

தண்ணீர் அருந்தாமல் எப்படி வாழ முடியாதோ, அப்படித்தான் பெரும்பாலானவர்களுக்குத் தேநீரும். அந்தத் தேநீர் கண்டறிப்பட்ட கதை, தேநீரைப் போலவே சுவையான, வரலாறும் கற்பனையும் கலந்தது. அந்தக் கதையும் ஒன்றல்ல, பல கதைகள். அவற்றில் பிரபலமான இரண்டு கதைகள் சீன தேசத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை. காரணம், காகிதத்தை மட்டுமல்ல; தேயிலையைக் கண்டறிந்து அதன் ருசியை உலகுக்குப் பகிர்ந்தவர்களும் சீனர்கள்தாம்.
தேயிலையை அவர்கள் கண்டறிந்தது சராசரியாக கி.மு. 2500களில் என்கிறது சீனர்களின் வரலாறு. கி.மு.551-ல் பிறந்த சீன மெய்யியலாளர் கன்பூசியஸ் தன்னுடைய ஆன்மிகக் கவிதையொன்றில் தேநீரைப் புகழ்ந்து குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அவரது காலத்திலேயே புகழ்பெற்ற பானமாக தேரீர் இருந்திருக்கிறது அல்லவா? வாருங்கள் அந்த இரண்டு கதைகளையும் ஒரு வலம் வரலாம்.
ஷேன் நோங்கும் போதி தர்மரும்
மூலிகைச் செடிகள், தாவரங்களின் இலைகள் ஆகியவற்றை வாயில் போட்டு மென்று, அவை தரும் ருசியின் வழியாக அவற்றின் மருத்துவக் குணங்களைப் பற்றி எழுதி வைத்த ஒரு சீனப் பேரரசர் இருந்தார். அவர்தான் யான் வம்ச சாம்ராஜ்ஜியத்தைச் சீனாவில் நிறுவிய ஷேன் நோங் (神農). இவர் இப்படிச் செடிகளைச் சுவைத்து, கொதிக்கும் தண்ணீரில் இலைகளைப் போட்டு அவற்றின் சாறு இறங்கியதும் அதைச் சுவைத்துப் பார்த்து, அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்கிற மருத்துவக் குறிப்புகளை எழுதி வைத்துச் சென்றிருக்கிறார். இந்த அரசரை இன்றைக்கும் சீனர்கள் தங்களுடைய மூதாதைகளில் முக்கியமானவராக, நாட்டர் தெய்வமாக வழிப்பட்டு வருகிறார்கள். செடிகளைக் கொதிக்கும் தண்ணீரில் ஷென் நோங் போட்டுப் பார்த்த ‘டெக்னிக்’ என்பது அவர், தேயிலையைக் கண்டுபிடித்த பிறகே செய்யப்பட்ட முறை குறிப்பிடுகிறார்கள் சீனர்கள்!
அதாவது, தனது தேசத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து மக்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த ஷென் நொங், தன்னுடைய பயணத்தில் சுடு தண்ணீரை மட்டுமே அருந்துவார். ஒருமுறை மலைப்பிரதேசம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது ஒரு சிறிய மரத்துத்துக் கீழே அடுப்பு மூட்டி, அதில் பாத்திரம் வைத்துத் தண்ணீர் ஊற்றி அதைக் கொதிக்க வைத்துக்கொண்டிருந்தார் அரசரின் உதவியாளர். அப்போது குளிரைச் சமாளிப்பதற்காக அடுப்பின் அருகில் வந்து அமர்ந்தார் ஷென் நொங். அந்த நேரத்தில் வேகமாகக் காற்று வீச, அந்தச் சிறிய மரத்திலிருந்து பழுத்திருந்த இலைகள் பல கொதித்துக்கொண்டிருந்த சுடுநீர் பாத்திரத்தில் விழுந்தன. அடுத்த நிமிடமே சுடு தண்ணீரின் வண்ணம் பொன்னிறத்துக்கு மாறியதுடன் அதிலிருந்து எழுந்த மணம், ஷென் நொங்கைச் சட்டென்று கவர்ந்தது. அதை எடுத்து ஊற்றப்போன உதவியாளரைத் தடுத்து, கிண்ணத்தில் சிறிது ஊற்றித் தரும்படி கேட்டார். உதவியாளரோ அரசருக்கு ஏதும் ஆகிவிடுமோ எனப் பயந்து மெய்க்காவலரை அழைத்தார். மெய்க்காவலர் ஓடி வந்து, அரசன் அருந்தும்முன், இலையின் சாறு இறங்கிய சுடுநீரை அருந்திவிட்டுக் காத்திருந்தார். சில நிமிடங்கள் கடந்ததும் அரசன் மெய்க்காவலரிடம் கேட்டார், “எப்படியிருந்தது? உன்னால் மூச்சுவிட முடிகிறதா?” மெய்க்காவலர் சொன்னார், “உற்சாகமாக இருக்கிறது அரசே..! இன்னும் அருந்த வேண்டும் எனத் தோன்றுகிறது” என்றார். அடுத்து ஷென் நோங் அருந்திவிட்டு மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். இப்படித்தான் ஷென் நொங் வழியே தேயிலைக் கண்டுபிடிப்பும் தேநீர் கண்டுபிடிப்பும் ஒருசேர நிகழ்ந்தது என்கிறது சீன நாட்டர் கதை.
