

மதுரை: மதுரையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே இடத்தில் வசித்த முன்னாள் காவல் துறையினர், அவர்களது குடும்பத்தினர் சந்திப்பு நிகழ்ச்சி மதுரை அருகே புதன்கிழமை நடந்தது. இதில் பங்கேற்றவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
மதுரை, ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் காவலர்களுக்கென 60 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை ரிசர்வ் லைன் ஆயுதப்படை மைதான குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்தனர். பல்வேறு இடங்களில் பணிபுரிந்தாலும் தாங்கள் வசிப்பிடமான ஏஆர் லைன் பகுதியில் அனைவரும் ஒரே பகுதியில் வசித்ததால் ஒருவருக்கொருவர் குடும்ப உறுப்பினர்கள் போன்று பழகி நட்பை நீடித்து வந்துள்ளனர்.
குடும்பத் தலைவர்கள் சிலர் இறந்தபோதிலும் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் தற்போதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் காவல் துறையில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், 60 ஆண்டுகளாக ஒரே பகுதியில் வசித்த போது, பழகி தொடரும் நட்பை நினைவூட்டும் வகையில் ‘மதுரை ஏஆர் லைன் உடன்பிறப்புகள், குடும்ப உறவுகள்’ என்ற சந்திப்பு நிகழ்வு கள்ளந்திரி பகுதியில் தனியார் தோப்பில் நடந்தது.
மதுரை ரிசர்வ் லைன் குடியிருப்பில் வசித்த 100 குடும்பங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பணிபுரியும் காவலர் முதல் துணை ஆணையர்கள் வரையிலும் பங்கேற்றனர். இவர்கள் தங்களது பழைய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு குடும்பத் தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களின் மகன், மகள், பேரன், பேத்திகளை அறிமுகம் செய்தனர்.
தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கான பல்வேறு குடும்ப விளையாட்டுப் போட்டிகளும் நடந்தன. மேலும், மருதாணி வைப்பது போன்ற ஒருவருக்கொருவர் தங்களது நட்பை புதுப்பித்தனர். குரூப் புகைப்படங்களும் எடுத்தனர். இயற்கை எய்திய முன்னாள் காவல் துறையினர், குடும்பத்தினரின் புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அனைவருக்கும் அசைவ விருந்து அளிக்கப்பட்டது. இச்சந்திப்பு அனைவருவரின் மத்தியிலும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியது என பங்கேற்ற முன்னாள், இன்னாள் காவல் துறையினர் தெரிவித்தனர்.