

புதுடெல்லி: பிரிட்டன் காட் டேலண்ட் - 2025 (BGT) ரியாலிட்டி ஷோவின் ஃபைனலில் மூன்றாம் இடம் பிடித்தார் இந்தியாவின் அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 வயது சிறுமியான பினிதா சேத்ரி. அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச அளவில் பரவலாக கவனம் பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிரிட்டன் காட் டேலண்ட். இதில் பினிதா சேத்ரி மூன்றாம் இடம் பிடித்தது குறித்து அறிவிக்கப்பட்ட வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. அவருக்கு பார்வையாளர்கள் வாழ்த்துகளை தெரிவிக்க கரம் கூப்பி நன்றி தெரிவித்தார்.
‘நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். இது சிறந்த அனுபவமாக இருந்தது’ என பினிதா தெரிவித்தார். இதில் முதல் பரிசை மேஜிக் கலைஞர் ஹாரி மோல்டிங் வென்றார். இரண்டாம் இடத்தை நடனக்குழு ஒன்று வென்றது.
அசாம் மாநிலத்தின் போகஜானைச் சேர்ந்தவர் பினிதா. அவரது அப்பா அமர் சேத்ரி, பண்ணை தொழில் செய்து வருகிறார். அனைத்து அசாம் கூர்க்கா மாணவர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராக அவர் உள்ளார். தனது மகளின் நடன திறமைக்கு அவர் ஊக்கம் கொடுத்து வந்துள்ளார். அதற்காக குவாஹாட்டி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார். அங்கிருந்து தொடங்கிய பினிதாவின் பயணம் பிஜிடி ரியாலிட்டி ஷோவின் இறுதி வரை வந்துள்ளது. இந்திய அளவில் பிஜிடி ரியாலிட்டி ஷோவின் இறுதிக்கு முன்னேறியவர் என்ற அங்கீகாரத்தை அவர் பெற்றுள்ளார்.
“பிஜிடி இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த நமது மாநிலத்தின் பினிதா சேத்ரிக்கு வாழ்த்துக்கள். அவரது நடன திறமை பிரம்மபுத்திரா முதல் தேம்ஸ் வரை பார்வையாளர்களை ஈர்த்து, நம் எல்லோரையும் பெருமை கொள்ள செய்துள்ளது” என அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார். >>வீடியோ லிங்க்