

மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தன்னை பாராட்டியதை விவசாயிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன் என கொடைக்கானல் மலைப்பகுதியில் லிச்சி பழத்தை விளைவித்து சாதனை படைத்த விவசாயி வீரஅரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
லிச்சி பழம் (விளச்சி) சீனா, தைவான், வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. லிச்சி மரங்கள் வெப்ப மண்டல நாடுகளில் செழித்து வளரும். சுவையான வெண்மை நிற சதைப்பகுதியையும், பூ போன்ற நறுமணத்தையும் கொண்ட இந்த பழத்தை உலகின் பல்வேறு நாடுகளில் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை பிஹார் மாநிலத்தில் முசாஃபர்பூர் பகுதியில் லிச்சிப் பழங்கள் அதிகமாக பயிரிடப்படுகின்றன. வெப்ப மண்டல பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய இந்த லிச்சியை, கொடைக்கானல் காமனூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரஅரசு (67) விளைவித்து சாதனை படைத்துள்ளார். ‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காய்கறிகள், பழங்கள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகின்றன.
அவை வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படு கின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் லிச்சி பழம் விளைவிப்பதற்கான சீதோஷ்ண நிலை இல்லை. இருந்தாலும் சோதனை முறையில் நடவு செய்து, 7 ஆண்டுகளுக்கு பிறகு அதில் வீரஅரசு வெற்றி பெற்றிருக்கிறார். இதற்காக, அவர் பிஹாரில் உள்ள லிச்சி தேசிய ஆராய்ச்சி நிலையம் சென்று, அங்கிருந்து 300 லிச்சி மரக்கன்றுகளை வாங்கி வந்து, கொடைக்கானல் அருகே கானல்காடு பகுதியில் உள்ள தனது காபி தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிட்டுள்ளார்.
மொத்தம் 300 லிச்சி மரக்கன்றுகளை, 7 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்துள்ளார். அதில், தற்போது 200 மரங்கள் வரை மகசூல் தரத் தொடங்கியுள்ளன. லிச்சி சாகுபடி சோதனையில் தான் சாதித்த மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு, சமீபத்தில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்த பாராட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறிய தாவது: பாரம்பரியமான விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் நான். இளங்கலை பட்டம் படித்துள்ளேன். கடந்த 40 ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். முதன்மை பயிராக காபி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். ஊடுபயிராக அவகேடோ, பேஷன் ஃப்ரூட், ஆப்பிள், வியட்நாம் பலா மரக்கன்றுகள் நடவு செய்துள்ளேன். இந்த வரிசையில் சோதனை முயற்சியில் லிச்சி மரக்கன்றுகளை நடவு செய்தேன். 7 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கான பலன் கிடைத்துள்ளது.
தற்போது 60 கிலோ வரை லிச்சி பழங்களை அறுவடை செய்துள்ளேன். மே, ஜூன், ஜூலை மாதம் தான் லிச்சியின் சீசன் காலம். ஒரு மரத்தில் குறைந்தது 500 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நன்கு வளர்ந்த லிச்சி மரம், புளியமரம் போல் தோற்றமளிக்கும். லிச்சிப்பூ தேனுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம். லிச்சி மரக்கன்று அருகில் தேன் பெட்டிகளை வைத்து விட்டால் லிச்சிப்பூவில் இருந்து தேனீக்கள் தேனை சேகரிக்கும். அந்த தேன் மூலம் விவசாயிகளுக்கு தனி வருவாய் கிடைக்கும். நம் நாட்டின் பிரதமர் என்னுடைய பெயரை கூறுவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை.
இப்போதும் பிரமிப்பாக இருக்கிறது. பிரதமர் மோடியிடம் இருந்து கிடைத்த பாராட்டை விவசாயிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன். ஒரு விவசாயிக்கான முழு பலனை அடைந்து விட்டதாக நினைக்கிறேன். மலைவாழைக்கு புவிசார் குறியீடு பெறும் முயற்சி மேற்கொண்டு, அதிலும் வெற்றி பெற்றுள்ளேன். அதேபோல், அதிகளவு நாக்பூர் ஆரஞ்சு உற்பத்தி செய்த வகையிலும் விருது பெற்றுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.