

2022... இந்த ஆண்டு கோடை காலத்தில் இதுவரை எதிர்பார்க்காத அளவு வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதால் வெப்பவாத நோயில் இருந்து பாதுகாக்க அனைத்து வழிமுறைகளை எடுத்த வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இயற்கை முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டு சரியான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை பின்பற்றினால் வெப்ப நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
33 டிகிரி செல்சியல்: நாடு முழுவதும் கோடை வெப்பம் தீவிரமாகியுள்ளது. பல இடங்களில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த பிரப்ரவரி மாதம் முதலே நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து கொண்டேதான் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் மார்ச் மாதம் பதிவாகியுள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
இது மார்ச் மாதத்தின் சராசரி வெப்ப நிலையை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இந்தியாவில் 1901 ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த 2010ஆம் ஆண்டில் 33 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக கடந்த மார்ச் மாதம் தான் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்ப நோய்கள்
சூரியனிலிருந்து வரும் வெப்பம் அதிகரிக்க நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கும். இதன் காரணமாக மூளையின் 'ஹைப்போதலாமஸ்' பகுதி, நமக்கு வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து உடலின் இயல்புக்கு மீறிய வெப்பத்தை வெளியேற்றும். இதன் காரணமாக வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சை தொற்று, நீர்க்கடுப்பு எனப் பல வெப்ப நோய்கள் ஏற்படுகின்றன.
உடலின் இயல்பு வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். கோடை காலத்தில் உடலின் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் தாண்டுவதால் ஏற்படும் உடல் தளர்ச்சி உடல் களைப்பு , தண்ணீர்த் தாகம் அதிகரிப்பு , தலைவலி, வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இந்த வகை வெப்ப மயக்கத்தின் காரணமாக சிறுநீர் கடுப்பு , சிறுநீரகக் கல் , வயிற்றுப்போக்கு , அம்மை நோய்கள் , தோல் நோய்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
என்ன செய்ய வேண்டும்?
வெப்ப நோய்களை தவிர்க்க கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்ப்பதுடன் பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், உடலில் நீர் சமநிலையை தக்க வைக்கும் வண்ணம் அதிக அளவு நீர் பருகுதல் , நீர்ச்சத்துள்ள பழங்களை உண்ணுதல் ஆகியவற்றையும் உணவுக் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதைத் தவிர்க்க வேண்டும்?
இந்தக் கோடை காலத்தில் பலர் செயற்கை குளிர்பானங்கள் அருந்துவார்கள். ஆனால், இதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும், மோர், தயிர், பழங்கள், எளிய முறையில் வீட்டில் செய்யக் கூடிய எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக காபி, தேநீர் அருந்துவது, எண்ணெயில் பொரிக்கப்பட்ட வறுக்கப்பட்ட உணவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
கத்திரி வெயில் துவங்குவதற்கு முன்பே சுட்டெரிக்கும் கோடை வெயில் தாக்கத்தை எதிர்கொள்ள மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றினால் கோடை வெப்ப நோய்களில் இருந்து தப்பலாம் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.