமிங்கலம் தொடங்கி, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வரை கோடிக்கணக்கான உயிரினங்களோடு சேர்ந்தே நாம் வாழ்ந்து வருகிறோம். தாவரங்கள், விலங்குகள், பறவைகள், கடலுயிர்கள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படும் சுற்றுச்சூழல் அமைப்பையே ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ என்கிறோம். இவற்றின் ‘உயிர்ச் சமநிலை’யைப் பாதுகாப்பதன் மூலமே மனித இனம் சிக்கல்கள் இல்லாமல் வாழ முடியும். ஏன் பாதுகாக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா?

வாழிடம், உணவு, இனப்பெருக்கம் போன்ற பல்வேறு வாழ்நிலைகளில், முற்றிலும் வேறுபடுகின்ற இக்கோடிக் கணக்கான உயிரினங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புகொண்டவையாக, ஒன்றையொன்று சார்ந்தவையாக வாழ்ந்து வருகின்றன. அதேநேரம், ஒவ்வொரு உயிரினமும் தனிப்பட்ட சுற்றுச்சூழலைத் தேர்ந்துகொள்கின்றன.எடுத்துக்காட்டாக வெப்பமண்டலக் காடுகளில் பல்வகை மரங்கள், செடிகள், கொடிகள், புற்கள் ஆகியவற்றுடன், பூச்சியினங்கள், பூஞ்சை உள்ளிட்ட நுண்ணுயிர்கள், காளன்கள், மீன்கள், ஊர்வன, பல்வகைப் பறவைகள், பாலூட்டிகள் வசிக்கின்றன. இந்த உயிர்கள் அழியாமல் இருக்கும்போதுதான் அக்காடுகள் உருவாக்கி வைத்திருக்கும் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ பாதுகாக்கப்படும்.

மாறாக, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களாலும் மனித இனம் செய்துவரும் ‘இயற்கை அழிப்பு’ உள்ளிட்ட தவறுகளாலும் பல உயிரினங்களின் வாழ்விடமும் அவற்றின் உணவுச் சங்கிலியும் சீர்குலையும்போது அவை அழிந்துபோகின்றன. அதன் விளைவாக அப்பகுதியில் நிலைத்திருந்த ‘பல்லுயிர்ப் பெருக்க’ச் சமநிலை மீது மரண அடி விழுகிறது. அது மனித வாழ்க்கையின் மீது விழும் மரண அடிதான். இப்படிச் சமலநிலைச் சீர்குலைவதை அத்தனை எளிதாக மீண்டும் அதன் இயல்புக்கு மாற்றியமைக்க முடியாது.

உயிர்களால் கிடைக்கும் உணவு

நமது உணவுத் தேவையின் பெரும்பகுதி தாவரங்களையும் விலங்குகளையும் சார்ந்ததாகவே இருக்கிறது. தாவரங்கள், உயிரினங்களிருந்துதான் இயற்கையான மருந்துகள் கிடைக்கின்றன. அதேபோல் நாம் அணியும் ஆடைகள், வாழும் இருப்பிடம் ஆகியவற்றிலும் தாவரங்கள், விலங்குகளின் பங்கு மகத்தானதாக இருக்கிறது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால், இறைச்சி, கடலுணவு என உணவின் பெரும்பகுதியும் தாவரங்களாலும் விலங்குகளாலும் கிடைப்பவைதாம். ஆக, உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்காக மனிதன் உயிரினங்களையே நம்பியிருக்கிறான். அந்த வகையில் ‘பல்லுயிர்ப் பெருக்கம்’ நம் கண்ணுக்குத் தெரியாமல் இயற்கையாக நடைபெறும் சுற்றுச்சூழல் செயல்பாட்டினை பலகோடி ஆண்டுகளாகச் செய்துகொண்டிருக்கிறது.

பல்லுயிர் பெருக்கச் சமநிலையில் தேனீக்களின் பங்கு மகத்தானது. வாழை, மா, கொய்யா தொடங்கி, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு எனப் பழ வகைகள், பருத்தி, காபி, ஏலக்காய், முந்திரி போன்ற பணப் பயிர்கள், நெல், கோதுமை, சிறுதானியங்கள் என உணவு தானியங்கள், காய் கறிச் செடிகள், கொடிகள் வரை உணவுத் தாவரங்களின் விளைச்சல் பெருகிட காரணமாக இருக்கும் மகரந்தச் சேர்க்கைக்குத் தேனீக்கள்தாம் தேவதைகள்போல் காரணமாக இருக்கின்றன. ஆனால், கொடிய பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களைப் பயன்படுத்தித் தேனீக்களை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன்? மண்ணில் சத்துகளை மறுசுழற்சி செய்து அதன் வளத்தைக் கூட்டும் மண் புழுக்களையும் விட்டுவைக்கவில்லை. பல்லுயிர்ப் பெருக்கத்தின் சமநிலை வீழ்ச்சியடைந்தால் அறிவியலின் துணைகொண்டு அதை மீட்டெடுக்க முடியாது.

மோட்டர் சைக்கிளிடம் கேளுங்கள்!

நீங்கள் பெரிதும் விரும்பும் உங்கள் மோட்டர் சைக்கிளை அக்கறையுடன் பராமரிப்பீர்கள். அதன் இன்ஜின் சரிவர இயங்க, சரியான கால இடைவெளியில் ‘இன்ஜின் ஆயில்’ மாற்றுவீர்கள். பிரேக் தேய்ந்துபோய் அது சரிவரப் பிடிக்கவில்லை என்றால் ‘பிரே ஷூ’ மாற்றுவீர்கள். ஹெட் லைட் எரியாமல் போனால், அதன் பல்பை மாற்றாமல் நீண்ட நாட்கள் ஓட்ட முடியாது. ஹெட் லைட் இல்லாமல் செய்யும் இரவுச் சவாரி சாத்தியமே கிடையாது. மோட்டர் சைக்கிள், கார் என உங்கள் வாகனம் எதுவாக இருந்தாலும் அவற்றின் ஒவ்வொரு பாகமும் சரிவரப் பராமரிக்கப்படாவிட்டால் அவை இயங்காது. உயிரற்ற வாகனம் சீராக இயங்க, அதன் ஒவ்வொரு பாகத்துக்கும் இத்தனை அக்கறையும் பராமரிப்பும் தேவைப்படும்போது, நம்மைச் சுற்றி வாழும் ஒவ்வொரு உயிரையும் காக்கவேண்டிய பொறுப்பும் அவசியமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது! அதைத்தான் இன்றைய ‘சர்வதேசப் பல்லுயிர்ப் பெருக்க நாள்’நமக்கு வலியுறுத்துகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x