

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று உடல் உறுப்பு தானம் செய்த ஆட்டோ ஓட்டுநர்கள்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் 150 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்து அடையாள அட்டையை பெற்றனர்.
செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக் கல்லூரியில் 1970 முதல் 2020 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, ராஜேஸ்வரி வேதாச்சலம் கல்லூரி கோல்டன் ஜூப்ளி அலுமினி அசோசியேஷனை நடத்தி வருகின்றனர்.
இச்சங்கம் கல்லூரிக்கும், அப்பகுதி மக்களுக்கும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி “செங்கை மெகா மாரத்தான்” போட்டியை நேற்று நடத்தியது.
இதனை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பிரியா பசுபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி செங்கை எஸ்பி அலுவலகம் அருகிலுள்ள மைதானத்தில் நிறைவடைந்தது.
இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இறுதியாக, வெற்றி பெற்றவர்களுக்கும், அதிக அளவிலான மாணவர்களை ஆர்வத்துடன் கலந்து கொள்ள செய்த பள்ளி நிர்வாகத்திற்கு நினைவு பரிசுகளும், கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடல் உறுப்பு தானத்திற்கு முதல்முறையாக வித்திட்ட செங்கையை சேர்ந்த மருத்துவர் அசோகன் கவுரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 150 ஆட்டோ ஓட்டுநர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்து அடையாள அட்டையை பெற்றுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த செயலை அனைவரும் பாராட்டினர். இதேபோல், பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.
நிகழ்ச்சியில், செயின்ட் கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பியூலா சுகுணசீலி மானுவல், செங்கல் பட்டு நகராட்சி தலைவர் தேன்மொழி, துணை காவல் கண்காணிப்பாளர் எஸ். கங்காதரன், முன்னாள் கல்லூரி முதல்வர் முனைவர் பி.கே. கில்லிவளவன், வணிகர் சங்கம் தலைவர் எஸ். உத்திரகுமார், ராஜேஸ்வரி வேதாச்சலம் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் லட்சுமி நம்பியார், ஜே. ஜான்சன், ஏ. பாஸ்கரன் மற்றும் மருத்துவர்கள், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.