

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாடி வீட்டை லிஃப்ட் செய்து தரை மட்டத்தில் இருந்து 5 அடிக்கு உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இது, அந்தப் பகுதியில் கவனம் ஈர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
கிருஷ்ணகிரி ராஜாஜிநகர் முதல் கிராஸ் தெருவைச் சேர்ந்த ராணுவத்தின் முன்னாள் கேப்டன் முனிரத்தினம் (69). இவர் கடந்த 1987-ம் ஆண்டு 2,000 சதுர அடியில் தரை தளத்தில் வீடு கட்டினார். பின்னர் 2012-ம் ஆண்டு 1,650 சதுர அடிக்கு முதல் தளத்திலும், 1,000 சதுர அடியில் 3-வது தளத்திலும் வீட்டு கட்டினார். இவர் வீடு தரை தளத்தில் இருந்து 3 அடி பள்ளத்தில் அமைந்துள்ளதால், மழைக் காலங்களில், மழை நீர் சாக்கடைக் கழிவுநீருடன் கலந்து வீட்டிற்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. மேலும் கழிப்பறைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
இதனால் தனது வீட்டின் உயரத்தை, தற்போதைய நில மட்டத்தில் இருந்து, மேலும் 5 அடிக்கு உயர்த்த வேண்டும் என்று சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றை அணுகினார். அந்த நிறுவனத்தினர், முனிரத்தினத்தின் வீட்டை ஆய்வு செய்துவிட்டு, கடந்த 17-ம் தேதி முதல் வீட்டை உயர்த்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியில், ஒன்றரை டன் எடையைத் தாங்கக் கூடிய 180 ஜாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டின் நில மட்ட உயரத்தை அதிகரிப்பது குறித்து வீட்டின் உரிமையாளர் முனிரத்தினம் கூறுகையில், ''தரையில் இருந்து ஒரு சதுர அடியை உயர்த்த கட்டணமாக ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, மொத்தம் ரூ.9 லட்சம் வரை செலவாகிறது. வீட்டின் உயரம் ஒன்றரை அடி மட்டுமே உயர்த்திய பின்னர் ஒரு வாரத்துக்கு மற்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பணி 45 முதல் 60 நாட்களுக்குள் முடியும் என எதிர்பார்க்கிறேன். இதற்கு முன்பு ஓசூரில் உள்ள ஒரு கோயிலை மட்டும் இடமாற்றம் செய்துள்ளனர். மாவட்டத்திலேயே வீட்டை லிஃப்ட் செய்வது இதுவே முதல் முறையாக இருக்கும்'' என்றார். லிஃப்ட் செய்துவீட்டினை தரையில் இருந்து 5 அடிக்கு உயர்த்தும் பணியை, அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.