இரண்டாம் கதை
கௌதம புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது சீடர்களில் ஒருவராக ஆனவர், வட தமிழ்நாட்டிலிருந்து சீனம் சென்று சித்த மருத்துவத்தையும் பௌத்தத்தையும் பரப்பியவர் என்று போதி தர்மரைப் பற்றி இணையத்தில் நிறைந்திருக்கும் வாய்மொழி வரலாறுப் பதிவுகள் விவரிக்கின்றன. இவர் தியானக் கலையிலும் வல்லவராக இருந்தார் என்றும் இவரது கண் இமைகளே தேயிலைச் செடிகளாக முளைத்தன என்றும் மற்றொரு சுவாரசியமான கதை கிடைக்கிறது.
அந்தக் கதையின்படி, கண்களை மூடி, உலகை மறந்து, இரவு, பகல் பாராமல் தியானத்தில் மூழ்கினால் மட்டுமே வாழ்க்கையை வெல்ல முடியும் என்று நம்பினார் போதி தர்மர். அதனால் ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். ஆனால், தியானம் ஒரு கட்டத்தில் தூக்கமாக மாறி அவரைத் தோல்வியுறச் செய்தது. இதனால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் அமர்ந்தார். மீண்டும் தூக்கம் தொந்தரவு செய்யவே, தூக்கம் என்பது கீழான மானிடப் பலவீனம் என்று கருதிய போதி தர்மர், தன்னுடைய கண்களின் இமைகளை அறுத்துத் தரையில் வீசிவிட்டு ரத்தம் சொட்டச் சொட்ட தியானத்தைத் தொடர்ந்தார். அவர் அறுத்து வீசிய இமைகள் மறுநாள் பசுஞ்செடிகளாக முளைத்து இலை விட்டிருந்தன. அந்த இலைகளை போதி தர்மர் சுவைத்துப் பார்த்தபோது அவை புத்துணர்ச்சி அளித்தன. அந்தச் செடிகள்தாம் தேயிலை என்பதாக முடிகிறது அந்தக் கதை.
இந்த இரண்டு கதைகளிலும் நிறைந்திருக்கும் கற்பனை, புராணத் தன்மை ஆகிய அனைத்தையும் ஒதுக்கிவிடலாம். இதுபோன்ற கதைகள் சீனர்களிடம் நிறைந்திருப்பதிலிருந்தே தேயிலையையும் தேநீரையும் அவர்கள் முன்னதாகச் சுவைத்திருக்கிறார்கள் என்கிற தர்க்க ரீதியான நாம் முடிவுக்கு வரலாம்.
தேயிலையின் பரவல்
சீனத்தில் தேநீர் பிரபலமானதும் வெகு சீக்கிரமே பௌத்த துறவிகளின் வழியாக ஜப்பானை அடைந்தது. கி.மு.400இல் சானோயு ( 茶の湯 - chanoyu ) அல்லது சடோ என்கிற பெயரில் தேநீர் அருந்துவதையும் விருந்தினர்களுக்குத் தேநீர் அளிப்பதையும் ஓர் உயர்ந்த சடங்காக, காலச்சாரத்தின் கலாபூர்வ அங்கமாக மாற்றிக்கொண்டார்கள் ஜப்பானியர்கள். அவர்கள் தேநீரை நுரை ததும்பிய சூடான ஒரு சூப் போல அருந்தினார்கள் என்கிறது அவர்களுடைய செவ்வியல் வரலாறு. அவர்கள் உலர் பச்சைத் தேயிலையைத் தண்ணீரில் போட்டு அதில் மிதமான அளவு உப்பைப் போட்டுக் கொதிக்க வைத்ததுடன், அதில் இலவங்கம், இஞ்சி ஆகியவற்றையும் போட்டுக் பருகி வந்திருக்கிறார்கள்.
ஆனால், தேநீரை எப்படித் தயாரிப்பது என்பது பற்றிய ஓர் ஒழுங்குமுறை அறிவினை உலகுக்கு முதலில் ஒரு புத்தகமாக எழுதிக்கொடுத்தார் ஒரு சீனர். அவரது பெயர் லூ யூ சாங். ‘தேநீர் புத்தகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம் கி.பி.780இல் வெளியாகி கிழக்கு நாடுகளில் தேயிலையுடன் பிரபலமானது. ‘தேநீரின் பைபிள்’ என்று புகழப்பட்ட அந்தப் புத்தகம் உலர்ந்த தேயிலையைக் கொண்டு தேநீர் தயாரிப்பதைச் சொல்லிக் கொடுத்ததுடன் தேயிலைப் பயிரிடுவதையும் சொல்லிக்கொடுத்தது. அதன் பிறகே, ஆங்கிலேயர்களுக்கும் பிடித்துபோனது தேநீர். தங்கத்தைத் தேடியதுபோல் தேயிலையைத் தேடியும் அவர்கள் புறப்பட்டதும் தேயிலை விளையும் நிலங்கள் இருந்த பகுதிகளைக் காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததும் வரலாறு.
இன்று பன்னாட்டுத் தேயிலை நாள்.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in