

மதுரை: மதுரையில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமான நுங்கு விற்கும் இளைஞர் தனது வாடிக்கையாளர்களை கவர கூகுள் பே வசதி ஏற்படுத்தி அசத்தி வருகிறார்.
மதுரையில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அவ்வப்போது, தலைகாட்டும் கோடை மழை வெயிலின் உக்கிரத்தை ஓரளவுக்கு தணிந்து, மக்களை குளிர்விக்கிறது. கோடை வெயிலின் உக்கிரமாக கருத்தப்படும் அக்னி நட்சத்திர வெயில் தொடங்கினாலும், முதல் நாளே சில இடங்களில் பெய்த லேசான மழை மக்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. இருப்பினும், இன்று பகலில் அக்னி வெயிலின் உக்கிரம் வெளிக்காட்ட தொடங்கியது.
வாட்டி வதைக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கருப்புச்சாறு, ஜூஸ் உள்ளிட்ட குளிர் பானங்களை வாங்கி அருந்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழலால் ஜூஸ், கருப்புச்சாறு, குளிர்பானம் விற்கும் கடைகளில் மக்கள் அதிகமாக கூடுகின்றனர்.
அடிக்கும் வெயிலுக்கு என்னதான் குளிர்பானங்களை வாங்கி குடித்தாலும், இயற்கைப் பானங்களான இளநீர், நுங்குகளை வாங்கி சாப்பிடுவதையே மக்கள், வாகன ஓட்டிகள், பெண்கள் விரும்புகின்றனர். மதுரை தெப்பக்குளம் மேம்பாலம், ஏவி மேம்பாலம், நத்தம், திண்டுக்கல், அழகர்கோயில் ரோடுகள் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தற்காலிக நுங்கு கடைகள் அதிகரித்துள்ளன.
விற்குமிடங்களில் வாங்கி சாப்பிடுவதுடன் குடும்பத்தினருக்கும் நுங்கு கண்களை சிலர் வாங்கிச் செல்கின்றனர். நுங்கு விற்பனை அதிகரித்த நிலையில், மதுரை அழகர்கோயில் ரோட்டில் புதூர் பகுதியில் வீரணன் (24) என்ற இளைஞர் தனது வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவரும் விதமாக டிஜிட்டல் மூலம் பணம் பெறுதல் அதாவது, 'கூகுள் பே' பயன்படுத்தி நுங்கு விற்பனையில் அசத்தி வருகிறார்.
அழகர்கோயில் பகுதியைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது, ''சுட்டெரிக்கும் வெயிலுக்கு பிற குளிர்பானங்களைவிட இளநீர், நுங்கு வகை இயற்கையானது. வெயில் நேரத்தில் இதை மக்கள் சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். இது உடலிலுள்ள சூட்டை விரைந்து தணிப்பதோடு உடலுக்கும் இதமாக இருக்கும் என்றாலும், இளநீரைவிட நுங்கு எவ்வித கலப்பிடமும் இன்றி இயற்கையானது. இவ்வாண்டு நுங்கு விளைச்சலும் ஓரளவுக்கு தான் உள்ளது. ஒருநாள் விட்டு, ஒரு நாள் நுங்கு விற்பனை செய்கிறேன்.
நானே பனை மரத்தில் ஏறி பறித்து, இரு வாகனத்தில் கொண்டு வந்து நேரடியாக விற்கிறேன். ஒரு நாளில் சுமார் ரூ.1500 முதல் 2,000 வரையிலும் விற்பேன். நான்கு நுங்கு கண்கள் (ஒரு நுங்கு) ரூ.20-க்கு விற்கிறேன்.
கார்களில் வந்தெல்லாம் நுங்கு வாங்கிச் செல்கின்றனர். அப்போது, சிலர் பணம் கொண்டு வரவில்லை கூகுள் பே, பேடிஎம், கார்டு மிஷன் உள்ளதா என கேட்கின்றனர். இது போன்ற வாடிக்கையாளர்களை தக்க வைக்கவே 'கூகுள்பே' மூலம் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி விற்கிறேன். சிலர் இதை வரவேற்றுள்ளனர். கோடை சீசனில் மட்டும் நுங்கு விற்பேன். பிற நாட்களில் செங்கல் சூளை, விவசாய வேலைக்கு சென்றுவிடுவேன்'' என்றார்.