

உதகை: உதகையில் மலர்க் கண்காட்சிக்கான ஆயத்தப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பூங்காக்களில் வைக்கப்பட்டுள்ள மலர்த்தொட்டிகளில் பல வண்ண பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகையில் நடைபெறும் மலர்க் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இந்த ஆண்டு 124-வது மலர்க் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்காக 275 வகையான விதைகள்ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு,மலர்ச் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், மலர்க் கண்காட்சி மாடம், கண்ணாடி மாளிகையில் 35 ஆயிரம் வண்ண மலர்த் தொட்டிகளில் செடிகள் நடவு செய்யப்பட்டு, தண்ணீர் பாய்ச்சி பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, "மலர்க் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. கண்காட்சி நடைபெறும் சில நாட்களுக்கு முன்பாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்கள் பூத்துவிடும். சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் அலங்காரம் காட்சிப்படுத்தப்படும். தற்போது, இந்த தொட்டிகளில் பல வண்ண பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இன்னும் சில தினங்களில் இந்த மலர்த் தொட்டிகள், காட்சி மாடத்தில் அடுக்கப்பட்டு சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப்படும்" என்றனர்.