

ஹைதராபாத்: சவுதி அரேபியாவில் ஹவுஸ் கீப்பிங் பணி என சொல்லி அழைத்து செல்லப்பட்ட தெலங்கானாவை சேர்ந்த நாம்தேவ் ரத்தோத் என்ற புலம்பெயர் தொழிலாளி, அங்கு பாலைவனத்தில் கடுமையான வெப்ப மத்தியில் ஒட்டகம் மேய்த்து வந்துள்ளார். இந்திய தூதரகம், தெலங்கானா அரசு, உள்ளூர் சமூக ஆர்வலர்களின் துணையோடு அவர் மீட்கப்பட்டு, தற்போது நாடு திரும்பியுள்ளார்.
51 வயதான நாம்தேவ் ரத்தோத், கடந்த ஆகஸ்ட் மாதம் சவுதியில் தனது நிலை குறித்து தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் ருவ்வி கிராமத்தில் உள்ள மனைவி லட்சுமிக்கு செல்ஃபி வீடியோ அனுப்பி இருந்தார். அதில் பாலைவனத்தில், மிகவும் கடுமையான வெப்ப சூழலுக்கு மத்தியில் தான் எதிர்கொண்டு வரும் சொல்ல முடியாத துயரினை பகிர்ந்திருந்தார்.
மேலும், தனக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். குவைத்தில் வீட்டு வேலை என சொல்லி தன்னை அழைத்து சென்று, ஒட்டகம் மேய்க்க தனது முதலாளி பணித்ததாக அந்த வீடியோவில் நாம்தேவ் ரத்தோத் சொல்லி இருந்தார்.
இந்நிலையில், அவரது மனைவி லட்சுமி, தனது கணவரை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும் என்ற விருப்பத்தில் தெலங்கானா அரசு மற்றும் மத்திய வெளியுறவுத் துறையின் உதவியை நாடி இருந்தார். அதன்படி மாநில மற்றும் தூதரகத்தின் உதவியுடன் நேற்று (அக்.1) ரியாத்தில் இருந்து ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் நாம்தேவ் நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவரது மனைவி மற்றும் மகன் அவரை வரவேற்றனர்.
தன்னை மீட்டு நாடு திரும்ப உதவிய குவைத் மற்றும் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, சவுதி அரேபியா தெலுங்கு சங்கம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் ஆர்வலர் பீம் ரெட்டி ஆகியோருக்கு நாம்தேவ் நன்றி தெரிவித்தார். அதே நேரத்தில் மறுவாழ்வுக்கான நிதி உதவி வேண்டுமென அவர் அரசிடம் மனு கொடுத்துள்ளார்.