புது மாப்பிள்ளைக்கு 470 வகை உணவுடன் விருந்து - இது புதுச்சேரி ஏனாம் ஸ்பெஷல்

புதுச்சேரி ஏனாம் பகுதியில் மாப்பிள்ளைக்கு மணமகள் வீட்டார் வைத்த 470 உணவு வகைகளுடன் கூடிய விருந்து.
புதுச்சேரி ஏனாம் பகுதியில் மாப்பிள்ளைக்கு மணமகள் வீட்டார் வைத்த 470 உணவு வகைகளுடன் கூடிய விருந்து.
Updated on
2 min read

புதுச்சேரி: தெலங்கானா, ஆந்திரப் பகுதியில் பொங்கல் பண்டிகை ‘மகரசங்கராந்தி’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம் ஆந்திரத்தையொட்டி அமைந்துள்ளது. இங்கும் மகர சங்கராந்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, புதுச்சேரி ஏனாம் பகுதியில் புது மாப்பிளை ஒருவருக்கு மணமகள் வீட்டில் 470 வகை உணவு வகைகளுடன் விருந்து அளித்து நேற்று மதியம் உபசரித்தனர்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது புதிதாக திருமணமான தம்பதியை மணமகள் வீட்டுக்கு அழைத்து, புது மாப்பிள்ளைக்கு விருந்து அளித்து கவுரவிப்பது வழக்கம். பொங்கலுக்கு மணமகன் வீட்டுக்கே கரும்பு, வாழை, காய்கறிகள், பொங்கல் படி சீர் வகைகளை எடுத்துச் சென்று கொடுத்து அன்பு பாராட்டுவது வழக்கம்.

அதேபோல், புதுச்சேரி பிராந்தியமான ஆந்திரம் அருகேயுள்ள ஏனாமில் மகர சங்கராந்திக்கு புதிதாக திருமணம் புரிந்த மணமக்களை அழைத்து, மாப்பிள் ளையை கவுரவிப்பது உண்டு. அதன் ஒரு பகுதியாக இந்த கோலாகல விருந்து நடந்துள்ளது. புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்தவர் சத்ய பாஸ்கர் வெங்கடேஸ்வர். இவர்,அப்பகுதியில் வர்த்தக சங்க செயல் தலைவராகவுள்ளார். இவரது மகள் டாக்டர் ஹரின்யாவுக்கும் விஜயவாடாவைச் சேர்ந்த ஷாகேத்துக்கும் அண் மையில் திருமணமானது.

புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் சங்கராந்திக்காக மணமகள் வீட்டுக்கு இருவரும் அழைக்கப்பட்டிருந்தனர். வீட்டுக்கு வந்த மாப்பிள்ளையை ஆச்சரியப்படுத்தும் வகையில் 470 வகையான உணவுகளை விருந்தாக படைத்து ஆச்சரியப் படுத்தினர். இதில் 20 வகையான அரிசி உணவுகள், 30 வகை புதிய ஊறுகாய், 20 பொடிகள், 40 வகை காய்கறிகள், 20 வகையான பழங்கள், 50-க்கும் மேற்பட்ட இனிப்புகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் சில விசேஷ உணவு வகைகளையும் இடம் பெறச் செய்து புதுமாப்பிள்ளையை திக்குமுக்காடச் செய்து விட்டனர். இதுதொடர்பாக மணமகள் வீட்டார் தரப்பில் கூறுகையில், “நாங்கள் நான்கு சகோதரர்கள் கூட்டுக் குடும்பமாக உள்ளோம். சங்கராந்திக்கு எங்கள் வழக்கம் போல் மாப்பிள்ளையை அழைத்து கவரவித்தோம்.

நாங்கள் சைவம் என்பதால் இந்த சுவைமிகுந்த 470 உணவு வகைகளும் சைவத்திலேயே செய்திருந்தோம். மாப்பிள்ளை வரவை விழாவாக கொண்டாடினோம். மாப்பிள்ளையுடன் உறவினர் அனைவரும் வந்திருந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச் சியை ஏற்படுத்தியது" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in