

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே விவசாயி ஒருவர் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காக ரூ.30 லட்சத்தில் நீச்சல் குளம் கட்டி பயிற்சி அளித்து வருகிறார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கிழவயலைச் சேர்ந்தவர் சிவானந்தம் (48). இவர் 7 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவரது காளைகள் தென்மாவட்ட ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளன.
இந்நிலையில், கண்மாய், குளங்களில் தண்ணீர் இல்லாத காலங்களில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்க முடியாமல் சிரமப்பட்டார். எனவே, தனது காளைகளுக்காக தோட்டத்தில் 6,400 சதுர அடியில் ரூ.30 லட்சத்தில் நீச்சல் குளம் அமைத்துள்ளார். இந்த நீச்சல் குளம் 13 அடி ஆழம், 86,000 கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. தினமும் காலையில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்து வருகிறார்.
இதுகுறித்து விவசாயி சிவானந்தம் கூறியதாவது: துருவன், ஹரிஷ் ஆகிய 2 காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்கிறோம். இதில் துருவன் களத்தில் இறங்கினாலே மாடுபிடி வீரர்கள் அச்சப்படுவர். பெயரும் புகழும், பரிசுகளையும் பெற்றுத் தந்த `துருவன்’ காளைக்காகவே இந்த நீச்சல் குளத்தை கட்டினேன்.
காளைகளுக்கு சத்துள்ள உணவுகளை கொடுப்பது மட்டும் போதாது. அவற்றுக்கு கடுமையான பயிற்சியும் அவசியம். அதில் நீச்சல் பயிற்சி தினமும் அளிக்க வேண்டும். அப்போதுதான் காளைகள் பிடிபடாமல் வெற்றி பெறமுடியும். எங்கள் பகுதியில் போதிய மழை பெய்யாது. இதனால் நீர் நிலைகளில் காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்க சிரமப்பட்டேன். இதற்காக சிரமப்பட்டு நீச்சல் குளத்தை கட்டினேன். தற்போது காளைகளுக்கு தினமும் விடாமல் நீச்சல் பயிற்சி கொடுக்கிறேன். எனக்கு இந்த காளைகள் புகழை தேடி தந்துள்ளன. இதனால் பிள்ளை போல் வளர்த்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.