Published : 03 Jun 2025 08:43 PM
Last Updated : 03 Jun 2025 08:43 PM
கோவை: கோவை மாவட்ட நர்வாகம், பள்ளி கல்வித் துறை, கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025 ‘கொடிசியா’ கண்காட்சி வளாகத்தில் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடக்கிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 3) மாலை நடந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025-க்கான இலச்சினையை வெளியிட்டார். கோயம்புத்தூர் புத்தக திருவிழா தலைவர் ராஜேஷ், துணைத் தலைவர் முத்துக்குமார், ‘கொடிசியா’ தலைவர் கார்த்திகேயன், கவுரவ செயலாளர் யுவராஜ், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: “மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலகத்துறை, கொடிசியா தொழில் அமைப்பு இணைந்து கோயமுத்தூர் புத்தக திருவிழா-2025 நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு புத்தக திருவிழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. 74,000-க்கும் மேற்பட்ட மக்கள் பார்வையிட்டனர். இந்த ஆண்டு கோயம்புத்தூர் புத்தக திருவிழா-2025, வரும் ஜூலை 18-ம் தேதி முதல் ஜூலை 27-ம் தேதி வரை கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்தில் நடக்கிறது.
புத்தகத் திருவிழாவில் 280-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்படவுள்ளன. புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகளும், எழுத்தாளர்களும், கலைஞர்களும், பிரபல தலைவர்களும் கலந்து கொள்ளும் கலை, இலக்கிய நிகழ்வுகள் தினமும் கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளன.
மாணவ, மாணவிகள் பங்கு பெறும் இலக்கிய நிகழ்வுகள், கவியரங்குகள், கதை சொல்லும் நிகழ்வுகள், பேச்சுப்போட்டிகள், சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவை நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிக மாணவ மாணவிகள் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அவிநாசி சாலையிலிருந்து கொடிசியா செல்வதற்கு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட உள்ளன” என்று ஆட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT