

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷிகர் தவான், இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது மகனுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதன் மூலம் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்திருந்தார். இது நெட்டிசன்களை நெகிழ செய்துள்ளது.
தவான் மற்றும் அவரது மனைவி ஆஷா முகர்ஜியை கடந்த அக்டோபர் மாதம் சட்டப்படி பிரிந்தார். இருந்தாலும் தனது மகனை ஸோராவரை (Zoravar) சந்திக்கவும், அவருடன் வீடியோ சாட் செய்யவும் உரிமை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மிகவும் உருக்கமான இந்த பதிவை தவான் பதிவிட்டுள்ளார்.
“உன்னை நேரில் சந்தித்து ஓராண்டு ஆகிவிட்டது. இதோ வீடியோ காலில் கூட உன்னிடம் பேசி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. நான் உன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். ஆனால், அத்தனை வழிகளிலும் பிளாக் செய்யப்பட்டு உள்ளேன். அதனால் கடைசியாக உன்னுடன் பேசிய படத்தை பகிர்கிறேன். ஹேப்பி பர்த் டே.
உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலும் கூட அதற்கான முயற்சியே இது. உன்னை எண்ணி பெருமை கொள்கிறேன். நீ சிறந்தவனாக வளர்ந்து வருகின்றாய் என அறிவேன். அப்பா, உன்னை மிஸ் செய்கிறேன். உன்னை அதிகம் நேசிக்கிறேன். கடவுளின் அருளால் உன்னை மீண்டும் சந்திப்பேன். அந்த நேரத்தில் நீ சிந்தும் உனது மாறா புன்னகை எப்படி இருக்கும் என தெரிகிறது. எல்லையுடன் கூடிய குறும்பு செய், அடக்கம், பரிவு, பொறுமை, ஈகை, வலிமை கொண்டிரு.
உன்னை சந்திக்கவில்லை என்றாலும் அப்பா தினசரி உனக்கு மெசேஜ் செய்து கொண்டுள்ளேன். நான் என்ன செய்து கொண்டு உள்ளேன் என்பதை அதில் பகிர்ந்துள்ளேன். அப்பா, உன்னை நேசிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
இது நெட்டிசன்களின் பார்வையை பெற, ‘சவாலான இந்த நேரத்தில் மன வலிமையுடன் இருங்கள்’, ‘வெகு விரைவில் உங்கள் மகனுடன் நீங்கள் மீண்டும் இணைவீர்கள்’ என தவானுக்கு நம்பிக்கை தந்துள்ளனர்.