

சென்னை: வீட்டுக்குள் இழுத்துச் சென்று பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை தி.நகரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் நந்தனத்தில் உள்ள சித்தப்பா வீட்டுக்கு சென்று விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது நந்தனத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டன் (25) என்பவர் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியின் கையைப் பிடித்து, தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்று காதலிப்பதாக கூறியதுடன், 12-ம் வகுப்பு முடித்தவுடன் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.
சிறுமி அழவே, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குத்தான் அசிங்கம். அதையும் மீறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமியை வெளியே அனுப்பியுள்ளார். செய்வது அறியாது தவித்த சிறுமி, வீடு திரும்பியவுடன் நடந்த சம்பவம் தொடர்பாக தாயாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பாக தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அவரைத் தேடி வருகின்றனர்.